சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரில், `நான் கடந்த 7.7.2022-ம் தேதி காவலர் செல்லதுரை என்பவர்மீது புகாரளித்தேன். அதன்பேரில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸார், என்னை விசாரணைக்காக நேரில் வரச் சொல்லியிருந்தார்கள். அதைத் தெரிந்துகொண்ட காவலர் செல்லதுரை என்னை வழிமறித்து அவர்மீது கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று எழுதிக்கொடுக்க வேண்டும் என மிரட்டினார்.

`அப்படிச் செய்யவில்லையென்றால், உன்னையும் உன் பிள்ளைகளையும் காலி செய்துவிடுவேன்' என மிரட்டினார். மேலும், `நாம் இருவரும் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்த நாள்களில் ஒன்றாக இருந்ததை போனில் வீடியோவாக எடுத்துவைத்திருக்கிறேன். அதை சமூக வலைதளங்களில் போட்டுவிடுவேன். உன் பிள்ளைகளின் வாட்ஸ்அப் நம்பருக்கும் அனுப்பிவைத்துவிடுவேன்' என்று மிரட்டினார். அதனால் வேறு வழியில்லாமல் புகார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். மேலும், விசாரணை அதிகாரியின் முன்பு ஆஜராகக் கூடாது என கட்டாயப்படுத்தியதால், கடந்த 28.11.2022-ம் தேதி நடந்த விசாரணைக்கு நான் ஆஜராகவில்லை. அத்துடன் பிரச்னை முடிந்துவிட்டது என நினைத்தேன். ஆனால் அந்த வீடியோவைக் காட்டி என்னிடமிருந்து அடிக்கடி பணம் பறித்துக்கொண்டார். இனிமேல் என்னிடம் கொடுக்கப் பணம் இல்லை. உயிர் மட்டும்தான் இருக்கிறது.
நான் தற்கொலை செய்துகொண்டால் என் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். கண்ணியம்மிக்க காவல்துறையில் பணிபுரியும் காவலரே என்னுடைய பெண்மைக்குக் களங்கம் ஏற்படுத்தியதால், நான் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். எனவே செல்லதுரையின் செல்போனைப் பறிமுதல் செய்து, நான் சம்பந்தப்பட்ட வீடியோவை அழித்துவிட்டு, செல்லதுரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து புகாரளித்த பெண்ணிடம் பேசினோம். ``எனக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் மூலம் காவலர் செல்லதுரை அறிமுகமானார். நானும் கணவரைப் பிரிந்து குழந்தைகளோடு வாழ்ந்துவந்தேன். அப்போது காவலர் செல்லதுரையும் தனக்கு திருமணமாகி விவகாரத்தாகிவிட்டது என்று கூறி என்னுடன் பழகினார்.

பின்னர் நாங்கள் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துவந்தோம். அப்போது திருமணம் செய்துகொள்ள அவரை வற்புறுத்தினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அடிக்கடி என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துவந்தார். கார் ஒன்றை வாங்க முன்பதிவுசெய்யக் கட்டாயப்படுத்தினார். அவருக்குப் பணம் அனுப்பியதற்கான ஆதாரமும், காரை முன்பதிவு செய்ததற்கான ஆதாரமும் என்னிடம் இருக்கின்றன. அவர் காவலராக இருப்பதால், போலீஸார் செல்லதுரைமீது நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது நாங்கள் இருவரும் தனிமையில் இருந்த வீடியோக்களை வெளியிட்டுவிடுவதாக செல்லதுரை மிரட்டிவருகிறார். அதற்கான ஆடியோ ஆதாரமும் என்னிடம் இருக்கிறது" என்றார்.
இது குறித்து காவலர் செல்லதுரையிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. அவர் பதிலளிக்கும் பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பிறகு பதிவிடத் தயாராக இருக்கிறோம்.
இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்த போலீஸார் உத்தரவிட்டிருக்கிறார்கள்.