அன்பார்ந்த வாசகர்களே!

வணக்கம்.

புத்தாடை, பட்டாசு என்று தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் திளைத்து இருக்கும் உங்களுக்கு மேலும் ஒரு வாசிப்புப் பரவசத்தை வழங்க வந்திருக்கிறது விகடன் தீபாவளி மலர்.

ஆன்மிகம், பாரம்பர்யம், சிறுகதை, கவிதை, ஓவியம், சிற்பம், சினிமா, சுற்றுலா, பலகாரக் குறிப்புகள் எனப் பல்சுவையோடு மலர்ந்திருக்கிறது. தீபாவளி மலரின் ஒவ்வொரு பக்கமும் அணு அணுவாக ரசித்து உருவாக்கப்பட்டிருப்பதை உணர்வீர்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் புயல் தின்ற கடற்கரை நகரான தனுஷ்கோடிக்கு, புதுமெருகு பூசப்படும் தருணத்தை விவரிக்கிறது `மீண்டும் உயிர்த்தெழும் தனுஷ்கோடி’ கட்டுரை. நடிகர்கள் எம்.ஆர்.ராதா, சுருளிராஜன், இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் ஆளுமையை ஆராயும் கட்டுரைகள், மூத்த தலைமுறையினரின் நினைவுகளுக்கு விருந்தாக இருக்கும். காபியின் கதை, கலம்காரி ஓவியங்கள் தமிழகம் வந்த பின்னணி, இனிப்பின் வரலாறு என சுவாரஸ்யங்களுக்கு மலரில் பஞ்சம் இல்லை. இயக்குநர் மிஷ்கினின் ஆழமான பேட்டி, இந்த இதழை அலங்கரிக்கிறது. கர்நாடகாவில் சிதிலமாகிக் கிடக்கும் சரித்திர பூமியான ஹளேபீடு ஹொய்சாளேஸ்வரர் கோயிலை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் கவிஞர் மகுடேசுவரன்.

மலையாளத் திரையுலகில் ஏற்பட்டிருக்கும் அதிரடி மாற்றங்களைச் சொல்லும் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. டோலிவுட், கோலிவுட், பாலிவுட், சாண்டல்வுட் சினிமாக்களில் நடந்துவரும் புதிய முயற்சிகளைப் பட்டியலிட்டிருக்கிறோம். பக்கங்களைப் புரட்டப் புரட்ட இன்னும் பல சுவாரஸ்யங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.

அனைவருக்கும் விகடனின் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!

அன்புடன்,
ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick