“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி!’’ | S.P.Muthuraman Interview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி!’’

வெ.நீலகண்டன், பரிசல் கிருஷ்ணா, படங்கள் தி.குமரகுருபரன்

வி.எம் ஸ்டுடியோவில் உள்ள அந்தச் சின்ன அறையில், அமைதியாக கம்பராமாயணம் வாசித்துக்கொண்டிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். 20 ஆண்டுகளில் 70 திரைப்படங்களை இயக்கியவர். இதில், ரஜினிகாந்த் நடித்த படங்கள் மட்டுமே 25; கமலஹாசன் நடித்தவை 10; சிவாஜி நடித்த படங்கள் மூன்று; 80-களில் மினிமம் கியாரன்டி இயக்குநராகக் கொண்டாடப்பட்டவர், எஸ்.பி.முத்துராமன்.

இவரது பெரும்பாலான படங்கள் வெள்ளிவிழா கண்டவை. `நிம்மதி உங்கள் சாய்ஸ்,' `ஒரு மனிதனின் கதை' என தொலைக்காட்சித் தொடர்களிலும் முத்திரைப் பதித்தவர். 40 ஆண்டுகாலம் தமிழ்த் திரையுலகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த எஸ்.பி.முத்துராமன், அதற்குரிய அடையாளங்களே இல்லாமல் எளிய மனிதராக நம்மை வரவேற்கிறார். தன் சாதனைகளையும் அனுபவங்களையும் முன்னிறுத்திக் கொள்ளாமல், ஒரு பார்வையாளனாக தற்கால சினிமா குறித்த தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

“40 ஆண்டுகளாக சினிமாவில் கலந்திருக்கிறீர்கள். மாற்றங்கள், வளர்ச்சிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

“பிரமாண்டமான வளர்ச்சி. தொழில்நுட்பம் கற்பனைக்கும் அப்பாற்பட்டு வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் எங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கவில்லை. `போக்கிரி ராஜா,' `நெற்றிக்கண்' என நான் இயக்கிய இரட்டை வேடப் படங்கள் எல்லாமே ‘மேனுவல்’தான். கேமரா லென்ஸின் ஒரு பக்கத்தில் கறுப்பு பேப்பர் ஒட்டி, மறுபக்கத்தில் படமாக்குவோம். பேப்பரை ஒட்டுவதில் கொஞ்சம் பிசகினாலும் திரையில் கோடு தெரிந்து அசிங்கமாகிவிடும். எக்ஸ்போஷருக்காக வெயிலுக்குக் காத்திருப்போம். இன்றைக்கு எந்த லைட்டிலும் ஷூட் செய்யலாம். மூன்று, நான்கு வேடங்கள் எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டன. தொழில்நுட்பத்தை நன்கு கற்றுணர்ந்த கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் போய் சாதிக்கிறார்கள். அதே நேரத்தில், தொழில்நுட்பம் வளர்ந்த அளவுக்கு ஆக்கத்திறன் வளரவில்லையோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. கதைக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டது. ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம், கவர்ச்சி இருந்தால்தான் வியாபாரம் ஆகும் என்ற மாயை வளர்ந்திருக்கிறது. நானும் 'முரட்டுக்காளை,' 'சகலகலா வல்லவன்' என நிறைய கமர்ஷியல் படங்கள் இயக்கியவன்தான். ஆனால், அடிப்படையில், ஒரு கதைக்குள்தான் படம் பயணிக்கும். விருந்தில் நிறைய பதார்த்தங்களை வைத்து விட்டு, சோற்றைக் குறைவாக வைத்தால் எப்படியோ, அப்படித் தான் கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் படம் எடுப்பதும். எங்கள் காலத்தில் `கதை இலாகா' என ஒரு குழுவே இருக்கும். எங்கள் கதை இலாகாவில் பஞ்சு அருணாசலம், கலைஞானம், மகேந்திரன், பாஸ்கர் ஆகியோர் இருந்தார்கள்.''

“அப்போதெல்லாம் ஸ்டூடியோக்களே படங்களைத் தயாரித்தன. தொழில் பாதுகாப்பும் ஒழுங்கும் இருந்தன. இப்போது, தயாரிப்பு தனி நபர்களின் கைகளுக்கு வந்திருக்கிறது. இது நல்ல மாற்றமா?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick