திருச்சி, இ.பி ரோடு, அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அமர்நாத் (28). இவர் காந்தி மார்க்கெட்டில் சுமைத்தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், அமர்நாத்தின் மனைவிக்கும், அவரின் தம்பி ரகுநாத்துக்குமிடையே திருமணம் மீறிய உறவு இருந்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டும், மெசேஜ் அனுப்பிக்கொண்டும் இருந்தனராம். இந்த விஷயம் தெரிந்து அதிர்ச்சியடைந்த அமர்நாத், நேற்று மனைவியிடம் அது குறித்துக் கேட்டிருக்கிறார். அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போக, ஆவேசமடைந்த அமர்நாத், அரிவாளை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் சரமாரியாக வெட்டியிருக்கிறார். இதில் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த அந்தப் பெண் வலியால் அலறித் துடித்திருக்கிறார். அதையடுத்து, மனைவியை வெட்டிய அரிவாளோடு திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்குச் சென்ற அமர்நாத், ‘வீட்ல ஒரு சின்னப் பிரச்னை சார். கோபத்துல என் பொண்டாட்டியை இந்த அரிவாளால வெட்டிட்டேன்’ என போலீஸாரிடம் சரணடைந்திருக்கிறார்.

இதற்கிடையே அக்கம் பக்கத்தினரும் போலீஸாருக்குத் தகவலைச் சொல்ல, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அமர்நாத்தின் மனைவியைமீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கழுத்து, தலைப் பகுதிகளில் பலத்த காயமடைந்திருக்கும் அந்தப் பெண், திருச்சி அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.