அப்பா சொல்லாத கதை

வாஸந்தி, ஓவியம்: மனோகர்

 

லிஃப்ட்டுக்குள் யாருமில்லை நல்லவேளை. அவளுக்குத் தனியாக அதற்குள் நிற்பது பிடிக்கும். யாருடைய பார்வையிலும் இல்லாமல் ஏகாந்தமாக அதனுள் சுழலும் மின்விசிறியின் கீழ் நிற்பதற்குப் பிடிக்கும். வெளியில் இருந்த வெப்பமும் புழுக்கமும் அதன் அடியில் காணாமல் போகும். பிரபஞ்சமே காணாமல் போகும். சற்று நேரத்துக்கு அந்தத் தனிமை ஒரு விடுதலை உணர்வை ஏற்படுத்தும். சில நொடிகள்தான் அது என்பதுதான் சோகம். விறுவிறுவென்று ஒன்பதாம் தளத்துக்கு அது விரைந்துகொண்டிருந்தது. அதை நிறுத்த வேண்டும் என்று அவளுக்குப் பரபரத்தது. மறுபடி ஜீரோவை அழுத்தி, திரும்பிச் சென்றுவிடலாம்.  வராமலேயே இருந்திருக்கலாம். ஆனால், முடியவில்லை. உள்மனம் அவளை, `போ... போ...’ என்று கழுத்தில் கைவைத்துத் தள்ளியதை வெளியில் சொல்ல முடியாது. பதுங்கியிருந்த வேதாளங்கள் எல்லாம் அவளைத் துரத்த ஆரம்பித்திருந்தன. அடிவயிற்றை ஒரு பயம் கவ்விற்று. எத்தனை முட்டாள் நான்!
முட்டாள்... முட்டாள்... 

ன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது...  சரியாக நான்கு மணிக்கு.ஹேமாவும் பாலுவும் பள்ளியிலிருந்து வரும் நேரம். அவளுக்குப் பதிலாக, அவர்களைப் பேருந்து நிலையத்தில் இருந்து அழைத்து வர அப்பா செல்வார். சுமதி இந்தப் பழக்கப்பட்டுபோன ஏற்பாடு தந்த நிம்மதியில் வேலையில் ஆழ்ந்துபோனாள். வேலைக்குச் செல்லும் அம்மாவுடன் இருந்த நெருக்கத்தைவிட, அப்பாவிடம்தான் அதிக நெருக்கம் என்பதற்கு என்ன காரணம் என்று அவள் ஆராய்ந்தது இல்லை. அம்மா எப்போதும் ஓர் அவசரத்தில் இருப்பாள். ஆபீஸுக்குக் கிளம்பும் வரை வீட்டுவேலை; பிறகு ஆபீஸ். வீடு வந்ததும், இரவு சமையல். 9 மணிக்குள் அம்மா களைத்துப்போவாள். அவளுடன் பேசக்கூட நேரம் இருக்காது. அப்பா, அவளது அந்தரங்கத் தோழர் ஆனார். தினமும் மாலையில் பார்க்குக்கு அழைத்துச் சென்று கதைகள் சொல்வார். பஞ்ச தந்திரக் கதைகளை நாடக பாணியில் அவர் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு சொல்லும்போது, அவளுக்குக் குபீரென்று சிரிப்பு வரும். இப்பவும் நினைவு வரும்போது சிரிப்பு வந்தது. அப்பா மிகப் பெரிய நடிகர் என்று தோன்றியது.  

நிறையக் கோப்புகள் மேஜை மேல் இருந்தன. அவற்றின் மேல் அப்பா அமர்ந்திருந்தார். அவள் புன்னகையுடன் அவரை நகர்த்தினாள்.

ன்பதாம் தளத்தில் லிஃப்ட் தம்மென்று நின்று வாயைப் பிளந்தது. அவள் தயக்கத்துடனேயே வெளியில் காலை வைத்தாள். வலப்பக்கம் திரும்பினாள் சொல்லியிருந்தபடி.  ஃப்ளாட் நம்பர் 901 கண்ணில்பட்டது. மார்பு படபடத்துக்கொண்டு வந்தது. திரும்பி விடலாமா என்று யோசனை வந்தது.  காலையில் அவளது கைபேசியில் அந்த அழைப்பைப் பார்த்ததுமே லேசாகப் பதறியது. `நேரத்தை வீணாக்காம வா. இல்லேன்னா வருத்தப்படுவே.’

பழைய நினைவுகள் எல்லாம் புயலைப்போல சீறிக்கொண்டு அவளை அமுக்கின. அவமானமா, ஆத்திரமா, துக்கமா எனப் புரியாத உணர்வு அது. கேடுகெட்ட உணர்வு. இயல்பான வாழ்க்கைக்கு நடுவில், திடீரென்று பூதம்போல எழுந்து அவளை நிலைகுலையவைக்கும் நினைவு. அதை அழிப்பது சாத்தியமா?

அவள் தன்னை சுதாரித்துக்கொண்டாள்.

மூச்சை ஒருமுறை இழுத்து சுவாசித்து, அழைப்பு மணியை அழுத்தினாள்.

‘ஆபீஸ் போய் சேர்ந்தாச்சா?’ அப்பாவின் குறுஞ்செய்தி. அவளுக்குச் சிரிப்பு வந்தது.  எல்லா நிலைகளிலும், அவளது வாழ்வை அப்பா ஆக்கிரமித்திருந்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனான பிறகு, வேறு சிநேகிதம் வைத்துக்கொள்ள ஆரம்பித்த  வாசுவை விவாகரத்து செய்தபோது, அம்மாவைவிட அதிக ஆதரவு கொடுத்தவர். நிலைகுலைய வைத்த நாட்கள் அவை. மண வாழ்வில் விரிசல் விழ ஆரம்பித்திருப்பதை உணராத ஞான சூன்யத்துடன் அவள் இறுமாந்து இருக்கும் வேளையில், அவனது வெளி உறவைப் பற்றித் தெரியவந்ததும் ஒரு கணம் நம்பக்கூட முடியவில்லை. மனசில் மூண்ட கோபத்தை அடக்க முடியவில்லை. எதிர்பாராத தருணத்தில் மலை முகட்டில் இருந்து தள்ளப்பட்டதுபோல் இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியாது என்று தோன்றியது.

‘`பேசிப்பாரு சுமதி” என்ற அம்மாவிடம் மகா கோபம் வந்தது. 

‘`அத்தனை ரோஷம் கெட்டவ இல்லை அம்மா நான். அவனோடு இனிமே சேர்ந்து எப்படி இருக்க முடியும்? எனக்கும் படிப்பிருக்கு; உத்தியோகம் இருக்கு; சமாளிச்சுப்பேன்.”

அம்மா வாயை மூடிக்கொண்டாள். ஆனால், அப்பா உடனடியாக ஆறுதல் அளித்தார்.   

“நாங்க இருக்கோம்... கவலைப்படாதே!”

அவர் மட்டும் இல்லையென்றால் இயல்பு வாழ்க்கை திரும்பியிராது.

அப்பாவுக்கு பதிலுக்கு ஒரு ஸ்மைலி அனுப்பினாள்.

தவு உடனடியாகத் திறந்தது. ராமமூர்த்தி பளிச்சென்ற புன்னகையுடன் நின்றிருந்தார்.  அவர் போட்டிருந்த வாசனைத் திரவியம் வாசலைத் தாண்டி வந்தது. அவள் வெளியிலேயே நின்றாள்.

அவர் சிரித்தபடி, “வா, வா. என்ன தயக்கம்? ஓ, இந்த வீட்டுக்கு நீ வந்ததில்லேல்ல? இங்க வந்து ஒரு வருஷமாச்சு. சொந்த ஃப்ளாட்.  வா, வா.’’

அவள் மெள்ள சுற்றுமுற்றும் பார்த்தபடி உள்ளே நுழைந்தாள்.

“யாருமே இல்லை வீட்ல. பயப்படாதே. மிஸஸ் வேலைக்குப் போயிருக்கா. சாயங்காலம் ஆறு மணி ஆயிரும் வர. ரிட்டையர்டு ஆனதும் இனிமே எந்த வேலையும் வேணாம்னு வீட்டோடு இருக்கேன். இப்ப நிறைய நேரம் இருக்கு.”

அவள் தலையைக் குனிந்துகொண்டாள். அந்த வார்த்தைகளின் சூட்சுமம் அவளுக்குத் தெரியும். `ரிட்டையர்டு ஆகறதுக்குள்ள நிச்சயமா செஞ்சுடுவேன்னு சொன்னீங்களே?’ என்கிற கேள்வி உள்ளே சுருண்டு எழுந்து நெஞ்சை அமுக்கியது.

“ஆ... சொல்ல மறந்துட்டேன், என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட உன் வேலை விஷயம் சொல்லியிருக்கேன். சீக்கிரமா  உனக்கு அவங்க அழைப்பு வரும் பாரு.”

அவள் சட்டென்று நிமிர்ந்தாள்.

அடி வயிற்றில் ஒரு கனல் மூண்டது. இவருடைய ஒவ்வொரு வார்த்தையும் அதை ஊதிப் பெரியதாக்கும் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், அவள்  அமைதியாகச் சொன்னாள்.

“எனக்கு இப்ப வேலை வேண்டாம் சார்.”

அவர் வியப்புடன் அவளைப் பார்த்தார். முகத்தில் மெல்லிய ஏமாற்றம் தெரிந்தது. “ஏன், வேற வேலை கிடைச்சுடுச்சா?  நீ பொறுமையா இருந்தா, நல்ல உத்தியோகம் வாங்கித் தருவேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?”

அவள் மீண்டும் நிதானமாகவே சொன்னாள், உள்ளே தீப்பொறி பறக்கையில்.

“ரெண்டு வருஷம் சார். எத்தனை தடவை நீங்க கூப்பிட்டிருப்பீங்க, இதோ அதோனு ஆசை காட்டியிருப்பீங்க?”

“என்னோடு சண்டைபோட வந்தியா?”

அவள் பதில் சொல்லவில்லை. சண்டை போட்டு என்ன ஆகப்போகிறது என  திடீரென்று துக்கம் தொண்டையை அடைத்தது. போனதெல்லாம் போயிற்று.

‘`சண்டையெல்லாம் போட வரலை. என்னை எதுக்குக் கூப்பிட்டீங்கனு சொல்லுங்க.’’

கோப்புகளில் அநேகமாகக் கையெழுத்திட்டபிறகு, சுமதி பஸ்ஸரை அழுத்தினாள். டைப்பிஸ்ட் சந்தியா எட்டிப்பார்த்தாள்.

‘`ஏதாவது கடிதம் எழுதணுமா மேடம்?”

“ஆமாம்.’’

அதற்குள் கோப்புகளை எடுக்க வந்த ராம்பாபுவிடம், ‘`மீட்டிங் இருக்கு நாலு மணிக்கு. கான்ஃபரன்ஸ் ரூம்ல தண்ணி பாட்டில் எல்லாம் இருக்கானு பாரு’’ என்றாள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick