ரத்தக்கண்ணீர் - என்றும் தீயாத ஃபிலிம் சுருள்

வெய்யில்

மிழரின் பண்பாட்டில், அரசியலில் மாபெரும் தாக்கங்களை நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கும் கலைகளுள் முதன்மையான ஒன்று சினிமா. உலகிலேயே அதிகமாக சினிமா உற்பத்தி செய்யப்படும் மொழிகளுள் தமிழுக்கு முதற் பட்டியலிலேயே இடமுண்டு. சாதி, மத பேதங்களைத் தாண்டி ஒரே கூரையின்கீழ் மக்களை ஒன்றுகூடச்செய்த சக்திகளுள் முதன்மையானவை திரையரங்கங்கள். இப்படியாக, ஏழரைக் கோடி மக்களின் வாழ்வியலில் ஆழமான ஆதிக்கம் செலுத்துகின்ற தமிழ் சினிமாவின் வரலாற்றில் காணக்கிடைக்கும் ஆச்சர்யங்கள் கணக்கில் அடங்காதவை. அப்படியான ஆச்சர்யங்களில் ஒன்று `ரத்தக்கண்ணீர்!'.

இது, 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம், தீபாவளியன்று வெளியான திரைப்படம். 61 தீபாவளிகளைக் கடந்து, ஆயிரக்கணக்கான வெள்ளிக்கிழமைகளைக் கடந்து, இன்றும் தமிழகத்தின் ஏதோவொரு திரையரங்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களது பயணங்களில் நீங்கள் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஏதேனும் ஒரு சிறுநகரத்துச் சுவர்களில் `ரத்தக்கண்ணீர்’ திரைப்படத்தின் சுவரொட்டிகளைப் பார்க்க முடியும். நள்ளிரவின் காற்றில், “ஏ... காந்தா...” என்ற கரகரக் குரலின் அலறலைக் கேட்க முடியும். கடந்த (2015) வருடத்தில் இணையத்தில் பதிவேற்றப்பட்ட ‘ரத்தக்கண்ணீர்’, இதுவரைக்கும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே, இந்தப் படத்தின் துண்டுக்காட்சிகளின் பார்வை எண்ணிக்கையும்கூட பல லட்சங்களைத் தாண்டும். தமிழின் தற்கால வெற்றிப் படங்களில் அதிகபட்ச ‘ஓடுநாட்களே’ மூன்றிலிருந்து ஐந்து வாரங்கள் வரை என்று ஆகிவிட்ட நிலையில், `ரத்தக்கண்ணீர்’ படத்துக்கு எவ்வாறு இப்படி ஒரு நீண்ட பயணம் சாத்தியமானது? தியேட்டர் புரொஜெக்டரின் காலவெப்பத்தில் அதன் ஃபிலிம் சுருள்கள் எப்படி தீயாமலிருக்கின்றன? இன்றும் தமிழ் சினிமா பார்வையாளனுக்கு ‘ரத்தக்கண்ணீர்’ ஏன் தேவைப்படுகிறது?

இரட்டைக்குரல் துப்பாக்கி எம்.ஆர்.ராதா

`ரத்தக்கண்ணீர்’ திரைப்படம் அதன் அழகியல் செறிவுக்காகவோ, சினிமா தொழில்நுட்பச் சாதனைகளுக்காகவோ, அதிநாயக (Super Star) பிம்பத்துக்காகவோ கொண்டாடப் படவில்லை. நாம் அறியும் முக்கியமான காரணங்களுள்  முதன்மையானது எம்.ஆர்.ராதாவின் நடிப்பு. அந்தக் கலகக்காரரின் அசாத்திய உடல்மொழியிலான நடிப்பும், இரட்டைக் குரலில் பேசும் வசனங்களும் அதன் தொனியும் வேறு யாருக்கும் கைகூடாதவை. குறிப்பாக, வசனங்களின் விஷயங்களுக்கு ஏற்ப குரலை ஏற்றி, இறக்கி கரகரக் குரலில் இருந்து கீச்சுக் குரலுக்குத் தாவி, வசன உச்சரிப்போடு அவரது உடல்மொழியும் முகவெளிப்பாடும் யாராலும் அதுவரை முயன்று பார்க்கப்படாதவை.படத்தில், ஏழைத் தொழிலாளர்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் பேசும் முதல் காட்சியிலேயே அவரது பாத்திரத்தின் முழுத்தன்மையையும் நிறுவியிருப்பார். “சீமான் மோகன் அவர்கள் இந்நாட்டு பாட்டாளிகளின் நிலை என்பது பற்றிப் பேசுவார்!” என்று அவரை அழைக்கும்போது, “ஐ டோன்ட் லைக்!” என்று ஏளனப் புன்னகையோடு மறுப்பார் ராதா. மேடையில் அப்போது அவர் பைப் புகைத்தபடி `Science sex’ என்ற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்
பதாகக் காட்டப்படும். அலட்சிய பாவத்தை இவரளவுக்குத் திரையில் வெளிப்படுத்தியவர் வேறு யாருமில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். அலட்சியம், திமிர், எள்ளல் என அவருக்கேயான கலவையான வெளிப்பாடு அது. `ரத்தக்கண்ணீர்’ படத்தின் நாயகனாக வேறு ஒருவரையும் நாம் நினைத்துப் பார்க்க முடியாதபடி தன்னை அதில் வெளிப்படுத்தியிருக்கும் எம்.ஆர்.ராதாவே, படத்தின் பிரதான முகம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick