சென்னை, மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் வழக்கம்போல இன்று ஏராளமானோர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தனர். பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரிலுள்ள சர்வீஸ் சாலையில் மூன்று இளைஞர்கள் ரத்தக்காயங்களுடன் மூச்சுப் பேச்சு இல்லாமல் கிடப்பதை வாக்கிங் சென்றவர்கள் பார்த்தனர். உடனடியாக அவர்கள் காவல் நிலையத்துக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு அண்ணாசதுக்கம் போலீஸார் விரைந்து சென்று, மூன்று பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களில் ஓர் இளைஞன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மீதமுள்ள இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சிகிச்சை பெற்றுவரும் இளைஞர்களிடம் போலீஸார் விசாரித்தபோது, உயிரிழந்த இளைஞனின் பெயர் விக்னேஷ் என்றும், ஆவடி பகுதியைச் சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது. மேலும், விக்னேஷின் கொலைக்கான காரணமும் தெரிந்தது.
இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``கொலைசெய்யப்பட்ட விக்னேஷின் நண்பர்கள் சஞ்சய், அரவிந்தன். இவர்கள் மூன்று பேரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார்கள். சஞ்சய்க்கு இன்று பிறந்தநாள். அதைக் கொண்டாடத் திட்டமிட்ட சஞ்சயின் நண்பர்கள், மெரினா கடற்கரைக்கு நேற்றிரவு சென்றிருக்கிறார்கள். சர்வீஸ் சாலையில் பைக்கை நிறுத்திவிட்டு கடற்கரைப் பகுதியில் சஞ்சயின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் பைக்கில் வீடு திரும்ப வந்திருக்கிறார்கள்.
அப்போது விக்னேஷின் ஹெல்மெட்டைக் காணவில்லை. அதனால் அதைத் தேடியிருக்கிறார்கள். அப்போது மெரினாவில் கடை வைத்திருப்பவர்கள், விக்னேஷ், சஞ்சய், அரவிந்தன் ஆகிய மூன்று பேரைப் பார்த்து... `இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறார்கள். அதனால் மெரினாவில் கடை வைத்திருப்பவர்களுக்கும் விக்னேஷ் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் மெரினாவில் கடை வைத்திருப்பவர்கள், மூன்று பேரையும் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில்தான் விக்னேஷ் உயிரிழந்துவிட்டார்.

சஞ்சய், அரவிந்தன் ஆகியோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்தத் தகவலின் அடிப்படையில் மெரினாவில் கடை வைத்திருப்பவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. விசாரணையில் திருட வந்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தில்தான் மூன்று பேரைத் தாக்கியதாகக் கடைக்காரர்கள் கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. மேலும், சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வுசெய்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் குற்றவாளிகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம் கொலையில் முடிந்ததால் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள் விக்னேஷின் நண்பர்கள், உறவினர்கள்.