செங்கிஸ் கானின் பொக்கிஷம்!

தி.முருகன்

து மட்டும் கிடைத்துவிட்டால், உலகின் பல வரலாற்று நூல்களை மாற்றி எழுத வேண்டியிருக்கும். ஏராளமான பேர் 800 ஆண்டுகளாக அதைத் தேடுகிறார்கள்... ஆனால், கிடைக்கவில்லை. வரலாற்றில் சாகாவரம் பெற்ற மர்மங்களில் ஒன்றாக அதைச் சொல்கிறார்கள். ‘செங்கிஸ் கானின் கல்லறை எங்கே இருக்கிறது?’ என்ற தேடல்தான் அது. வெறுமனே வரலாற்றை மாற்றுவதற்கு மட்டும்தான் இந்தத் தேடலா? இல்லை. செங்கிஸ் கான் தன் வாழ்நாள் முழுக்க நடத்திய போர்களில் கைப்பற்றிய அத்தனை பொக்கிஷங்களும் இந்தக் கல்லறையில்தான் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அதன் இன்றைய மதிப்பை வைத்து, பல தேசங்களையே விலைக்கு வாங்கலாம். அதை அடையவே இந்த வேட்டை!

 ‘செங்கிஸ் கான்’... 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுக்க அச்சத்தை விதைத்த பெயர். ஆசியாவில் தொடங்கி ஐரோப்பா கண்டம் வரை படையெடுத்துச் சென்று, பல தேசங்களைச் சூறையாடியவர். ஆசியாவின் மையத்தில் இருக்கும் மங்கோலியாவில் ஒரு நாடோடி இனக்குழுத் தலைவனின் மகனாகப் பிறந்து, மற்ற இனங்களையும் இணைத்து ஒரு வலிமையான படையை உருவாக்கி, வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாகச் சந்தித்து வளர்ந்தவர், ஒரு கட்டத்தில் நிகரற்ற பேரரசனாக உருவெடுத்தார். பிரமாண்ட மாட்டு வண்டியில் - நகரும் கூடாரத்தில் - அமர்ந்து செங்கிஸ் கான் நடுநாயகமாக வர... வெடிமருந்துகளை வீசி எதிரிக் கோட்டைகளை நிலைகுலையச் செய்து வீழ்த்தும் குதிரைப்படையினர் அவரைச் சூழ்ந்திருப்பார்கள். ‘செங்கிஸ் கான் படையெடுத்து வருகிறார்’ என்ற ஒற்றை வரித் தகவலே பல நாடுகளை வீழ்த்தியது; பல மன்னர்களை மணிமுடி துறக்கச் செய்தது; பல படைகளை ஓடச் செய்தது. அவர் உருவாக்கிய மங்கோலியப் பேரரசு அளவுக்கு, இந்தப் பூமியின் பெருநிலப் பரப்பை வேறு எந்த இனமும்  ஆண்டது இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick