கல்லெழிற்கோல ஹளேபீடு! | Halebeedu Specials - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

கல்லெழிற்கோல ஹளேபீடு!

மகுடேசுவரன், படங்கள் தி.விஜய்

தென் கன்னட நாட்டில் ஹளேபீடு, பேலூர் வரை சென்று வருவது எங்கள் பயணத் திட்டம். என்னுடைய ‘மாருதி ஜென்’ மகிழுந்திலேயே செல்வது என முடிவெடுத்திருந்தோம். நால்வர்க்கு அந்த வண்டியே போதும். மதிய உணவை முடித்துக்கொண்டு சத்தியமங்கலம் வழியாக திம்பம் வனப்பகுதியை நோக்கித் திருப்பினோம். வண்டிக்கு நான் மட்டுமே ஓட்டுநர். எப்போது திம்பம் வனப்பகுதியைக் கடக்க நேர்ந்தாலும், அடிவாரத்து அம்மன் பண்ணாரியம்மனை வணங்கிச்செல்லத் தவறுவதில்லை.

நெடுஞ்சாலையோரம் எழுந்தருளி இருக்கும் இத்தகைய பலிபெறு தெய்வங்களை எந்த வண்டி ஓட்டுநர் என்றாலும், விழுந்து வணங்கிச் செல்வதையே வழக்கமாகவைத்திருக்கிறார். பயணம் என்னும் நகர்ச்சியின் பாதுகாப்பு குறித்த பயம் தொன்றுதொட்டு மாறவே இல்லை. முன்பு நடைப் பயணங்களாக இருந்தபோதும் கொல்விலங்குகளால் ஒருவர்க்கு வீடு திரும்புவதில் உறுதியில்லை. இப்போதும் வண்டி விபத்துகளால் பாதுகாப்புக்கு அஞ்சவேண்டியிருக்கிறது.

பண்ணாரியம்மனின் திருநீற்றுத் திலகத்தோடு திம்ப வனத்தை ஏறினோம். தக்காணப் பீடபூமி ஒரு மலையிறக்கமாக முடிவடைந்து, கொங்குச் சமவெளி தொடங்கும் இடத்திற்கு இந்தத் திம்ப வனப்பகுதி அரணாக விளங்குகிறது. முற்காலத்திலிருந்தே மைசூரு, குடகுப் பகுதியிலிருந்து கொங்குநாட்டுக்கு நுழைய விரும்பினால் இந்த ஒரே வழிதான். இல்லையேல், கூடலூர் வழியாகப் பெருவனப்பகுதியைக் கடக்கவேண்டும் அல்லது பெங்களூரு வழியாகச் சென்று திரும்ப வேண்டும். இவையிரண்டுமே தோதில்லாத வழிகள். கொங்குச் சமவெளியில் இருந்து திம்ப வனப்பகுதியின் இரண்டு செங்குத்து ஏற்றங்களைக் கடந்தால், தக்காண பீடபூமியை அடைவது எளிது.

திம்பத்தை அடைந்து ஆசனூர்ச் சோதனைச் சாவடி அருகில் ஒரு தேநீர் மிடறு பருகிவிட்டு, அப்படியே மூங்கில் வனங்கள் வழியாக நஞ்சன்கூட்டை அடைந்தோம். கப்பினி ஆற்றுக்கரையில் உள்ள சிவாலயத்தில் விளக்கேற்றிய மாலையில் நல்ல அருட்காட்சி கிடைத்தது. கபினி ஆற்றை ஏன் `கப்பினி ஆறு' என்கிறேன் என்ற கேள்வி எழக்கூடும். கொங்கு நாட்டு வரலாற்றை ஆராய்ந்து நூல் எழுதிய மயிலை சீனி வேங்கடசாமியார் அந்த ஆற்றைக் `கப்பினி' என்றே குறிக்கிறார். ஆங்கிலத்தின் வழியாக நம் ஆற்றுப் பெயர்களை அறிந்து எழுதிக்கொண்டிருக்கும் நாம் இவ்வாறு நிறையவே தவறிழைக்கிறோம். `முல்லைப் பெரியார்’ என்று தவறாக அழைக்கிறோம். அது முல்லைப் பேரியாறு. ‘பேரியாற்றடைகரை’ என்கிறது சிலப்பதிகாரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick