சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் குடியிருப்பவர் கவிதா (19) (பெயர் மாற்றம்). இவர் கடந்த 14.3.23-ம் தேதி மதியம் பெசன்ட் நகர் அருணாச்சலபுரம் இரண்டாவது தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாறு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கவிதாவை வழிமறித்து பேசியிருக்கிறார். தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கவிதாவிடம் ரமேஷ் கூறியிருக்கிறார். அதற்கு கவிதா மறுப்பு தெரிவித்ததும் ஆத்திரமடைந்த ரமேஷ், கவிதாவை ஆபாசமாகப் பேசியதோடு, `நீ என்னைத் திருமணம் செய்துகொள்ளவில்லையென்றால் உன்னைக் கொலை செய்துவிடுவேன்’ என மிரட்டியிருக்கிறார். அதனால் அங்கிருந்து கவிதா தப்பிச் சென்றார்.

பின்னர் கவிதா, சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ரமேஷ் மீது புகாரளித்தார். அதன்பேரில் சாஸ்திரிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவுசெய்து ரமேஷிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், கவிதாவை ரமேஷ் மிரட்டியது தெரியவந்தது. அதனால் ரமேஷ் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சாஸ்திரி நகர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட ரமேஷ் மீது ஏற்கெனவே ஒரு கொலை முயற்சி வழக்கு, நான்கு அடிதடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷ், சிறையில் அடைக்கப்பட்டார்.