நகரம்

மகுடேசுவரன் - ஓவியம்: ஹாசிப்கான்

தாயும் மகளும்
பிழைப்பு தேடி
இந்நகர்க்கு வந்திருக்கிறார்கள்.
 
தனியொருவராய்
இந்நகர்க்கு வருவோரின் நோக்கம்
கண்டுபிடிக்கப்பட முடியாதது.
அத்தனியாள்
வண்டி விட்டிறங்கியதும்
விறுவிறுவென்று கூட்டம் கலப்பார்.
 
இருவராய் மூவராய்
வந்திறங்குவோரின் தவிப்பை
எளிதில் அறியலாம்.
 
பேணுதற்கு யாருமில்லா ஊரில்
பெருவாழ்வை நாடவைத்த
ஊழ் மிரட்சியை
அவர்கள் கண்களில்
தயங்கி நடக்கும் கால்களில்
இறுக்கிப் பற்றிய கட்டைப் பைகளில்
காணலாம்.
 
வந்திறங்குவோரின்
முதல்நிலை அறியாமை
இவ்வூரின் திசைநிலைக் குழப்பம்.
 
வரச்சொல்லி எண் தந்த
பள்ளித் தோழியின் வீட்டுக்கு
எவ்வழி நகர்தல் என்னும் ஆற்றுப்படாமை.
 
இவ்வுலகின்
எல்லாத் தீமைகளையும் கண்டுவிட்ட
தாயின் கண்கள். 
அவள் கையைப் பிடித்திருக்கும்
சிறுமிக்கு
ஞாலத்தின் எக்குறையும்
புலப்படாக் கண்கள்.
 
இவ்விருவரும்
இனி இந்நகரில் விளங்கவிருப்பவர்.
 
இங்குள்ள ஆயிரம் தொழிற்கூடங்களிலும் 
தாய்க்கு ஓர் இடமுண்டு.
 
தரமுயர்த்தப்பட்ட
நடுநிலைப்பள்ளியொன்றில்
அச்சிறுமிக்கு நுழைவுண்டு.
 
வாழ்வுடைய ஓரூர்
இப்படித்தான் ஒருவரை ஏற்றுக்கொள்கிறது.
 
எங்கோ தொலைவில்
நாக்கசந்த ஒருவர்க்கு
நம்பிக்கை ஊட்டிவிடுகிறது.
 
வா நானிருக்கிறேன் என்று
பெருந்தகப்பனைப்போல் இருமி அழைக்கிறது.
 
இரண்டு மாற்றுடைகளோடு
தாயும் மகளும்
தந்தையும் பிள்ளையும்
காதலனும் காதலியும்
கனவுகளோடு வந்துவிடுகிறார்கள்.

மனைவியைத் தேடி கணவனும்
மகளைத் தேடி தந்தையும்
அண்ணனைத் தேடி தம்பியும்
வந்தபடியே இருக்கிறார்கள்.
வந்தவர்கள்
பெரும்பாலும் திரும்புவதில்லை
 
வாழ்விலாப் பெரியவர்கள்
இன்று துறவேற்பதில்லை.
 
கால்கடுக்க நிற்கும் திறன் போதும்,
உடற்பொருந்தாச் சீருடை அணிந்து
நகரக் கட்டடத்தில்
காவலுக்கு நிற்கலாம்.
 
இப்படி எல்லாரும் வருகின்றார்கள்.
மீதமுள்ளவர்களும் வந்துவிடுவார்கள்.
 
நகரம்தான்
இன்றைய கடைசி நம்பிக்கை.
நகரம்தான்
இன்றைய ஒரே புகலிடம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick