சேஸிங் கிங் ! - விராட் கோஹ்லி | Virat Kohli the King - Vikatan Diwali malar | தீபாவளி மலர்

சேஸிங் கிங் ! - விராட் கோஹ்லி

பு.விவேக் ஆனந்த்

ரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர். விராட் கோஹ்லி சுத்தமாக ஃபார்மில் இல்லை. இங்கிலாந்து பௌலர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சை யாராலும் சமாளிக்க முடியவில்லை. இதுமாதிரியான சவால்கள் என்றால், கோஹ்லிக்கு ரொம்பவே பிடிக்கும். அசத்திவிடவேண்டும் என்று முடிவெடுத்து களம் இறங்கினார். ஆனால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளைச் சமாளிக்க முடியவில்லை. தொட்டால் கேட்ச், விட்டால் போல்டு என்று மிரட்டியெடுத்தனர். வீராவேசமாக இறங்கிய கோஹ்லி, ஒவ்வொரு போட்டியிலும் சொற்ப ரன்களில் தன் விக்கெட்டுகளை இழந்தார். இங்கிலாந்து தொடர் மிக மோசமாக மாறியது. அவருடைய வீக்னெஸ் எதுவென்று மற்ற நாட்டு அணிகளுக்கும் நன்றாகத் தெரிந்தது. அதற்கேற்பப் பந்துவீசி எளிதில் கோஹ்லியை அவுட்டாக்க ஆரம்பித்தனர். `கோஹ்லியின் கதை முடிந்தது...' என்று அத்தனை பேரும் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் கோஹ்லி விடவில்லை. அவர் தனது பேட்டிங் பாணியை சட்டென்று மாற்றிக்கொண்டார். எதிரணியினரின் பந்துவீச்சினை துவம்சம் செய்யத் தொடங்கினார். இந்த உடனடி மாற்றத்துக்குக்  காரணம், மூத்தோர் சொல்! கோஹ்லி அப்போது ராகுல் டிராவிடை அணுகினார். அவரிடம் தன் தவறுகள் என்ன என்று கேட்டு தன்னைத் திருத்திக்கொண்டார். அதற்கேற்ப தன்னுடைய ஒட்டுமொத்த பேட்டிங் பாணியை மாற்ற ஆரம்பித்தார். அதற்காக மிகக் கடுமையாக உழைத்தார். இதுதான் கோஹ்லியின் குணம். இதுதான் அவரை சூப்பர் ஸ்டாராக்கியது.

வெற்றிப்பசி  தணியாத ஆங்கிரி பேர்டு  விராட் கோஹ்லி. `டெஸ்ட்டில் கேப்டன்’, `லிமிட்டட் ஓவர் கிரிக்கெட்டில் தோனிக்குத் தளபதி’ எனப் பொறுப்புகளை இழுத்துப்போட்டு எடுத்துச் செய்யும் முழுமையான விளையாட்டு வீரர்.  ரசிகர்களால் `கிரிக்கெட்டின் கடவுள்’ என அன்புடன் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் காலகட்டத்துக்குப் பிறகு, அவருடன் ரசிகர்கள் ஒப்பிடத் தொடங்கிய ஒரே வீரர் கோஹ்லி மட்டும்தான். காட்டுத்தனமாக விளாசுவது கிடையாது; மைதானத்தில் உருண்டு, புரண்டு பௌலர்களைக் காமெடியாக்கும் ஏலியன் அப்ரோச்சும் இல்லை; பின்னே எப்படி ரசிகர்களின் மனம் கவர்ந்த விளையாட்டு வீரர் ஆனார் கோஹ்லி? அந்த சக்சஸுக்கு பின்னால் இருக்கும் ஒரே காரணம், `கிரிக்கெட்டை நேர்த்தியாக ஆடு’ என்பது மட்டும்தான்.  கோஹ்லி, கிரிக்கெட் புத்தகத்தில் இருக்கும் ஷாட்களை மட்டும்தான் ஆடுவார். ஆனால், ஒவ்வொரு பந்தையும்  அவர்  விரட்டும் டைமிங், தெறி ரகம். இப்போதைய சூழ்நிலையில் கோஹ்லியை போல்டு ஆக்குவது என்பது எப்பேர்ப்பட்ட பௌலருக்கும் சவாலான விஷயம். ஏனெனில், பந்தைக் கணித்து ஷாட் தேர்வு செய்வதில் டிராவிடும் சச்சினும் கலந்த செய்த கலவை.

கோஹ்லி பிறந்து வளர்ந்தது எல்லாம் டெல்லியில். அப்பா பிரேம் கோஹ்லி, ஒரு கிரிமினல் லாயர்.   குடும்பத்துக்கு என பிரத்யேக பிசினஸும்  இருந்தது. இதனால், வருமானத்துக்குப் பஞ்சம் இல்லை. சராசரி இந்திய இளைஞனைப்போல கோஹ்லிக்கும்  சின்ன வயதில் இருந்தே கிரிக்கெட் ஆசை வர,  தினமும் பேட் பிடித்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். எட்டு வயதில் அவரை ஒரு கிரிக்கெட் அகாடமியில் சேர்த்துவிட்டார் அப்பா பிரேம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick