பெரியாம்பளை

நர்சிம்

மிகச் சரியாக 12 மணி, `டொய்ங்... டொய்ங்’ என அடித்து நிற்க, வெளியே சலசலவென சப்தம். முகில் மேலேறி கண்களைச் சிமிட்டி நிற்க, தென்னங் கீற்றுகள் அசைந்து கொடுக்க, கிணற்றடியில் இருந்து மீண்டும் சப்தம்…

சட்டென அந்தக் காகிதத்தைக் கசக்கிய இன்ஸ்பெக்டர், “என்னா பெரியாம்பள, களவு போன ஜாமான் லிஸ்ட்ட கம்ப்ளைன்ட் எழுதிக் குடுக்கச் சொன்னா, என்னமோ கதை எழுதுற மாதிரி விட்டு ரப்படியா இழுத்துருக்க?”

உடன் சென்ற எங்களிடம் திரும்பி, “நீங்க பார்த்த வேல தானாடா இது?,  லிஸ்ட்ட மட்டும் எழுதிக்குடுங்கடா, ஏற்கெனவே ஊருக்குள்ள திடீர்னு இந்தத் திருட்டுப் பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு, இதுல ஒங்க லந்து வேறயா? காணாமப்போனா மட்டும்தான்டா புகார் குடுக்கணும், போயிருமோனு கதையெல்லாம் எழுதக் கூடாது, அந்தாள முழுக் கிறுக்கனா ஆக்காம விட மாட்டீங்களாடா நீங்க?”

சொல்லிக்கொண்டே தன் நாற்காலியை பின்னுக்கு நகர்த்தி எழுந்தவர், தன் அறையிலிருந்து வெளியே போகும்போது என் வயிற்றில் ஓங்கிக் குத்துவதுபோல் பாவனை செய்து, சிரித்துவிட்டுப் போனார். சட்டென பின்னோக்கி உள்ளிழுத்துக்கொண்ட அந்த அரை நொடிக்கே என் வயிற்றில் பிரளயம் நடந்தேறிவிட்டது.

பெரியாம்பளையை அங்கிருந்து நகர்த்தி தெருவுக்கு அழைத்து வந்துவிட்டோம். ஏகபோக சொத்தும், ஏழெட்டு வீடுகளும் பெரியாம்பளைக்குச் சொந்தம். முன்னொரு காலத்தில், `பெரிய ஆம்பளை’ என்று அவருடைய மூதாதையருள் எவருக்கோ இருந்த பெயர் தொட்டுத் தொடர்ந்து இப்போது கடைசியாக பரமசிவம் என்ற பெரியாம்பளையோடு முடியப் போகிறது. ஆம். இந்த ஐம்பத்தைந்து வயது வரையிலும் கட்டை பிரம்மச்சாரி. பத்து, ஏழு, மூன்று எனக் குறுகிக்கொண்டே வந்த பெரியாம்பளையின் குடும்ப மரம், சுப்ரமணியத்துக்குப் பிறந்த பரமசிவத்தோடு பட்டுப்போகப் போகிறது. திருமணமாகி வெகு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஒற்றைப் பிள்ளை என்பதால், பரமசிவத்தின் முதல் பிறந்த நாளை ஊரையே அடைத்துப் பந்தல் போட்டு, தடபுடலாகக் கொண்டாடினாராம் சுப்பு. அதுதான் பரமசிவத்தின் முதலும் கடைசியும் என்றாகிப்போன விசேஷம். ஆள் வளர வளர, மூளை அதற்குச் சரியான விகிதாசாரத்தில் வளரவில்லை என்பதை மெள்ள ஊர் உணரத் தொடங்கியது. பார்க்காத வைத்தியம் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick