அலசல்
Published:Updated:

“இவன இங்கேயே தீ வெச்சு எரிங்கடா...” - இளைஞரைக் கட்டிவைத்து தாக்கிய கும்பல்

தஞ்சைக் கொடூரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தஞ்சைக் கொடூரம்!

- தஞ்சைக் கொடூரம்!

இளைஞர் ஒருவரின் கண்களைத் துணியால் கட்டி, அவரின் கைகள் இரண்டையும் மரத்தோடு சேர்த்து இருவர் இறுகப் பிடித்துக்கொள்ள, எட்டு பேர்கொண்ட கும்பல் துளி மனிதத்தன்மையும் இல்லாமல் கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடூரத்தில் சாதிய வன்மமும் கலந்திருப்பது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியளிக்கிறது!

தஞ்சை மாவட்டம், பூண்டி மேலத்தெருவைச் சேர்ந்த 22 வயது பட்டியல் சமூக இளைஞர் ராகுல். குடும்பச் சூழ்நிலை காரணமாக அதே பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களிடம் கூலி வேலை செய்து வந்திருக்கிறார். சம்பவத்தில் கடும் தாக்குதலுக்கு ஆளான இவர், அடிபட்ட வலி ஒரு பக்கம், தன்னைத் தாக்கும் வீடியோ வெளியான அவமானம் மறுபக்கம் என வேதனை வாட்டி வதைக்க... விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரைச் சந்திக்கச் சென்றோம்.

“இவன இங்கேயே தீ வெச்சு எரிங்கடா...” - இளைஞரைக் கட்டிவைத்து தாக்கிய கும்பல்

உடல் முழுக்கக் காயங்களுடன் வலி தாங்க முடியாமல் முனகிக் கொண்டிருந்தார் ராகுல். அழுது அழுது அவரின் அம்மா வனஜாவின் கண்கள் வீங்கியிருந்தன. நாங்கள் வந்திருப்பதைச் சொல்லி ராகுலை அவரின் அம்மா எழுப்ப முயல, ‘‘என்னை அடிக்காதீங்க... அடிக்காதீங்க...’’ என பயத்தில் அலறினார். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அந்தச் சம்பவத்திலிருந்து இன்னும் அவர் வெளியே வரவில்லை என்பது புரிந்தது. அவரை ஆசுவாசப்படுத்தி மெல்ல பேச்சுக் கொடுத்தோம். பொலபொலவென கண்ணீர் கொட்ட நடந்த சம்பவங்களை விவரித்தார்...

‘‘மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ்வரன், விவேக் என்கிற விமல் ரெண்டு பேரும் அண்ணன் தம்பிங்க. ஆதிக்க சாதியைச் சேர்ந்த அவங்க, சொந்தமா ரெண்டு லாரி வெச்சிருக்காங்க. கோனூர் பகுதி வெண்ணாத்துல திருட்டுத்தனமா மணல் எடுத்து விக்கிறாங்க. இளவட்டப் பசங்க பத்து பேருக்கு மேல அவங்ககிட்ட வேலை செய்யுறாங்க. பயமே இல்லாம மணல் அள்ளணும்கிறதுக்காக சரக்கு, கஞ்சா, சாப்பாடுன்னு வாங்கிக் கொடுத்து எப்பவும் எல்லாரையும் போதையிலேயேவெச்சிருப்பாங்க. அதனால, வேலை செய்யற எல்லாரும் விக்னேஷ்வரன் என்ன சொன்னாலும் ஏன், எதுக்குனு கேட்காம செய்வாங்க.

ஒரு வருஷமா நான் விக்னேஷ்வரன்கிட்ட மணல் அள்ளுற கூலி வேலை செஞ்சேன். மூணு மாசமா கோனூர்லயே தங்கி வேலை பார்த்தேன். அப்ப, அந்த ஊரைச் சேர்ந்த எங்க சாதிப் பொண்ணு என்கிட்ட பாசமா பழகுச்சு. ஆடு மேய்க்க ஆத்துக்கு வரும்போது பேசிக்கிட்டி ருப்போம். விக்னேஷ்வரன்கிட்ட வேலை பார்த்த அந்தப் பொண்ணோட அண்ணனுக்கு நாங்க பேசிக்கிட்டிருக்கிறது பிடிக்காம, அவன்கிட்ட போய் சொல்லியிருக்கான். பொங்கல் விழா நடந்தப்போ அந்தப் பொண்ணு வேற ஒருத்தன் மேல மஞ்சத் தண்ணி ஊத்துறதுக்கு பதிலா, மாத்தி எம்மேல ஊத்திருச்சு. அதை அங்கே இருந்தவங்க விக்னேஷ்வரன்கிட்ட சொல்லிட்டாங்க.

“இவன இங்கேயே தீ வெச்சு எரிங்கடா...” - இளைஞரைக் கட்டிவைத்து தாக்கிய கும்பல்
“இவன இங்கேயே தீ வெச்சு எரிங்கடா...” - இளைஞரைக் கட்டிவைத்து தாக்கிய கும்பல்

சத்தியமா அந்தப் பொண்ணு என்னை வார்த்தைக்கு வார்த்தை `அண்ணே...’்னுதான் கூப்பிடும். நானும் தங்கச்சியா நெனச்சுதான் பேசிக்கிட்டிருந்தேன். என்கிட்ட நேரடியா கேட்டிருந்தா நான் விளக்கமா சொல்லியிருப்பேன். ஆனா, அவனுங்க மனசுலேயே வெச்சிருந்தது என் புத்திக்கு வெளங்காமப் போச்சு’’ என்று கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதவர், சற்று இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

‘‘எனக்கு நாலாயிரம் ரூபா சம்பள பாக்கி வர வேண்டியிருந்துச்சு. மணல் எடுக்குற இடத்துக்கு வந்த விக்னேஷ்வரன்கிட்ட, ‘அண்ணே... சம்பள பாக்கியைக் கொடுங்க’னு கேட்டேன். உடனே அவர் என் சாதியைச் சொல்லி திட்டி, ‘உன் சாதிக்காரனுக எல்லாரும் எனக்கு அடிமை. உனக்குத்தான் சாப்பாடு, சரக்கெல்லாம் வாங்கித் தர்றோம்ல... அப்புறம் எதுக்கு சம்பளம்?’னு கேட்டார். ‘அம்மா அரிசி வாங்கப் பணம் கேட்டுச்சு. கொடுக்கணும்’னு சொன்னதும், ‘என்னடா என்னையே எதுத்துப் பேசுற?’னு எல்லார் முன்னாலயும் என்னை அடிச்சார். எனக்கு அவமானமும் அழுகையுமா வர, அங்கேயிருந்து வீட்டுக்கு வந்துட்டேன்.

“இவன இங்கேயே தீ வெச்சு எரிங்கடா...” - இளைஞரைக் கட்டிவைத்து தாக்கிய கும்பல்

மறுநாள் என்னை கோனூருக்கு வரச் சொல்லவும் போனேன். விக்னேஷ்வரன், விமல், அய்யப்பன், லெட்சுமணன், பார்த்திபன், சரத்குமார், ராஜதுரை, சுபாஷ்னு எட்டு பேர் அங்கே இருந்தாங்க. போனதுமே, என்னை சுடுகாட்டுக்குக் கூட்டிட்டுப் போய், ‘ஏண்டா வீட்டுல இருந்த அம்பதாயிரம் ரூவா பணத்தை எடுத்தே?’னு கேட்டு அடிச்சாங்க. எனக்கு ஒண்ணும் புரியலை. ‘நான் எடுக்கலை’னு சொன்னதைக் கேட்காம அடிச்சுக்கிட்டே இருந்தாங்க. அப்புறம் ஊருக்குள்ள கூட்டிட்டுப் போய், ‘அந்தப் பொண்ணுகிட்ட இனிமே பேசுவியா?’னு கேட்டு அடிச்சாங்க. அதை அந்தப் பொண்ணு பாக்கணும்னு அங்கேவெச்சு அடிச்சாங்க. தெருவே வேடிக்கை பார்த்துச்சு. விக்னேஷ்வரன் மேல இருக்குற பயத்தால யாரும் எதுத்துக் கேட்கலை.

பிறகு, ஜீப்புல ஏத்தி மாரியம்மன் கோயில்ல இருக்குற விக்னேஷ்வரன் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அங்கே விக்னேஷ்வரனோட தம்பி விமலும் என்னைக் கன்னாபின்னானு அடிச்சான். அவங்க அப்பா, ‘ஏய் அடிக்காதடா...’னு சொன்னதுக்கு, ‘போய்யா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு’னு திட்டிட்டு, ‘இவன இங்கேயே தீ வெச்சு எரிங்கடா’னு சொல்லி என் தலையில பெட்ரோலை ஊத்தினான்.

அப்புறம், அவங்களோட தோப்புக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அங்கே வெச்சு துண்டால என் கண்ணைக் கட்டி, முட்டிபோட வெச்சுட்டு, கஞ்சா குடிச்சாங்க. அப்புறம், என்னை மரத்தோட சேர்த்துப் பிடிச்சுக்கிட்டு என் பின் பகுதியில மரக்கட்டையால கொடூரமா விக்னேஷ்வரன் அடிச்சான். ஒரு அடியிலேயே என் உசுரு போயிடுச்சு. `அண்ணே...’னு கெஞ்சினேன்; கையெடுத்துக் கும்பிட்டேன். எதையும் காதுல வாங்கலை. ஒருகட்டத்துல என்னைத் தலைகுப்புறத் தள்ளி, என் தலைமேல அய்யப்பன்கிறவன் உக்கார்ந் துக்க, விக்னேஷ்வரன் அடிச்சுக்கிட்டே இருந்தான். என்னால வலி தாங்க முடியாம அப்படியே மயங்கிட்டேன்.

விக்னேஷ்வரன்
விக்னேஷ்வரன்

கொஞ்சம் நேரம் கழிச்சு முழிச்சுப் பார்த்தேன். எல்லாரும் போதையில இருந்தாங்க. அப்பவும் அவங்க வெறி அடங்கலை. நடந்ததைச் சொல்றதுக்கு என் வாயே கூசுது. என்னை நிர்வாணப் படுத்தி அடிச்சு கொடுமைப்படுத்தினானுங்க. ‘உன் சாதிக்காரப் பயலுகளும் சேந்துதான் அடிக்கிறானுக. நீ பணத்தைத் திருடிட்டதா ஊர் முழுக்கச் சொல்லிட்டோம். உன்னைக் கொன்னாக்கூட ஏன்னு கேட்க ஒரு பய வர மாட்டான்’னு சொன்னானுங்க.

என்னை அடிக்கிற தகவல் தெரிஞ்சு எங்க வீட்ல அம்மாபேட்டை போலீஸுக்குத் தகவல் கொடுத்தாங்க. போலீஸ் வந்து என்னை அழைச்சுக்கிட்டு போய் வீட்ல விட்டாங்க. இவ்வளவு கொடுமையை செஞ்ச பிறகும், என்னை அடிச்சதை வீடியோ எடுத்து வெச்சு வாட்ஸ்அப்ல பரப்பியிருக்காங்க. அடிச்ச வலியைவிட இதைத்தான் என்னால தாங்க முடியலை’’ என்று அடக்க முடியாமல் அழுதார் ராகுல்.

விக்னேஷ்வரன் தரப்பில் பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், ‘‘மணல் மாஃபியாக்களாகச் செயல்பட்ட விக்னேஷ்வரன் தரப்பிலிருந்து மாதந்தோறும் போலீஸார் மாமூல் வாங்கிவந்திருக்கிறார்கள். அதனால்தான், உயிர்போகும் அளவுக்கு ராகுலை அடித்தும் இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி வழக்கு பதியாமல் தவிர்த்திருக்கிறார். வீடியோ வெளியானதால்தான் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இல்லையென்றால், வெளியே தெரியாமல் முடித்திருப்பார்கள்’’ என்று கொதித்தார்.

கோவிந்தராவ் - தேஷ்முக் சேகர் சஞ்சய் - செந்தில்குமார்
கோவிந்தராவ் - தேஷ்முக் சேகர் சஞ்சய் - செந்தில்குமார்

தஞ்சாவூர் எஸ்.பி-யான தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் பேசினோம். ‘‘சாதிரீதியாகத் தாக்குதல் நடந்ததாக சமூக வலைதளங்களில் பரவியது தவறானது. பணத்தைத் திருடிவிட்ட கோபத்தில் இப்படி நடந்துகொண்டதாக விசாரணையில் தெரிவித்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட எட்டு பேரும் கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவர்கள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப் பட்டுள்ளது. மணல் கடத்தலைத் தடுக்கத் தவறிய போலீஸார்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

கலெக்டர் கோவிந்தராவிடம் பேசினோம். ‘‘சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தைக் கையிலெடுத்துத் தாக்கியது மிகப்பெரிய தவறு. நிச்சயம் அவர்கள்மீது தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதைத் தடுக்கவும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் தலைகுனியச் செய்திருக்கும் இந்தச் சம்பவத்தின் பின்னுள்ள சாதிய வன்மம், பணத் திமிர், போதை போன்றவற்றின் பின்னணியை மிக கவனமாகப் பார்க்க வேண்டும். குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்கவும், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உதவவும் அரசு முன்வர வேண்டும்!