முதலிலிருந்து - கவிதை

சுகிர்தராணி, ஓவியம்: ரமணன்

ந்தநாள் தொடங்கும் விடியற்பொழுதில்
என்னிதயம் ஒருபுறம் இறக்கை இழந்த வண்டென
சஞ்சலம் கொள்கிறது.
இரவில் உறங்கிய முள்படுக்கையை
வெயிலில் உலரவைப்பதில் முழுநேரம் கழிக்கிறேன்.
வீட்டிலிருந்து வெளியேறும் பாதையில்
உதிர்ந்து கிடக்கும் சருகுகள்
மீண்டும் மீண்டும் வீட்டைக் குப்பையாக்குகின்றன.
சமையலறையிலிருந்து உணவு வெந்ததற்கான ஓசை
பெருமூச்சுடன் என்னை அழைக்கிறது.
உன் கன்னத்து மயிரை வழித்தெடுத்தபின்
என் புறங்கைகொண்டு தடவிப்பார்க்கிறாய் நேர்த்தியை.
கரிய மேகம் தரையிறங்கிய பின்னரும்
பருகப்படாமல் கிடக்கிறது மேசையின்மேல் என் தேநீர்.
இப்படியாக வரையப்பட்ட உயிர்கள் உலவும் இவ்வோவியத்தை
முனை மடிந்த காகிதத்திலிருந்து பிரித்து எடுத்துவிடுங்கள்
நான் முதலிலிருந்து தூங்கி எழுகிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick