விருதுநகர் அருகே குடும்பச் சண்டையில், பெற்ற தாயே பிள்ளைகளைக் கழுத்தை நெரித்துக் கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்திருக்கிறது.
விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகேயுள்ள பி.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 37). கட்டட வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி பெத்தம்மாள் (35) இவர்களுக்கு கார்த்தியாயினி (7), பாண்டிச்செல்வி (2) என இரு மகள்கள். இந்த நிலையில், கணவன்-மனைவி இருவருக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்தக் குடும்பச் சண்டையில் கணவர் சரவணகுமாரின் மீது சந்தேகம் கொண்டு, பெத்தம்மாள் அடிக்கடி அவருடன் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம், கணவன்-மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் தலையிட்டு சரவணக்குமாரையும், பெத்தம்மாளையும் சமாதானப்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து நேற்று காலை வழக்கம்போல சரவணக்குமார் கட்டட வேலைக்காக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் தன்னுடைய இரு மகள்களுடன் தனியே இருந்த பெத்தம்மாள், கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவிரக்தியடைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்ததாகத் தெரிகிறது.
மேலும், தன்னுடைய மகள்களை யாரையும் நம்பி விடுவதற்கு பயந்து வீட்டின் முன்பக்க கதவை பூட்டிக்கொண்டு மகள்கள் இருவரையும் கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார். பின்னர் வீட்டின் அறையில் தூக்குப் போட்டு பெத்தம்மாள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த சரவணக்குமார், வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்திருக்கிறார்.
வெகுநேரம் தட்டிப்பார்த்தும், வீட்டின் கதவு திறக்கப்படாததால் பயந்துபோன அவர், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கிறார். அப்போது, மகள்கள் இருவரும் கழுத்து நெரித்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த நிலையில், பெத்தம்மாள் தூக்கில் தொங்கியபடி பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதிருக்கிறார். தொடர்ந்து துக்கம் தாங்காமல் அவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறார். அதற்குள் சரவணக்குமாரின் கதறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தூக்கில் தொங்கியவாறு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சரவணக்குமாரை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வீட்டில் பிணமாகக் கிடந்த பெத்தம்மாள், கார்த்தியாயினி, பாண்டிச்செல்வியின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.