பார்வதிக்குட்டி - சிறுகதை | Parvathykutti - Short story - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

பார்வதிக்குட்டி - சிறுகதை

சாம்ராஜ், ஓவியம்: ஜெயசூர்யா

கார்மேகம், பார்வதிக்குட்டியை முதன்முதலில் பார்த்தது, 'ஒரு ஓணம் ராத்திரி’ என்ற மலையாளப் பட ஷூட்டிங்கில். க்ஷேத்ராடனம்போல, இடையிடையே கேரளத்துக்கு அவர் 'தீர்த்தாடனம்’ போவது உண்டு. அப்படிப் போகும்போது, தற்செயலாக கோவளத்தில் நாகர்கோவில் கோலப்பனைப் பார்த்தார். கார்மேகம் சென்னை போகும்போது பலதும் செய்து கொடுப்பவன் கோலப்பன். கார்மேகத்தை 'முதலாளி... முதலாளி...’ என ஒவ்வொரு வரித் தொடக்கத்திலும் முடிவிலும் சொல்வான். உண்மையில் கார்மேகம் ஒரு முதலாளிதான். பரமக்குடியின் பெருந்தனக்காரர் சா.வி.கிருஷ்ணசாமியின் ஒரே புத்திரன். திரையரங்கு, மில்கள், தோப்புகள், கல்வி நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளன. கூடவே, பணக்காரப் புத்திரனுக்கு உண்டான எல்லா போக்கிரித்தனமும் உண்டு. கிருஷ்ணசாமியால் அவரைத் திருத்த முடியவில்லை. 'கல்யாணம் திருத்தும்’ என்றார்கள். இரண்டு பிள்ளைகள் ஆகியும் நாகஜோதி (பார்த்திபனூர் ஆ.ந.வி.ப.ராமசாமியின் மகள்) ராத்திரி பன்னிரண்டு மணி வரை விழித்திருந்தும், கார்மேகத்தின் வண்டி இரண்டு மணிக்குக் குறைந்து 'கிளப்’பில் இருந்து புறப்பட்டது இல்லை. போதையில் அவர் வண்டி லாகவமாகத் திரும்புவதை, ஐந்து முக்கில் ராத்தங்கும் சின்னாயி வீட்டுக் கழுதைகளும் சிலையாக நிற்கும் காந்தியும் நாள் தவறாது பார்ப்பார்கள்.

சா.வி.கிருஷ்ணசாமி தனக்கு நன்கொடை கொடுத்ததைப் பற்றி, மார்த்தாண்டம் சுந்தரம்பிள்ளை தன் நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். கார்மேகம் தன்னைச் சுற்றியிருக்கும் அடிப்பொடிகளுக்கு மாத்திரமே ஏதேனும் தாரைவார்ப்பார். பரமக்குடியில் கூடுதலாக வெயில் இருப்பதாகக் கருதினாலோ அல்லது மலையாள மழை பார்க்கவேண்டும் எனத் தோன்றினாலோ, வண்டி ஆரியங்காவு கடக்கும். அப்படி ஒரு யாத்திரையில்தான், கோவளத்தில் வாயில் துண்டின் முனையைக் கடித்தபடி ஓடி வந்தான் கோலப்பன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick