Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகள் விரும்பும் கோமாளி!

வி.எஸ்.சரவணன் படங்கள் அ.குரூஸ்தனம்

முகமெல்லாம் வண்ணங்கள், தலையில் கோமாளித் தொப்பி, கையில் சின்னக் கம்பு... வேலு சரவணன் மேடையில் நிற்கிறார்; குழந்தைகளின் மகிழ்ச்சிக் கூச்சல் அந்தப் பகுதி எங்கும் நிறைந்து ததும்புகிறது. அவர் ஆடச் சொன்னால் ஆடுகிறார்கள்; பாடச் சொன்னால் பாடுகிறார்கள்: பறக்கச் சொன்னாலும் பறக்கக்கூடச் செய்வார்கள்(!).  அந்த அளவுக்குக் குழந்தைகளுடன் குழந்தையாக மாறிவிடுபவர் வேலு சரவணன்.

20 ஆண்டுகளுக்கு மேல் குழந்தைகள் நாடக வெளியில் தனக்கான இடத்தைப் பதித்த கலைஞன். வேலு சரவணனோடு உரையாடியதிலிருந்து...

``குழந்தைகள் கொண்டாடும் இந்த வாழ்க்கையை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’

``புதுக்கோட்டை பக்கத்தில் கம்பர்கோவில்தான் சொந்த ஊர். படிப்பில் பெரிய அளவுக்கு ஆர்வம் இல்லை. ஆறு, குளம்னு சுத்துறது, தட்டான் பிடிக்க வெயிலில் அலையறது, வீட்டுல இருக்கும் பந்தய மாடுகளை கவனிச்சிக்கிறதுனு ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அம்மாவும் அப்பாவும் ஊர்சுற்றியா இருந்த என்னை, `ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டா நல்லா படிப்பேன்’னு நினைச்சு, அங்கே சேர்த்தார்கள். இந்தப் படிப்புதானே ஊரைவிட்டுப் என்னைப் பிரிக்கிறதுனு வெறுப்பாக இருந்தது. அதுலயும் வீட்டு நாய்க்குட்டி, சூட்டியைப் பிரிஞ்சது தாங்க முடியாததாக இருந்தது. எனக்கு அப்பாயின்னா உயிர். நான் ஊரைவிட்டு வந்ததுக்கு அப்புறம், என்னோட பிரிவாலதான் அப்பாயி இறந்ததாகச் சொல்வார்கள். 12 வயசுல ஊரைவிட்டு பிரிஞ்சு போனப்போ என்ன மனநிலை எனக்கு இருந்ததோ, அந்தச் சிறுவனோட மனநிலையோடதான் இப்ப வரைக்கும் சுத்திக்கிட்டு இருக்கேன். அந்தச் சிறுவனை, நான் நாடகம் நடிக்கிறப்போ பார்க்குற குழந்தைகள் கண்டுபிடிச்சுடுவாங்கனு நினைக்கிறேன்.’’

``இயற்பியல் படித்த நீங்கள் நாடகம் பக்கம் வந்தது எப்படி?’’

``அது பெரிய கூத்து. பி.எஸ்ஸி முடித்தபோது, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நடிப்புக்காக ஒரு படிப்பு தொடங்கப் போவதாக பேப்பரில் பார்த்தேன். அதன் தலைவர் `இந்திரா பார்த்தசாரதி’ எனப் போட்டிருந்தது. அவரை பெண் என்று நினைத்திருந்தேன். என் அம்மாவும், `அந்த அம்மா சொல்ற பேச்சைக் கேட்டு நட'னு சொல்லி அனுப்பினாங்க. அந்த அட்ரஸுக்குப் போய், கதவைத் தட்டினேன். வேட்டியும் தோளில் துண்டுமாக ஒருவர் கதவைத் திறந்தார். `இந்திரா பார்த்தசாரதி அம்மாவைப் பார்க்கணும்'னு சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டே, `இந்திரா பார்த்தசாரதி அம்மா இல்ல... அப்பா' என்றார்.’’

``ஓ! அவர்தான் இந்திரா பார்த்தசாரதியா?’’

``இல்லை. அவர் எழுத்தாளர் க.நா.சு. மாலையில் நேர்முகத் தேர்வில் செலக்ட் ஆகிவிட்டேன். பார்ப்பதற்கு சின்னப் பையன்போல இருந்ததால், பல நாடகங்களுக்கு நான் பொருந்தவில்லை. யோசித்தபோது, என்னோட தாத்தா சொன்ன பூதம் கதை நினைவுக்கு வந்தது. அதையே நாடகமாக நடித்துக் காட்டினேன். இந்திரா பார்த்தசாரதி, `குழந்தைகள் நாடகம்தான்டா உனக்கான களம்’ எனச் சரியாக வழிகாட்டினார். என் வண்டி குழந்தைகளை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.’’ 

``குழந்தைகளோட பயணத்தில் மறக்க முடியாத அனுபவம்..?’’

``நிறைய இருக்கிறது. பாண்டிச்சேரி, வானரப் பேட்டையில் ஒரு பாலர் பள்ளியில் நாடகம் நடிக்கப் போனேன். கோமாளி வேஷத்தைப் பார்த்ததும் ஒரு குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது. என்கூட பூதம் வேஷம் போட்ட என் நண்பன் `உள்ளேயே வரமாட்டேன்’னு சொல்லிட்டான். ஆயாம்மா அந்தக் குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே போய்விட்டார்கள். தயக்கத்தோட நடிக்க ஆரம்பிச்சேன். ஜன்னல் வழியாக, அழுத குழந்தை என் நடிப்பைப் பார்த்தது, கன்னமெல்லாம் கண்ணீர் வழிய, மெள்ளச் சிரிக்க ஆரம்பித்து, கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறினது. அந்தத் துளிகளில் தெரிந்த நான் ரொம்ப அழகாக இருந்தேன். அதுதான் இன்னும் என்னை `நடி, நடி’னு சொல்லிட்டு இருக்கிறது. ’’

``நாடகம் நடிக்க ஏன் பள்ளிகளைத் தேர்தெடுக்கிறீங்க?’’

``நம்முடைய மரபில் கலை என்பதுதான் படிப்பே. காலை எழுந்தததிலிருந்தே வீட்டுப் பாடம், டியூஷன் எனத் தொடங்கி பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலும் பாடங்களோடு புழங்கி, மனதளவிலும் உடல் அளவிலும் சோர்ந்து போய்விடுகிறார்கள் குழந்தைகள். அப்படியான சூழலில் முகமெல்லாம் வண்ணம் அப்பி, கோமாளித் தொப்பியுடன் வகுப்பறைக்குள் நுழையக்கூட வேண்டாம். பார்வையில் ஒரு நிமிடம் பட்டு மறைந்தாலே குழந்தைகள் புத்துணர்ச்சி அடைந்து விடுவார்கள். பள்ளிதோறும் கோமாளிகள் அவசியம்.’’

``ஆசிரியர் எப்படி ஒரு பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?’’

``ஆசிரியர், அதுவும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி சிரமமானது. கொஞ்சம் முயற்சித்தால், சுவையான பணியாக அதை மாற்றிக்கொள்ள முடியும். அது, எழுத்துகளையும் சொற்களையும் குழந்தைகள் அறிமுகம் செய்துகொள்ளும் பருவம். ஒரு சொல்லுக்கான அர்த்தத்தை அதை சொல்லும் விதத்திலேயே புரிய வைத்துவிட முடியும். ஆசிரியர்கள் தங்களை கலைஞர்களாக மாற்றிக்கொண்டால், இன்னும் எளிது. பாட்டாக, கதையாக, நடனமாக என பாடம் குழந்தைக்குள் இறங்குவதே தெரியாமல் கற்பிக்க முடியும்.’’

``குழந்தைகளுக்குப் பிடித்தவிதமாக எப்படி நாடகங்களை உருவாக்குகிறீர்கள்?’’

``அதற்காக பெரிதாகத் திட்டமிடுவதெல்லாம் இல்லை. ஆரம்பத்திலே சொன்னதுபோல என்னை ஒரு சிறுவனாகத்தான் உணர்கிறேன். அந்தச் சிறுவனை இப்போதைய சிறுவர்களோடு உரையாட வைக்கிறேன்.’’

``குழந்தைகளுக்கான நாடகங்களின் போக்கு எப்படி இருக்கிறது?’’

``ஐரோப்பியர்களின் சிந்தனைப் போக்குதான் நாடகத்தினுள் பிரிவுகளை உருவாக்கியது. அதில் ஒன்றாகத்தான் சிறுவர் நாடகங்கள் வருகின்றன. பேராசிரியர் ராமானுஜம், டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் பயின்றபோது அவர் முதன்மையாக `குழந்தைகள் நாடகம்' பற்றிப் பயின்றார். அதையொட்டி பல சிறுவர் நாடகங்களை இயக்கினார். அவரைப் போலவே முருக பூபதி, பிரளயன், சண்முக ராஜா உள்ளிட்டோர்களும் சிறுவர் நாடகங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பல்வேறு நாடகங்களோடு இதையும் செய்கின்றனர். நான் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக நாடகம் நடத்துகிறேன். எம்.ஏ படித்து முடித்ததும் பல பள்ளிகளுக்குச் சென்று நாடகம் நடித்தேன். அப்போது குழந்தைகள் தந்த பத்து பைசா, இருபது பைசாக்கள்தான் என்னை வாழ வைத்தன. அதை கடவுள் எனக்குத் தந்த அன்புப் பரிசாக நினைக்கிறேன். எல்லோருக்குமே குழந்தைகளைப் பிடிக்கும்; ஆனால் குழந்தைகளுக்கு பிடித்த நபராக நான் இருப்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.’’

``தமிழில் சிறுவர் இலக்கியம்...’’

``நமது நாட்டுப்புற கதை மற்றும் பாடல்கள் குழந்தை இலக்கியத்துக்குப் பெரும் சொத்து. அதுபோன்ற வாய்மொழி கதைகள் பல நூறு ஆண்டுகளைக் கடந்து நமக்கு கிடைத்திருக்கும் செல்வம். குழந்தை இலக்கியம் செழிப்பாக உள்ள நாடே சிறப்பானது. அப்போதுதான் அந்த நாட்டின் அனைத்து வளர்ச்சிகளும் ஆரோக்கியமாக இருக்கின்றன என்பேன்.’’

``குடும்பத்தினர்...’’

``திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த போது ஆனந்த விகடனில் என்னைப் பற்றிய கட்டுரை வெளிவந்தது. அதில் வெளியான புகைப்படம் வழியாகத்தான் என் மனைவி என்னை முதன்முதலாக பார்த்தார். ஒரு மகனும் ஒரு மகளும் வாழ்க்கையை இன்னும் அழகாக்கியும் நிறைய கற்றுக்கொடுக்கவும் செய்கிறார்கள்.’’

``உங்களின் அடுத்த இலக்கு?’’

``குழந்தைகளுடன் தொடர்ந்து பயணிப்பதே வரமான வாழ்வு எனக்கு. வாழ்நாள் முழுவதும் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்திக்கொண்டே, அவர்கள் சிரிப்பதைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான்.’’
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
இது மாற்று(ம்) கல்வி!
ஹேப்பி ‘ஆப்’ஸ்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement