கோஸூம்பேடா

ஆத்மார்த்தி, ஓவியங்கள் கண்ணா

``எனக்குன்னு ஒரு தேவதை வருவா மச்சி'' என்ற வினோத்தை வெறுப்பாகப் பார்த்தான் பீட்டர். ஐந்து வருஷமா ஒரே டயலாக்கைச் சொல்ல அவனுக்கு அலுக்காமல் இருக்கலாம். பீட்டருக்கு அலுக்காதா?

``சரிடா... உன் தேவதைக்கான எதிர்பார்ப்பு என்னன்னு சொல்லு, தேடலாம்’’ என்றால், ``தேவதையை தேடக் கூடாது மச்சி. தானா தோன்றினாத்தான் தேவதை. தேடிக் கண்டுபிடிச்சா, அது நடிகை. காத்திரு நண்பா!’’ என்று சொல்லிவிட்டு சிட்அவுட்டிலிருந்து வீட்டினுள் போய்விட்டான் வினோத்.

பீட்டருக்குத் தன் மேலேயே பரிதாபமாக வந்தது. இதென்ன பாஸ் கொடுமை? இவனென்னடா என்றால், `தேவதை இன்னும் எதிரிலேயே வரலை' என்கிறான். ஊரிலிருந்து வினோத்தின் அம்மா ஸ்பீட் வட்டியை வசூலிக்கிற சொர்ணாக்கா மாதிரி, ``இந்தா பாரு பீட்டரு... இன்னும் ஒரு மாசம் டைமு. ஒண்ணு, நாங்க சொல்ற பொண்ணைக் கட்டிக்கணும். இல்லாட்டி, யாரையாச்சும் காதலிக்கிறேனு கூட்டியாந்தாலும் சரி... இது ரெண்டுல ஏதாச்சும் ஒண்ணு நடக்கலைனு வையி... (வெற்றிலைச் சாற்றை புளிச் என்று துப்பும் சப்தம்.) உன் ரெண்டு கால்ல ஒண்ணு நடக்காத மாதிரி பண்ணிடுவேன். ஐயா உம்மேல ரொம்ப கோவமா இருக்காப்ல. புரியுதா?’’ என்று இன்னும் கிலி சேர்த்து போனை வைப்பார்.

`இதென்ன நியாயம்..? கல்யாணம் அவனுக்கு.அவன் மறுத்தால், காலை வெட்டுவது எனக்கா..?’ என்று முனகிக்கொண்டே அடுத்த கன்வின்ஸிங்கை எப்போது தொடங்கலாம் எனச் சிந்தித்தபடியே வினோத் எங்கே எனத் தேடினான் பீட்டர்.

பீட்டருக்கும் வினோத்துக்குமான நட்பு அப்படி. பீட்டர் அஞ்சாப்பு படித்தபோது, டூர் போவதற்காக காசு கேட்டபோது, அவன் டாடி, மம்மி இருவருமே, தரமுடியாது என்று திட்டி அனுப்பினார்கள். `எனக்கென்று யாருமே இல்லையா ஜீசஸ்?’ என்று கதறினபடி வறுமையின் சாலையில் நடந்துவந்த பீட்டரின் வாழ்க்கையில் எதிரே காரில் வந்து இறங்கினான் வினோத். ``நான் இருக்கேன்டா நண்பா...’’ என்று பத்து வயதில் ஜாயின் ஆன நட்பு... தன் உடல், பொருள், ஆவி, பேய் எனச் சகலத்தையும் வினோத்துக்கு அர்ப்பணித்தான். ` `எந்திரன்’ படத்தில் நடித்தது புரூஸ்லி’ என்று வினோத் சொன்னாலும்கூட, `நடிச்சது ஜாக்கி’ என்று உப பொய் சத்தியம் செய்யும் அளவுக்கு பிரதம அடிமை பீட்டர்.

அவனுக்கு ஒரே பிரச்னை, வினோத் `யாரையாவது கல்யாணம் செஞ்சுக்கிறேன்’ என்று சொன்னாலொழிய, வினோத்தின் வீட்டிலிருந்து விதவிதமான டோன்களில் அவனுக்கு வரக்கூடிய அசரீரி கால்ஸ் வரத்து நிற்காது என்பதுதான். சொன்னால் கேட்காத வினோத், தானாகச் சிரித்துக்கொண்டு, `தேவதை... தேவதை’ என்று கழுத்தை அறுக்கிறான். இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகு, ஒற்றைக் காலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று பீட்டருக்கு கிலி.

இதற்கடுத்த பத்தாவது நாள் வினோத்தின் அபார்ட்மென்ட் வீட்டுக்கு எதிர்வரிசை வீட்டுக்கு ஒரு குடும்பம் குடிவந்தது. அடுத்த நாள் காலை, பால்கனியில் நடந்துகொண்டே ஹெட்போனில் பாட்டுக் கேட்டவளைப் பார்த்ததும், பீட்டரின் தொடையை நறுக்கென்று கிள்ளினான் வினோத். துள்ளினான் பீட்டர். கீழே லேண்ட் ஆனவன், ``ஏன்டா கிள்றே?’’ எனக் கேட்டான்.

``மைகாட்... மச்சி, அங்க பார்றா என் தேவதை’’ என்றான் வினோத்.

கரகரவென்று இரண்டு கண்களில் இருந்து சொம்பு சொம்பாகக் கண்ணீர் சுரந்தான் பீட்டர்.

``கடவுள்னு ஒருத்தன் இருக்கானோ, இல்லையோ... ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான் மச்சி’’ என்றபடியே அந்தப் பெண் இருக்கும் திசை நோக்கி ஒரு நமஸ்காரத்தை செய்துவிட்டு, வினோத்தின் அம்மாவுக்கு லாங் கால் செய்வதற்காக வேறிடம் போனான்.

அடுத்த நாள் தெரியவந்த முதல் தகவலே ஜிலேபியாக இருந்தது. ``அவள் பெயர் ப்ரீத்திகாடா’’ என்றான் வினோத்.

இதற்கும் மகிழ்ந்த பீட்டர், ``யப்பாடி... இனி தேவதை தேவதைனு அறுக்க மாட்டேல்ல..?’’ என்றான்.

முதலில் முறைத்த வினோத், பிறகு சிரித்தான்.காதல், காய்ச்சல், இத்யாதிகள் அதிகரித்து, முக்காலங்களை மறந்து, கோமா ஸ்டேஜில் தன் ஏழு ஜென்மங்களை ப்ரீத்திகாவின் காலடியில் சமர்ப்பித்தபடியே இரவு முழுக்க விழித்திருந்தான். சாவித்திரி கல்யாணம் முடிந்த திருப்தியில் தூங்குகிற, `பாசமலர்’ சிவாஜி மாதிரி சாந்தமாகத் தூங்கிக்கொண்டிருந்த பீட்டரை எழுப்பினான்.

எரியும் கண்களைத் திறந்தவனிடம், ``மச்சி எப்பிடி ஸ்டார்ட் பண்றது... கொஞ்சம் சொல்லேன்’’ என்றான் வினோத்.

`தன்னை ஏன் பெற்றார்கள்?’ என்று நொந்தபடி விழித்தான் பீட்டர். ஒரு பெண்ணை அப்ரோச் செய்வதற்கு உண்டான சிலபல சூத்திரங்களைத் தன்னாலான அளவுக்கு லோட் செய்து அனுப்பிவைத்தான்.

``சந்தர்ப்பத்தை எதிர்பார்க்காதே... உருவாக்கு’’ என்கிற பீட்டர் வாக்குக்கேற்ப, ஜாகிங் செல்லும் சாக்கில் முதல் தரிசனத்தை ஏற்படுத்திக் கொண்ட வினோத், முகத்தை இடுப்பு வரைக்கும் தொங்கல்ஸ் பண்ணிக்கொண்டு வந்து சேர்ந்தான்.

``என்ன மச்சி, பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எதுவும் எடுத்தியா? மோகன் படங்கள்ல காதல் கைகூடி வர்றப்ப, கூடவே வருமே... அந்த மாதிரி இருமி மட்டையாகிற வியாதி இருக்குனு சொல்லிட்டாங்களா?’’ என்று கேட்ட பீட்டரை முறைத்தான்.

``நீ சொன்னாப்லயே ஜாகிங் போற சாக்குல ஸ்மைல் பண்ணி, இன்ட்ரோ ஆகி, நல்லாத்தான் போச்சு... ஒரு போன் கால் வந்து பேச ஆரம்பிச்சா மச்சி. முக்கா மணி நேரம் விடாம ஒரே காலை பேசிக்கிட்டிருக்கா...’’

``அதுல என்ன மச்சி... பில்லு பத்தி கவலைப்படுறியா..? பூஸ்டர் பாக் ஏதாச்சும் போட்டுகினா பத்தாது?’’

``சனி பிடிச்ச ஞாயிறே... (அது இல்ல ப்ராப்ளம். காசா பிரச்னை?) மொத்த முக்கா மணி நேரமும் கன்னடத்துல மாத்தாடினா. ஒரு வார்த்தைகூடப் புரியலை. தமிழே தெரியாதவளை எப்பிடிடா கரெக்ட் பண்றது?’’ என்றான் பரிதாபமாக.

``பிடிச்சான் பாரு ஒருத்தியை... என்றவன், சின்ன ஸ்பேஸ்கூட விடாமல், ``மாத்தாடு மாத்தாடு மல்லிகே...’’ என்று சொல்லி, காணாமல்  போனான்.

அன்று மாலை, எங்கோ வெளியே போய்விட்டு வந்த பீட்டர், வினோத்தின் முகவாய்க்கட்டையை திருப்பினான். ``விசாரிச்சேன் மச்சி. நீ பயந்தது மெய்தான் போல... உன் ஆளுக்கு தமிழ்ல, `தமிழ்’ங்கிற ஒரு வார்த்தை மட்டும்தான் தெரியுமாம்...’’

``எனக்கு இப்பிடி ஒரு வில்லனா?’’ என்றான் சுய இரக்க வினோதன்.

``யாரந்த வில்லன்? சொல்லு... அவனை கைமா பண்ணிடறேன்.’’ டி.வி வால்யூமைக் குறைத்தான் பீட்டர்.

``மொழிடா... கன்னடம். அதான் அந்த வில்லன்.’’

கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்க முயன்றான் பீட்டர்.

``இப்ப என்னப்பா... வழக்கம்போல ஒரே டயலாக்தானே... அவ உனக்காகவே பிறந்து வந்தவ மாதிரி இருக்கா. அவ இல்லாட்டி நீ செத்துருவ... இதான..?’’

இப்போது நிஜமாகவே கோபமானான் வினோத்.

``அந்த வெங்காயமெல்லாம் இல்லை.உடனடியா நாம கன்னடம் கத்துக்கணும்.அதிகபட்சம் ஏழு நாள்ல. யாரையாச்சும் பிடி.’’

திடுக் என்றான பீட்டர், ``உனக்கு வேணும்னா நீ கத்துக்கடா. என்னை என்ன எர்வாமாடினுக்கு கத்துக்கச் சொல்றே... நான் பச்சைத் தமிழன்.தெரிஞ்சிக்க.’’

``அடேய்... நான் மட்டும் கத்துக்கிட்டு, எனக்கு நானேவா பேசிக்க முடியும்? நீ அவசியப்படறே மாப்ள. காதல்ல நண்பனோட தியாகம்தான் ஃபர்ஸ்ட் ஹாஃப்.’’

பீட்டர் கவலையானான். கன்னடத்தில்... ஸாரி, கன்னத்தில் கை வைத்துக்கொண்டான்.

மறுநாள் காலை. ரிமோட்டை எடுத்து, ``ஏன் சன் டி.வி வரலியா?’’ என்று தேய்த்த பீட்டரிடம் இருந்து, மறுபடி ரிமோட்டைப் பிடுங்கினான் வினோத்.

``நோ மச்சி... நாம இனிமே கன்னட சானல்ஸ் மாத்திரம்தான் பார்க்கறோம்’’ என்றவனை முறைத்தான் பீட்டர்.

``என்மேல கோபப்படாத... அவளுக்கோ தமிழ் வரலை, தெரியலை. நான் மட்டும் கன்னடம் கத்துக்கினேனு வையி... எங்களை அந்தக் கன்னடமே ஒண்ணு சேர்க்கும். காதல் கைகூடுறதுதான் மச்சி முக்கியம். எந்த மொழியில கூடுனா என்னன்றேன்..? கடல் நடுவுல பாலம் கட்றா மாதிரி கன்னடம் கத்துக்கறேன் நான்.அவளை ஈசியா இம்ப்ரஸ் பண்றதுக்கு இதுதான் வழி. `நமக்காக இவன் இவ்ளோ கஷ்டப்பட்டு, இத்தனை சீக்கிரம் நம்ம லாங்குவேஜைக் கத்துக்கினானே’னு அவ உருகணும். என் காதல் என்னானு சொல்லாம ஏங்க ஏங்க...’’ என்று `குணா’ கமல்போல் பேசினான் வினோத்.

`எனக்கு லட்டும் வேணாம் ஒண்ணியும் வேணாம்...’ என்று சொல்ல ஆசைப்பட்டு முடியாத ஜனகராஜாக மௌனித்தான் பீட்டர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick