மைதிலி என்னைக் காதலி

175வது நாள்தமிழ்மகன்

திருடிப்புடுவோம்.. ஒண்ணும் கவலப்படாத. கேமரா எப்புடியும் பத்து லட்ச ரூபா தேறும்.. என்னைக்கு வெச்சுக்கலாம்னு மட்டும் சொல்லு.. ஏண்டா உனக்கு அந்தக் கவலை தேவையா? அதை வாங்கவா ஆள் கெடைக்க மாட்டான்?... உலகம் ஃபுல்லா சினிமா எடுக்கானுங்க. எவன்கிட்டயாவது தள்ளிப்புடலாம்'' பாஸ்கருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் பஸ்ஸில் இருப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் சத்தமாக செல்போனில் பேசிக்கொண்டு வந்தான். மொத்த பஸ்ஸும் சந்தேகப்படுவதைப் பற்றி அவனுக்கு எந்த பிரக்ஞையும் இல்லை.

''உன் கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும்டா... அண்ணன் இருக்கேன்... ஒண்ணும் கவலைப்படாதே.. எப்ப திருடலாம்னு சொல்லு வந்துப்புடறேன். விளையாட்டுக்குச் சொல்லலடா... புரியுதா...? ஒழுங்கா சம்பளம் தராதவன் கிட்ட வேற என்னத்தப் பண்ணச் சொல் லுத? இப்ப நான் புதுச்சேரி போய்க்கிட்டு இருக்கேன். ரெண்டு நாள்ல வந்துடறேன். ஒண்ணும் கவலைப்படாம இரு. சினிமாவ நம்பி வந்துட்டம். நல்லதோ, கெட்டதோ இங்க இருந்துதான் நடக்கணும். நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எது வுமே தப்புல்லடா.. ஆமா.. சினிமாவுல சொல்லித் தந்துருக்கானுவோ... அதுதான் நமக்குப் பாடம்.. வெக்கட்டா... ம்ம் செரி... செரி. வந்து பேசிக்குவோம்'' எதிரில் இருப் பவருடன் பேசுவது போலவே கையையும் காலையும் ஆவேசமாக ஆட்டிப் பேசி விட்டு ''உத்தண்டி தாண்டியாச்சா?'' என் றான் பாஸ்கரனைப் பார்த்து. பாஸ்கரன் பதில் சொல்லவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick