சென்னை, வண்டலூரைச் சேர்ந்தவர் பிரேமலதா. இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய கணவர் கோவிந்தசாமி, 2022-ம் ஆண்டில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். என்னுடைய ஒரே மகள் நவினா (29). அவர் பி.இ (இன்ஜினீயரிங்) படித்திருக்கிறார். என்னுடைய மகள் கீழ்ப்பாக்கத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அவருக்கு விஜயகாந்த் போஜன் என்பவருடன் காதல் ஏற்பட்டது. பின்னர் இரு வீட்டினரும் பேசி, 2021-ம் ஆண்டு மண்ணிவாக்கத்திலுள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்துவைத்தோம்.

என் மகளின் கணவர் விஜயகாந்த் போஜனுக்குச் சொந்த ஊர் தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, அம்மாபட்டி கிராமம். அவர், சென்னை கோடம்பாக்கத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். வண்டலூரிலிருந்து வேலைக்குச் செல்ல முடியவில்லை எனக் கூறி, என் மகள் நவினாவுடன் தனிக்குடித்தனம் செல்வதாக என்னிடம் கூறினார். பின்னர் ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ காலனியில் என் மகளும் மருமகனும் தங்கியிருந்தனர். நவினாவுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், என் மகள் என்னிடம் அடிக்கடி போன் செய்து விஜயகாந்த் போஜன், நகைகளை கேட்பதாகக் கூறினார். நகைகளைக் கொடுக்காததால் என் மகளை விஜயகாந்த் போஜன் அடித்ததோடு நகைகளைக் கொடுக்காவிட்டால், அம்மா வீட்டுக்குச் செல்லும்படி கூறியதோடு... விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிடுவதாகவும் மிரட்டியதாக நவினா என்னிடம் தெரிவித்தார்.
அதற்கு நான், `நீ அப்பா இல்லாத பொண்ணு, நீ வீட்டுக்கு வர வேண்டாம். நான் உன்னுடைய கணவரின் அப்பா, அம்மா, உறவினர்களிடம் பேசி பிரச்னைக்குத் தீர்வு காணலாம்’ என்று கூறி, என் மகளைச் சமாதானப்படுத்தினேன். இந்த நிலையில், 17.5.23-ம் தேதி என் மகளின் கணவர் விஜயகாந்த் போஜன் எனக்கு போன் செய்து, நவினா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். அதனால், நான் என் மகளின் வீட்டுக்கு வந்து பார்த்தேன். அங்கு அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. எனவே என் மகளின் இறப்பு குறித்து விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி, சட்டப்பிரிவு 174 (3) -ன் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறார். சம்பவ இடத்துக்குச் சென்று நவினாவின் சடலத்தை மீட்ட ஆதம்பாக்கம் போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நவினாவுக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆவதால் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் தலைமையில் விசாரணையும், ஆர்டி.ஓ விசாரணையும் நடந்துவருகிறது.

இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸார் நம்மிடம் பேசியபோது, ``நவினாவின் உயிரிழப்பு குறித்து அவரின் கணவர் விஜயகாந்த் போஜனிடம் விசாரித்துவருகிறோம். நவினாவின் செல்போனைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நவினாவும் விஜயகாந்தும் ஆரம்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள். தனிக்குடித்தனம் வந்த பிறகு விஜயகாந்த் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார். அதனால் மனைவியின் நகைகளைக் கேட்டு தொல்லை செய்ததாக நவினாவின் அம்மா பிரேமலதா புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் நவினாவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.