போதையில் இருக்கும் போது... கவிதை | Poetry - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

போதையில் இருக்கும் போது... கவிதை

தமிழ்நதி

குடிப்பதற்கு முன்னதாகவே

தள்ளாடத் தொடங்கிவிடுகிறது மனம்

குடிக்கக் குடிக்க

துச்சமாகிவிடுகிறது பூமி

நெளியவாரம்பிக்காத யன்னல் கண்ணாடியில்

வரிக்குதிரைகள் பிடரிமயிர் பறக்க

குதித்துக் குதித்தோடுகின்றன

ஒரு மிடறு அருந்தியதும்

குழந்தையாக மாறிவிட்டிருக்கிறது எறும்பு

அது என் உள்ளங்கையில் செல்லங்கொண்டாடுகிறது

வட்டக் கண்களால் என் புத்தகங்களைக் காதலிப்பவனே!

உன்னை அழைத்துச் சொல்வேன்

'நரக ஞாபகங்களுக்கு நான் திரும்புவதற்கிடையில்

எடுத்துப் போ பிசாசே!’

அதற்கு முதல் எனக்குச் சொல்

ஒரு குவளை திரவம்

எங்ஙனம் அன்பின் சமுத்திரமாய் ஊறியது?

எனது குற்றவுணர்வினால் தெய்வங்களாக்கப்பட்டுவிடும்

எதிரிகள் முன்னமர்ந்து மன்றாடுகிறேன்

என்னோடு ஒரு கோப்பையைப் பகிர்ந்துகொள்ளும்படியாக

போதையில் இருக்கும்போது

நின்றவிடத்திலிருந்தபடி

திரும்பத் திரும்ப

திரும்பத் திரும்ப

அலைந்து திரிகிறேன்

தற்கொலையின் பசுமையுள்

அந்நேரம்

ஒரு கத்தி

கடல்

தூக்க மாத்திரைகள்

நல்ல கவிதை

வாகனங்கள் சீறிப் பாயும் சாலை

எதிர்ப்படாதிருக்கட்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick