பெய்துகொண்டிருக்கும் மழை

அகரமுதல்வன், ஓவியம் அணில் கே.எஸ்

ழை சற்று ஓய்ந்திருந்த நேரம். இராணுவத்தின் பேருந்தொன்று வைலா பாடலோடு மிகவேகமாகச் சென்றது. வீதியில் மட்டுமல்ல, நம் விதியிலும்தான். அவள் எனக்குப் பின்னால் நடந்து வந்துகொண்டிருக்கிறாள். நான் சாதுவாக கழுத்தைத் திருப்பி நடந்துவரும்   அவளைப் பார்த்தேன். பல்லக்கில் தூக்கிச் சுமக்கும் லட்சணம். பூமியின் துக்கத்தைத் தேயச்செய்யும் வளர்பிறைச் சிரிப்பு. நான் பார்க்கிறேன்  என்பதைத் தெரிந்துகொண்டு தன்னை அலட்சியம் செய்து நடந்தாள்.  அது அழகின் பிதற்றல். நான் தலையை நேராகத் திருப்பி நடந்தேன். அவளின் நடை வேகம் கூடியது. வேகம் என் செவிகளில்பட்டது.  தனது காலில் அணிந்திருந்த செருப்பை வீதியில் உரசி நடந்தாள். தன்னைத் திரும்பிப் பார் எனும் அவளின் அதிசயக் கட்டளையது.

நினைவு திரும்பிய மனநோயாளி ஒருவனின் பரவசம் எனக்கு. பெய்து அடங்கிய மழை, கூச்சலிட்டுப்  பெய்வதைப்போல ஆனந்தம். அலையில் கரை திரும்பும் வெளிச்சத்தின் சாயையில் அவள் என்னை வேகமாக நெருங்கினாள். நாலு திசைகளிலும் இருந்து இனிமையான ஆச்சர்யங்கள் சீட்டியடித்தன.  கதைக்க உன்னிய வார்த்தைகள் முழங்கித் தகர்ந்தன. வெயில் எரிக்கத் தொடங்கியது. தேகம் குளிர்ந்து சொர்க்கத்துக்கு  சமானமாய் ஒளி சிந்தியது.

“மலரவன் நாளைக்கு விடிய ஆலமரக் கோயிலில சந்திக்கிறம் சொல்லிட்டேன், வந்திடுங்கோ.’’ அவளின் கடுமையான தொனி.

எனக்குள் சந்தோஷம் சப்தம் எழுப்புகிறது. பிரியமானவளின் கோபங்களில் கதகதப்பு கவிந்திருக்கிறது. நான் அதனை மறுக்கவில்லை. காதலில் சந்திப்புகளை மறுப்பது முட்டாள்தனம். அவள் எனக்கு முன்னால், வழக்கமான நடையைவிட வேறொன்றாய்  நடந்து மறைந்தாள். நாளை அவளை சந்திக்கவேண்டும் என்பது என் ரத்த நாளங்களில் பதியமிடப்பட்டது. ஓவென்று இரைந்து காற்றுச் சுழலச் சந்திப்பின் ஏக்கத்தில் இரவு சுருங்கியது.

அவள் பெயர் நளினா. தடதடவென்று படியேறும் பஞ்சுமுடிப் பூனைக் கண்கள். நிலத்தில் இருந்து வெளிக்கிளம்பும் புளியங்கன்றின் இலைகளைப்போல மிருதுவான செவிகள். கண்டு உணர்ந்து
கொள்ள முடியாத அர்த்தம் அவளின் கழுத்து. அருள் தீண்டும் அழகு. எரிந்தடங்கிய நூல் திரியின் நுனிக் கறுப்பு அவள். நான் திரிமூட்டும் தீ.

ஆலமரக் கோயிலிலேயே எனக்கு விடிந்துவிட்டது.

நளினா வந்தாள். கையில் ஆய்ந்த பூக்களைக் கொண்டுவந்து வீரபத்திரருக்கு வைத்தாள். என்னை அருகில் வரும்படி அழைத்தாள். ஆலமரத்தின் கீழே முழு விடியலும் இன்னும் படரவில்லை. நிரம்பிக்கிடக்கும் மங்கலில் அவளருகே போய் நின்றேன். தனது கையில் திருநீற்றை அள்ளியெடுத்து, என் நெற்றியில் பூசினாள். சட்டென்று முத்தமிட்டு உதட்டில் எரிந்தாள். எனக்குள் காடெரியும் சத்தம். கிளை பரப்பி செழித்து நிற்கும் ஆலமரத்தின் கீழே கிளைவிரித்து, என் வேர் அசைத்தாள். அடர்ந்த பூமியின் வெளிச்சம் எங்கெங்கும் படர்ந்தது. அவளுக்குள் காதலின் தகிப்பு முத்தங்களாய் கொலுவிருந்து இந்தக் காலையில் சன்னதம் கொண்டது. என்னை அவள் துயரங்களிலிருந்து கத்தரித்தாள்.

“மலரவன்...”

இமைகள் தாழ்த்தி என்னைக் கூப்பிட்டாள்.  நான் அவளின் மடியில் கிடந்தேன். விடியற்காலையின் சத்தம் நிரம்பியோடின. இயற்கையின் கண்களில் பொறாமை முட்டும்படியாய் நளினாவை முத்தமிட்டேன்.  சாரல் தணிந்த மழையின் துளிகள் இலையிலிருந்து சரிந்ததுவாய் என்னிலிருந்து அவளின் சொண்டுக்கு முத்தங்கள் கனிந்தன.  காலகாலத்துக்கும் முத்தங்களுக்கே கண்
கூசும்படி நிதானமாகக் கனிந்து அளித்தேன். அவள் நிமிர்ந்திருந்து வெட்கித்தாள். காற்றில் ஆடும் குப்பிவிளக்கின் சுடரைப்போல நெளிந்து உடைந்து கேட்டாள்.

``இது நாங்கள் சந்திக்கும் 86-வது சந்திப்பு, நினைவிருக்கா உங்களுக்கு?’’

முழுப் பிரகாசத்துடன் சிரித்து, ``இல்லை’’ என்றேன்.

``அதானே பார்த்தன். அதை எங்க நினைவில வைச்சிருக்கப்போறியள்?’’ என்று பேசியபடியே குனிந்து மூக்கைக் கடித்து “கள்ளா” என்றாள்.

இது மகோன்னதமான பித்தைத் தருவிக்கும் காதலின் பட்டமளிப்பு. காற்றே நுழையாமல் புல்லாங்குழலின் துளைகளில் இருந்து கீதம் எழுவதைப்போலான இன்பம், நளினா என்னை `கள்ளா’வென அழைப்பது. அவளின் மடியிலிருந்து எழுந்தேன். சொர்க்கம் உதிர்ந்த உணர்வு எனக்கு. அற்புதங்களுக்கு ஆயுளில்லை. நன்றாக விடிந்த பூமியின் கதிர்கள் ஆலமரத்தின் கிளைகளுக்குள்ளால் எம்மை அடைந்தன. நளினா எழுந்தாள். நேற்றைக்குப் பிடித்த சண்டை குறித்து எதுவும் கதைக்கவேயில்லை. காதலில் நிகழும் எல்லாக் கசப்புகளுக்கும் முத்தங்கள் தீர்வைத் தருகின்றன. நளினாவுக்கும் எனக்கும் நேற்றைக்கு நடந்த சண்டை இடியிறங்கும் அளவிலாக மாறியிருந்தது.

அவளுக்கு இயக்கம் மீது இருக்கும் விமர்சனங்களை  எல்லாம் என்னோடு பகிர்ந்து கொண்டேயிருப்பாள். சில இடங்களில் இயக்கம் எடுத்த முடிவுகள் குறித்துக் காட்டமாக விவாதிப்பாள். நேற்றைக்கும் இப்படித்தான் ஏதோ கதைக்கத் தொடங்கி, இறுதியில் கடுமையான சண்டையில் வந்து முடிந்தது. இந்தக் காலை அதனை மறந்தது. அவள் முத்தங்களோடு விடைபெற்றாள். வீரபத்திரருக்கு அவள் வைத்த பூக்களாக நான் மலர்ந்திருந்தேன். பல்லாயிரம் தங்க நாணயங்கள் உருண்டோடும் வீதியில் நடந்துசெல்பவனாக வீடு நோக்கி நடந்தேன். வீதியில் எவருமில்லை. அது பிரமையின் வேஷம். நளினாவின் நெருக்கம் தந்த தகிப்பின் லயம். நீலவானத்தின் பல் இளிப்பு வெள்ளனவே சுட்டது.  படலையைத் திறந்து வீட்டுக்குள் போனேன். அம்மாவின் படத்துக்கு முன்னால் விளக்கெரிந்து கொண்டிருந்தது. அம்மாவின் முகம் விளக்கொளியில் இரைவதைப் போல இருந்தது. அணைத்தேன்.
          
அம்மாவுக்கு முகமெல்லாம் பிரகாசக் களை. அவளின் நெஞ்சிலேன் மரணம் ஏறியது? சாவின் களேபர ஓசை எனக்குள் படியேறிக் கொண்டேயிருக்கிறது. இறந்தவரை நினைத்துக் கொண்டிருக்கும்போதே இறந்துபோகுமொரு நிலத்தில் இறந்தவருக்காக இடிந்துபோய் அழுவது பாழ். கண்களை மூடி, பாயை விரித்தேன். அம்மா அதீதமாய் அழுவதைப் போல சத்தம். நான் கண்களை இறுக மூடி சுவரைப் பார்த்து சரிந்து படுத்தேன்.

நளினாவும் வீட்டுக்குச் சென்றிருப்பாள். அவளின் வீடு, கிழடு தட்டிய கூரைகளைக் கொண்டது. அவளின் கனவுகளில் பாம்புகள் நெளிய அதுவும் ஒரு காரணம். நிச்சயமாக அவளுக்கு இயக்கத்தைப் பிடிக்காது. ஆனால், அவளின் அக்கா மாவீரர் என்பதனைச் சொல்லும்போது ஒருமுனைப்படுத்தப்பட்ட நிமிர்வு அவளிடம் இருக்கும். வீட்டில் இருக்கும் போது நிறைய சினிமா பாடல்களைப் பாடுவாள். அவள் குரலில் எப்போதும் குளிர்காலம். உற்சாகம் கொப்பளிக்கப் பாடும் சில சினிமா பாடல்களுக்கு அவளே வரிகளைப் போட்டு பாடிவிடுவாள். அவளின் மனப்பரப்பின் சூழலைப் பொறுத்த வரிகளாகப் பிறக்கும்.

“நினைத்து நினைத்துப் பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்...”


பாடலை ஒருநாள் பாடிக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும், குரலைத் தாழ்த்தி, இழைந்து வந்ததை நிறுத்தினாள். அவளருகே போய், ``பாடும்...’’ என்று சொன்னேன். அவள் கண்கள் என்னை மோகித்து நெருங்கின.அது ஓர் உண்மையான தாபத்தின் நகர்வு. பாடினாள். நீர்ப்பரப்பில் எழும் அம்மன் சிலையின் சாயலில் இருந்தது அவளின் முகம். 

“நினைத்து நினைத்துப் பார்த்தேன்
நெருங்கி நெருங்கி வந்தேன்
உன்னால் தானே நானும் தழல்கிறேன்...”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick