கொழுக்குமலை தேயிலை தேன் இலை!

ம.மாரிமுத்து, படங்கள் வீ.சக்தி அருணகிரி

ஜிலீரென உடலில் படர்ந்து சிலிர்ப்பூட்டும் குளிர், மனதை மயக்கும் பசுமை, புத்துணர்வு ஊட்டும் தூய காற்று, கையில் ஆவி பறக்க ஒரு கப் இயற்கை தேநீர்... இந்த அனுபவத்துக்கு இணையான உன்னதம் வேறொன்றும் இல்லை. இப்படியான அனுபவத்தைத் தரவே இயற்கை அன்னை பார்த்துப் பார்த்து செதுக்கி வைத்துள்ள இடம்தான் கொழுக்குமலை. இது தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகில் இருக்கிறது. இயற்கையின்  பேரழகை, பிரமாண்டத்தை உணர விரும்புபவர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் கொழுக்குமலையில் கால் வைத்துவிட வேண்டும்.

8,100 அடி உயரமும் 525 ஏக்கர் பரப்பும் கொண்ட இந்த மலையில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கின்றன தேயிலைத் தோட்டங்கள். முற்றிலும் ரசாயனம் சேர்க்காமல், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் தூய தேயிலைகள்.

அடர்ந்த வனமாக இருந்த கொழுக்குமலையை 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டமாக மாற்றினார்கள். திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களிலிருந்து பிழைப்பு நாடி வந்த மக்கள், தங்கள் வியர்வையையும் ரத்தத்தையும் ஊற்றி, இந்தத் தேயிலைச் செடிகளை வளர்த்திருக்கிறார்கள்.  காலப்போக்கில், தேயிலைச் சாகுபடியில் ரசாயனங்கள் நுழைந்தாலும், கொழுக்குமலை தேயிலைச் சாகுபடி மட்டும் பாரம்பர்ய முறையில் இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தியே செய்யப்படுகிறது.

`கேமிலியா அஸ்ஸாமிகா' எனும் இந்திய தேயிலையும் `கேமிலியா சினென்ஸிஸ்' எனும் சீனத் தேயிலையும் இங்கு பயிரிடப்படுகிறது.  இந்தியத் தேயிலை பெரிதாகவும்,  சீனத் தேயிலை சிறிதாகவும் இருக்கிறது. பெரும்பாலான செடிகள், 1930-களில் ஆங்கிலேயர்களால் நடப்பட்டவை.                                    5 ஆண்டுகளுக்கு  ஒருமுறை கவாத்து செய்து பராமரிக்கிறார்கள். கழிவாக ஒதுக்கப்படும் தேயிலை இலைகளையே செடிகளுக்கு இடுபொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.  இங்கு விளையும் தேயிலைகளைத் தூளாக்க, ஆங்கிலேயர்கள் 1935-ம் ஆண்டு இந்த மலையிலேயே ஒரு தொழிற்சாலையை உருவாக்கினார்கள். இன்றும் அது செயல்பாட்டில் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick