சேருமிடம் - கவிதை | Kavithai - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

சேருமிடம் - கவிதை

ஆறுமுகம் முருகேசன்

நீண்ட விடுப்பிற்குச் செல்பவனின்
பெட்டியில்
விழித்திருக்கிறது
புசுபுசுவென பிங்க் நிற பொம்மை

பிங்க் நிறம்
தேவதைக்காக உருவாகியது
பிங்க் நிறம் தேவதை உருவாக்கியது
எல்லாவற்றிலும் பிங்க் வண்ணத்தை ஒளித்துவைத்திருப்பாளவள்
ஒருமுறை `பிங்க் நிற காக்கா
வீட்டின் மேலே நிக்குது பார்’ என்றேன்
அம்மாவிடம் ஏதோ கேட்டு அடம்பிடித்துக் கிடந்தவள்
ஓடி வந்தாள்.
காக்கைக்கு பிங்க் நிறமில்லாதது பார்த்து
வாடிய முகம் கண்டு திகைத்து
விளையாடியிருக்க வேண்டாமோ என்றிருந்தது.
பிங்க் நிறம் பிங்க் நிறம்
எதுவானாலும் பிங்க் நிறம்
ஒரு கட்டத்திலவள் பெயரே
பிங்க்கி ஆகிவிட்டது
செல்லமாகக் கோபித்து
வெட்கப்பட்டுக்கொள்வாள்
`பிங்க்கி பிங்க்கி...'

கூட்டில்
பிங்க் பறவை இல்லை
பறந்து போயிருந்தது
`மற்றுமொரு பிங்க் பறவை..?'

நீண்ட விடுப்பிற்கு
வீடு திரும்புபவன்
முகம் சாய்த்திருக்கும்
பிங்க் நிற பெட்டிக்குள்
புசுபுசு குட்டி பிங்க் பொம்மை
பிங்க் பிங்க் என
தன்னைத்தானே எழுப்பிய வண்ணமிருக்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick