இங்கிலாந்தின் நன்கொடை! - சகோதரி நிவேதிதை

காம்கேர் கே.புவனேஸ்வரி, ஓவியம்: பிரேம் டாவின்ஸி

1898 -ம் ஆண்டு. கல்கத்தாவின் ஸ்டார் தியேட்டர் அரங்கம்.ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த சபையில்தான் சுவாமி விவேகானந்தர் அந்தப் பெண்மணியை அறிமுகப்படுத்தினார்...

``இந்தியாவுக்கு இங்கிலாந்து பல நன்கொடைகளை வழங்கி உள்ளது. அவற்றுள் மிகவும் மதிப்புடையதாக சகோதரி நிவேதிதையைக் குறிப்பிடலாம். இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற இங்கே வந்திருக்கிறார். இந்தியாவைத் தன் தாய்நாடாக அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனவே, அவரை நம்முடைய உற்றார் உறவினர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வது நம் கடமை.''

அந்த அரங்கத்திலோ, பெண்மணிகளின் பிரதிநிதியாக ஒருவர்கூட இல்லை. அதைக் கண்டதுமே நிவேதிதைக்கு நம் தேசத்துப் பெண்களின் நிலை புரிந்துவிட்டது. அதேநேரம், `இங்கிலாந்தில் இருந்து வந்திருக்கும் இவர் எங்கே நம் தேசத்தைப் புரிந்துகொண்டு சேவை செய்யப்போகிறார்... ஒருவேளை தன் மத பிரசாரத்துக்காக வந்திருக்கிறாரோ’ என்றெல்லாம் அரங்கில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டதை அவர்களுடைய முகபாவனையில் இருந்தே நிவேதிதை  தெரிந்துகொண்டார்.

மெல்லிய புன்னகையோடு அந்த அரங்கத்தில் பேச ஆரம்பித்தார் நிவேதிதை. அந்தப் பேச்சு அவர்களின் ஐயத்தைப் போக்கியது; அவரிடத்தில் நம்பிக்கையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது.

``உங்களுடைய கலாசாரமும் பண்பாடும் மிகத் தொன்மையானது. கடந்த ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் அதைக் கட்டிக் காப்பாற்றி வருகிறீர்கள். சுவாமிஜி இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்பு, எங்கள் மக்கள் இந்தியாவைப் பற்றி மிகத் தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள். மதப் பிரசாரகர்கள் புகட்டியதை எல்லாம் அவர்கள் நம்பினார்கள். பலர், இந்தியாவைப் பற்றி விபரீத கட்டுக்கதைகளை எல்லாம் பரப்புகின்றனர். ஆனால், இந்தியாவின் சிறப்புகளைப் பற்றிப் பேசுவதற்கு ஒருவருமே இல்லை.

ஐரோப்பா கண்டம் இன்று செல்வத்தில் திளைத்துக்கிடக்கிறது. வெற்று மோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது. ஆனால், எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த எண்ணங்களிலுமே நிலையான இன்பம் நிறைந்திருக்கும் என்பதை இந்தியாவிடம் இருந்து ஐரோப்பா அறிந்துகொள்ளும் காலம் விரைவிலேயே வரும். அதற்கு முன்னோட்டமாக அமைந்துவிட்டது சுவாமிஜியின் ஐரோப்பிய விஜயம்.''அரங்கத்தில் ஒலித்த கரவொலி,  நிவேதிதையை நம் தேசத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டதை நிரூபித்தது.

அதற்குச் சில தினங்களுக்கு முன்புதான், மார்க்கரெட் எலிசபெத் நோபிலாக இருந்தவருக்கு தீட்சை வழங்கி, `நிவேதிதை' என்ற அற்புதமான பெயரைச் சூட்டியிருந்தார் சுவாமி விவேகானந்தர். `நிவேதிதை’ என்றால், `கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவள்’ என்று பொருள்.

சமய நம்பிக்கையும், சமூக சேவையில் ஈடுபாடும் கொண்டது நிவேதிதையின் குடும்பம். மதம் என்பது வெற்று சடங்குகளில் இல்லை; உண்மைப் பொருளை உணர்வதில்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட மார்க்கரெட், புத்த மதக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பௌத்தம் சார்ந்த நூல்களைப் படித்தார். ஆயினும், அவர் எதிர்பார்த்த தெளிவு கிடைக்கவில்லை. பிரபல கல்வியாளராக ஐரோப்பிய நாட்டவரால் பாராட்டப்பட்ட போதும், ஆன்மிகம் சார்ந்த விஷயத்தில் குழம்பித் தவித்தார். அந்த வேளையில்தான், சுவாமி விவேகானந்தரை தரிசிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick