சுருள்முடி சிங்கம் - அட்வான்ஸ் அழகப்பன் - சிரிப்பு சிம்பொனி... - ஒரு ஜாலி மீட்

ப.சூரியராஜ் - படங்கள்: ஆ.முத்துக்குமார், தே.அசோக்குமார்

குட்டிக் குட்டிக் கதாபாத்திரங்களில் நடித்து, குறும்படங்களில் நடித்து, இன்று வெள்ளித்திரையில் நம்பிக்கைக்குரிய குணச்சித்திர நடிகர்களாக வளர்ந்திருக்கும் டேனியல், லிங்கா, லல்லு மற்றும் விவேக் பிரசன்னாவை ஒரு  சுபயோக சுபதினத்தில் சந்திக்கவைத்தோம். நால்வருக்கும் இடையில் கேரம்போர்டை வைத்து, பேட்டி என்றாலே தொன்றுதொட்டுக் கேட்டுவரும் கேள்வியான ``உங்களைப் பற்றி...'’யை  முன்வைத்தோம். ``தன்னைப் பத்தி தானே சொல்லிக்கிட்டா `தற்பெருமை அடிச்சுக்குறான்’னு சொல்வாங்க ப்ரோ. அதனால, ஒருத்தருக்கு ஒருத்தர் மாத்தி மாத்தி இன்ட்ரோ கொடுத்துக்குவோம். எப்பூடி...'’ எனத் திரியைக் கொளுத்திப்போட்டார் டேனியல்.

``நால்வரில் முதல்வர், நடிப்பில் மூத்தவர். `ஃப்ரெண்டே லெவ் மேட்ரே' எனும் ஒரே வசனத்தால் ஓவர் நைட்டில் ஓவியாவைவிட பிரபலமான சுருள்முடி சிங்கம். தன் எதிரில் அயல்நாட்டு ராணுவமே நின்றாலும், கலாய் கவுன்டர்களால் கவுன்டர் அட்டாக் கொடுத்து அசரடிக்கும் ஒன்-மேன் ஆர்மி. சீரியஸான காட்சியிலும் சிரிப்பு சீனிவெடியைக் கொளுத்திப்போட்டு, சக நடிகர்களை நிம்மதியாக நடிக்கவிடாமல் செய்யும் நடிப்பு ராட்சசன் அண்ணன் டேனியல் அவர்கள்'’ என நடிகர் லல்லு கவிஞர் லல்லுவாக திடீர் டிரான்ஸ்ஃபர்மேஷன் அடைய... ``என்னாது... மத்தவங்களை நடிக்கவிடாம பண்ணுவேனா? வர வர உன் வேர்டெல்லாம் ரொம்ப பேடா இருக்குடா'’ என்று டேனியல் அதிர்ச்சியானார்.

``பதிலுக்கு லல்லு ஸ்டைலிலேயே லல்லுவுக்கு நீங்க ஒரு இன்ட்ரோ கொடுத்துப் பழிவாங்கிடுங்க. அவ்ளோதானே...’' என விவேக் பிரசன்னா ஐடியா மணியாக மாற, பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்தார் டேனியல். ``லல்லு மாதிரி ஒரு நடிகனை தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியாது’' என டேனியல் கூறியதும், ``ஆத்தி...’' என நெஞ்சைப் பிடித்துக்கொண்டார் லல்லு. தொடர்ந்து ``அவருக்கு நாங்க வெச்சிருக்கிற பேரு அட்வான்ஸ் அழகப்பன். அது ஏன் அட்வான்ஸ் அழகப்பன்னு மக்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். ஒரு படத்துல நடிக்கச் சொன்னா, அந்தப் படத்திலேயே அடுத்த படத்துக்கும் சேர்த்து அட்வான்ஸா நடிச்சிடுவாப்ல. நடிப்புல அவர் அடுத்த விஜய். எழுத்துல அடுத்த பா.விஜய்'’ என ராஜகுலோத்துங்கனைக்கூட விட்டுவிடாமல் டேனியல் அடுக்கிக்கொண்டே போக... ``தெய்வமே, தெரியாம சொல்லிட்டேன். இந்தக் குழந்தையை மன்னிச்சுடுங்க’' என கேரம்போர்டுமீது படுத்தேவிட்டார் லல்லு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick