கங்கைக்கரைத் தோட்டம்

பாவண்ணன், ஓவியம்: ஸ்யாம்

கீரையை தனித்தனியாகப் பிரித்து கட்டுப்போட்டபடி ``திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...” என்று மனம்போன போக்கில் அம்மா முணுமுணுத்த பாட்டு திண்ணையில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த எங்களுக்குக் கேட்டது. வீட்டுக்குப் பின்னால் இருந்த தோட்டம் முழுவதையும் பாத்திகளாகப் பிரித்து கீரை பயிரிட்டு வைத்திருந்தார் அம்மா. அரைக்கீரை, முளைக்கீரை, வெந்தயக்கீரை என ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொருவிதமான கீரை. வேலியோரத்தில் நான்கு முருங்கை மரங்களும் இரண்டு கறிவேப்பிலை மரங்களும் அடங்கும். ஆட்டுப்புழுக்கைகளை உலரவைத்து இடித்துப் பொடியாக்கி மண்ணோடு கலப்பதிலிருந்து சாம்பல் தூவுவது வரைக்கும் எல்லா வேலைகளையும் அவரே செய்தார்.

கட்டுகளையெல்லாம் ஒரு பெரிய பைக்குள் அடுக்கிவைத்துவிட்டு நிமிரும்போதுதான் அம்மாவின் பாட்டு நிற்கும். மறுகணமே கைவிரல்களை மடக்கி நீட்டி நெட்டி முறித்தபடி ``வாங்கடா, வந்து எடுத்துட்டு போங்க” என்று பொதுவாக அம்மா எங்களை அழைப்பார். வீட்டுப்பாடத்தை எழுதியபடியோ அல்லது ஆங்கிலச் செய்யுளுக்கு ஸ்பெல்லிங்குகளை மனப்பாடம் செய்தபடியோ உட்கார்ந்திருக்கும் நானும் தம்பியும் அந்தத் தருணத்துக்காகவே காத்திருப்போம்.

ராக்கெட் வேகத்தில் பறந்து சென்று அந்தப் பையைத் தூக்கிக்கொள்வோம். அம்மா சொல்லும் வீடுகளுக்குச் சென்று அவர்கள் கேட்கும் கட்டுகளைக் கொடுத்துவிட்டு பணத்துடன் திரும்பி ஓடிவருவோம். நாலு கட்டு ஒரு ரூபாய் என்பது அம்மாவின் கணக்கு. பணத்தை எண்ணி வாங்கிக்கொண்ட பிறகு அம்மா ஆளுக்கு பத்து பைசா கொடுப்பார். நாங்கள் அதைப் பத்திரமாக வைத்திருந்து பள்ளிக்கூட இடைவேளை நேரத்தில் மள்ளாட்டை உருண்டையும் தேன்மிட்டாயும் வாங்கி நாக்கில் வைத்து கரையும் வரைக்கும் சுவைத்தபடி மயக்கத்தில் திளைத்திருப்போம்.

கீரைக்கட்டுகளோடு ஒருநாள் நாங்கள் புறப்படும் சமயத்தில் “அந்தத் தோட்டத்து ஊட்டுக்கு மொதல்ல எடுத்துட்டுப் போங்கடா. அதுக்கப்பறமா மத்த ஊடுங்களுக்கு போங்க” என்றார். “யாரும்மா அவுங்க? அந்த ஊட்டுக்கு புதுசா வந்திருக்காங்களா? நீ எப்ப பார்த்தே?” என்று ஆர்வத்தோடு கேள்விகளைக் கேட்டபடி அம்மாவைப் பார்த்தான் தம்பி. “யாரோ மாயவரத்துக்காரங்களாம்டா. புதுசா வந்திருக்காங்கபோல. நேத்து கோயில்ல பாத்துட்டு தெனமும் குடுங்கன்னு சொன்னாங்க” என்று பதில் சொன்னார் அம்மா.

எங்கள் தெருவிலேயே உயரமான மதில்களும் வீட்டுக்கு முன்பக்கத்தில் பெரிய தோட்டமும் இருந்த வீடு அது ஒன்றுதான். அதனாலேயே அந்த வீட்டுக்கு `தோட்டத்து வீடு’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. ரொம்ப பெரிய தோட்டம். வாசலில் இருக்கும் இரும்பு கேட்டைத் திறந்தால், வீடே கண்ணுக்குத் தெரியாது. ரொம்பவும் பின்னால் ஏதோ காட்டுக்குள் இருப்பதுபோல, அந்த வீடு தெரியும். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்  எப்போதோ பாண்டிச்சேரிக்குப் போய்விட்டார். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை யாராவது மாறிமாறி வாடகைக்கு வந்து தோட்டத்து வீட்டில் குடியிருந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick