உச்சிதக் காதல் - கவிதை

தேன்மொழிதாஸ்

னது வெந்தய மலைகளின் சாரல்
உன்னை நனைத்துக்கொண்டிருக்கும்
நீ தூங்கியிருக்கமாட்டாய்
நற்குல மிளகுக் கொடியின்
பிஞ்சுக் காய்களாய் உனது சொற்கள்
பொழில் எங்கும் விளைந்து கொண்டிருக்கின்றன
பின் அவை கருத்துச் சுருங்கினாலும்
முத்தங்களால் சுவைப்பேன்
தூக்கம் அஞ்சிக்கொண்டிருக்கிறது
உச்சிதங்கள் யாவையும் எங்கிருந்தோ தழுவும் உனது விரல்கள்
மலையாத்தி பூவிதழ்களாய்
என் மேல் உதிர்கின்றன
காட்டின் மரக்கவிகை அடுக்கில்
காதலை மிதந்து வாழ விடுகிறேன்
பாறைகளின் படர்பாசிகள் நமது தேசத்தை வரைய முற்படுகின்றன
நாட்டின் குடிகளைப் பற்றிய துக்கத்தை
அது கிளறுகிறது
துயிலை
கன்மலிச் செடியின் அடியில் புதைத்து
நாவின் நுனியில் நிலவின் கூர்தீட்டி
செம்மை செய்கிறேன்
தூரத்து மலையிலிருந்து உத்தமாகாளி
ஓடிவருகிறாள்
இருளை வளைத்து இடுப்பில் கட்டுகிறாள்
குடிமையின் குழப்பங்களைச் சொன்னால்
ஒரு சிறு சடாமஞ்சிர் வேரைப்போல் அவளால் பிடிங்கிவிட இயலுமா
விரல்களுக்குள் காலங்கள் வியர்வை
அவ்வளவே விடியட்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick