பிறந்த நாள்

தமிழ்மகன், ஓவியம் கார்த்திகேயன் மேடி

சிந்து எனக்கு கேக் ஊட்டிய நேரத்தில் செல்போன் அடித்தது. மகனும் மகளும் இன்னமும் ‘ஹேப்பி பர்த்டே டாடி’ பாடிக் கொண்டிருந்தார்கள். கேக்கை விழுங்கிவிட்டு, செல்போனை எடுக்கலாம் என நினைத்தேன். அதுதான் இமாலயத் தவறு.

செல்போனில் அழைத்தது எம்.டி. அவசரமாக வாயைத் துடைத்துக்கொண்டு போனை எடுப்பதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. எம்.டி தேவையில்லாமல் அழைக்க மாட்டார். மிக அவசரமான வேலையாக இருந்தால்தான் அழைப்பார். நாகரிகமாகத்தான் பேசுவார். ‘உன்னை ஏதும் டிஸ்டர்ப் பண்ணவில்லையே? ஒரு ஹெல்ப் வேணும்’ இப்படித்தான் பேசுவார். ஒருபோதும் எம்.டி அழைத்து, எடுக்காமல் விட்டதே இல்லை. `எதற்கு அழைத்தாரோ, என்ன அவசரமோ...’ என வேகமாக மனதில் ஓட்டிப் பார்த்தேன். `கேக் சாப்பிடுகிற ஆசையில் போனை எடுக்காமல் விட்டுவிட்டோமே, என்ன நினைப்பாரோ’ என்ற புதிய கேள்வியும் மனத்தில் உதித்தது. உப கேள்விகள் பிறந்து ஏகப்பட்ட கொக்கிகள் நியூரான் எங்கும் நிரம்பி, குப்பென்று வியர்த்தது.

உடனே அழைத்தேன். போன் எங்கேஜ்டாக இருந்தது. `மறுபடி நம்மைத்தான் அழைத்துக் கொண்டிருக்கிறாரோ... அவருக்கும் எங்கேஜ்டு டோன் வருமே... நாம் அலட்சியமாக வேறு யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதாக நினைத்துவிட்டால்..?’ போனை அப்படியே வைத்துவிட்டுக் காத்திருந்தேன். வியர்வை அதிகமாகிக் கொண்டிருந்தது.

என் மனைவி சிந்து, கிராமத்துப் பெண். என்னைச் சார்ந்தே யோசித்துப் பழக்கப்பட்டுப் போனவள். கணவனுடைய அதிர்ச்சியோ, பயமோ அவளை உடனடியாகப் பாதித்துவிடும். நான் பயப்படும் அளவுக்கு சற்று கூடுதலாகவே பயப்படுவாள். ‘ஊருக்கே போயிடலாங்க’ என்கிற அளவுக்குப் போய்விடுவாள். ஆனால், நான் மகிழ்கிற அளவுக்கு மகிழ்கிற பழக்கம் அவளுக்கு இல்லை.

பெரியவனுக்கு அம்மா குணம்தான், அவனும் அப்பா மீண்டும் இயல்பு நிலைக்கு மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தான். சின்னவளுக்கு இன்னமும் யாருடைய குணம் என்பதை அத்தனை ‘சுகுராக’ வரையறுக்க முடியவில்லை.

ஒட்டுமொத்தக் குடும்பமும் எம்.டி இப்போது எதற்காக அழைத்தார் என்ற குழப்பத்தில் இருந்தது. ‘‘ஏம்பா போன் பண்ணா எடுக்க மாட்டியா?” என கொஞ்சம் டோஸ்விட்டு விட்டு வைத்துவிட்டாலும் போதும் என்றிருந்தது.

பேசாமல் காத்திருப்பதுதான் நல்லதென்று காத்திருந்தேன். மனைவியும் குழந்தைகளும் மகிழ்ச்சியான நேரத்தில் அப்பாவுக்கு இப்படி ஒரு சங்கடம் ஏற்பட்டுவிட்டதே என ஸ்தம்பித்துப் பார்த்திருந்தனர். நான் எம்.டி போனுக்கு எப்படிப் பயப்படுவேன் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick