கடாரம் கொண்டான், மகிழ்ச்சியை வென்றான்

பொன்.செந்தில்குமார்

ந்த நிலப்பரப்பில் நிற்கும்போது பெருமிதமாக இருக்கிறது. அரியலூருக்கு அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமர்ந்துகொண்டு, தெற்காசியாவின் பெரும் பகுதியை ஆட்சிசெய்த ராஜேந்திரச் சோழனின் படை, கடல்கடந்து வந்து நிலைகொண்ட பகுதி; அரபு, சீன வர்த்தகர்களோடு போட்டியிட்டு, சோழ தேசத்து வர்த்தகர்கள் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த இடம்; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடல் பயணம் மேற்கொள்பவர்கள், பருவக்காற்று மாற்றத்துக்காகக் காத்திருக்கவும் ஓய்வெடுக்கவும் பயன்படுத்திய கடலோரப் பரப்பான  மலேசியாவில், கிடா மாநிலத்தில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதியில் நின்றுகொண்டிருக்கிறோம்.  முதல்நாள் பெய்த சாரல் மழையில், மரங்கள் குளித்துச் சிலிர்த்திருக்கின்றன. இந்தோனேஷிய காட்டுத்தீயால் எழுந்த புகைமூட்டம் நிலமெங்கும் பரவியிருக்கிறது.

பினாங்கு மாநிலத்தின் ஜார்ஜ் டவுனில் இருந்து 75 கி.மீ தொலைவில் இருக்கிறது  பூஜாங் பள்ளத்தாக்கு. தமிழர்களின் ஆயிரமாண்டு சரித்திரத்தோடு பிணைந்திருக்கும் பகுதி இது.  காவிரிப்பூம்பட்டினம், மாமல்லபுரம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் இருந்து கடல் வழியில் கிழக்கு முகமாகப் பயணிக்கும்போது, கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டது  இந்த கிடா சிகரம். 1,230 மீட்டர் உயரம்கொண்ட  இந்தச் சிகரத்தை ஒட்டி, சுமார் 224 சதுர கிலோமீட்டருக்கு சரிந்து கிடக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு, மலாக்கா நீரிணையின் நுழைவுவாயிலாக இருக்கிறது. அக்காலத்தில் தெற்காசியா  முழுவதும் இருக்கும் வணிகர்கள் இங்கு குழுமி தங்கம்,  ஈயம், இரும்பு வணிகம் செய்திருக்கிறார்கள்.
 
பூஜாங் பள்ளத்தாக்கை உள்ளடக்கிய கடாரத்தை, ஸ்ரீவிஜயத்தை ஆண்ட சைலேந்திர வழித்தோன்றல்களே ஆண்டுவந்தார்கள். தலைமுறையாக சோழப் பேரரசுக்கும் சைலேந்திர மன்னர்களுக்கும் நெருங்கிய தோழமை இருந்தது.

புத்த மதத்தைச் சேர்ந்த ஸ்ரீவிஜய மன்னன் சூளாமணிவர்மன், சோழ தேசத்துக்கு வணிகம் செய்யவரும் தங்கள் வணிகர்களின்  வழிபாட்டுக்காக, ஒரு பௌத்த விகாரம் கட்ட வேண்டும் என்று சோழப் பேரரசன் ராஜராஜ சோழனிடம் வேண்டுகோள் விடுத்தான். சூளாமணிவர்மனின் வேண்டுகோளை ஏற்ற ராஜராஜன், நாகப்பட்டினத்தில் `சூளாமணி வர்ம விஹாரம்' எனும் பெயரில் புத்த விஹாரம் ஒன்றைக் கட்ட நிலத்தையும்,  அதைப் பராமரிக்க ஆனைமங்களம் எனும் ஊரில் விளையும் உணவுப் பொருட்களையும் நிரந்தர மானியமாக ஒதுக்கித் தந்தான். அந்த அளவுக்கு சோழர்களுக்கும் ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும்  உறவு செழித்திருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick