விற்றுவிட்ட நிலத்தோடு ஓர் உரையாடல்

வே.ராமசாமி, படம் வீ.சிவக்குமார்

லகு பிளக்கும் குஞ்சுப் பறவையாய்
நான் விற்றுவிட்ட நிலம்
உழு கலப்பைக்கு மண் திறக்கும்

ஒரு செம்மண் ஆறாய்
உள்ளங்கால்கள் குறுகுறுக்க ஓடும்

என் மூதாதையரின் செங்கண்களால்
மண்திறந்து என்னை எரிக்கும்

என் தொட்டிலாடிய வேம்பின்
கசப்புக் காற்றாகி நெஞ்சடைக்கவைக்கும்

எனது தாலாட்டுப் பாடல்களை
மீண்டும் மீண்டும் பாடும்

ஒரு பறக்கும் கம்பளமாய் உருமாறி
என்னைப் பின்தொடரும்

அறிவுள்ளவனுக்கே
ஆத்தங்கரைப் புஞ்சை என்று
பெற்றோரின் குரலில் எச்சரிக்கும்

எங்கோ செல்லும் மேகங்களை
தன்னில் ஈர்த்து முறையிடும்

ஒரு தட்டானாய்ப் பிறப்பெடுத்து
தன்னோடு நின்றுகொள்ளச் சொல்லும்

ஒரு பறவைபோல் அங்கேயே
கூடு கட்டி வாழக் கேட்கும்

ஆயினும் விற்றுவிட்டேன்
ஐம்பொன் விளைந்த நிலத்தை

விற்ற கவலையின் உச்சிப்பொட்டில்
அன்று ஆயிரம் ஆயிரம் பிச்சிப்பூக்கள்

இயந்திரங்கள் வந்து இறங்கவில்லை
கட்டடம் ஏதும் எழும்பவில்லை

என் தகப்பனின் கைகள்
விதை வீசாவிட்டாலும்
யாரோ ஒருவனின் கைகள்
அங்கே விதைத்துக்கொண்டுள்ளன

அம்மட்டிலும்
எல்லாப் பயிர்களும் விளைந்து
பொலிக பொலிக என் பூமியே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick