ஸ்டார் ஆர்டிஸ்ட்ஸ்!

பரிசல் கிருஷ்ணா படங்கள்: தி.விஜய், ப.சரவணகுமார், க.மணிவண்ணன்

“தீபாவளி வந்தாலே நாங்க பிஸி ஆகிடுவோம். பெரிய பெரிய பேனர்கள் ரெடி பண்ணி, பெயின்ட் அடிச்சு, காயவெச்சு ரோல் பண்ணி வெளியூர்களுக்கு அனுப்புவோம். மழை வேற பயமுறுத்தும். எல்லா தியேட்டர்களிலும் தீபாவளி டைம்லதான் புதுப் படம் மாறும்ங்கிறதால, பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். தியேட்டர்ஸ் கன்ஃபர்ம் ஆகறதுக்காக காத்திருப்போம்.

பத்து படமாவது பெரிய எதிர்பார்ப்போட வரும். பத்து நாள் முன்னாலதான் எந்தப் படம், எந்த தியேட்டர்லனு தெரியவரும். அது தெரிஞ்ச உடனே பரபரப்பாகிடும்” என்கிறார் ஜீவானந்தம். கோவையின் மிகப் பிரபலமான திரைப்பட பேனர் ஓவியர்.  `சினி ஆர்ட்ஸ் வேலாயுதம்’ என்றால் கோவை முழுவதும் மிகவும் பிரபலம். அவருடைய மகன் ஜீவானந்தம். தந்தையின் காலத்துக்குப் பிறகு, ஜீவா இந்தத் தொழிலில் கால்பதித்துப் பிரபலமானார்.

தீபாவளி என்றாலே, எல்லா ஊர்களிலும் ஓவியங்களில் ஜொலித்துக்கொண்டிருந்த சினிமா பேனர்கள் இன்றைக்கு ஃப்ளெக்ஸுக்கு மாறிவிட்டன. இந்த போஸ்டர் ஓவியங்களில் நடிகர்களின் உருவங்களை அவ்வளவு பிரமாண்ட அளவில் பார்ப்பதும், விளம்பரங்களில் இருக்கும் வித்தியாசமான ஐடியாக்களை ரசிப்பதும் அலாதியாக இருந்தது. ஆனால், இன்று எல்லாமே பிரின்ட்மயமாகிவிட்டது.

“60-களில் கலை இலக்கியப் பெருமன்றத்தோட முதல் மாநாடு கோவையில் நடந்தப்ப, அப்பா வேலாயுதம்தான் எல்லா வேலைகளையும் செஞ்சார். `ராஜ ராஜ சோழன்’ படத்துக்கு தஞ்சை பெரிய கோயில், `திருவிளையாடல்’ படத்துக்கு கைலாயம் செட், `சிவந்த மண்’ படத்துக்கு ஹெலிகாப்டர் செட் இதெல்லாம் தியேட்டர்ல செஞ்சு அசத்தினவர்.

40 அடி, 60 அடினு கட்அவுட்ல உருவப்படம் செஞ்சு, வெட்டி வைக்கிறதை வேடிக்கை பார்க்கவே நிறைய கூட்டம் வரும். அப்பா காலத்துக்குப் பிறகு, 81-ல இருந்து நான் வரைஞ்சுக்கிட்டிருந்தேன். 2003-2004 கால கட்டத்துல ஃப்ளெக்ஸ் வர ஆரம்பிச்சது. 2006-க்குப் பிறகு,  கையில வரைஞ்சு பேனர் வைக்கறது அழிஞ்சே போச்சு. இப்போ 20 நிமிஷத்துல 30 சதுர அடி ஃப்ளெக்ஸ்கூட ரெடி ஆகிடுது. அதனால எல்லாரும் அதை நோக்கித்தான் போறாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick