உலகின் நீளமான நடைப்பாலம்! | World’s longest pedestrian suspension bridge in Switzerland - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

உலகின் நீளமான நடைப்பாலம்!

என்.மல்லிகார்ஜுனா

சுவிட்சர்லாந்துக்கு அழகு சேர்ப்பது, அங்குள்ள ஆல்ப்ஸ் மலைகள். இந்த இயற்கை அதிசயத்தைக் காண, அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இந்த மலைப் பிரதேசத்துக்கு இன்னொரு பெருமை சேர்ந்திருக்கிறது; அதிசயம் என்றும் சொல்லலாம். இங்கே கிராச்சென்  (Grachen), ஜெர்மட் (Zermatt) எனும் இரண்டு கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கிராமங்களுக்கு இடையே ஆழமான பள்ளத்தாக்கு ஒன்று உண்டு. கிராச்சென்னில் இருந்து ஜெர்மட்டுக்குச் செல்ல, இந்தப் பள்ளத்தாக்கையும் சின்னஞ்சிறு மலைகளையும் கடக்க வேண்டும். அதற்குச் சுமார் நான்கு மணி நேரம் ஆகும். அதனாலேயே இந்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். இன்றைக்கு அப்படியில்லை. பள்ளத்தாக்குகளையோ மலைகளையோ கடக்காமல், 10 நிமிடங்களிலேயே ஜெர்மட்டுக்குச் சென்றுவிடலாம். இரு மலைகளுக்கும் இடையே, எஃகு தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பெயர், `சார்லஸ் குவானன்'. கடந்த ஜூலை 29-ம் தேதி திறக்கப்பட்ட இந்த நடைப் பாலத்தின் நீளம் 494 மீட்டர்கள்; அகலம் 65 செ.மீ மட்டுமே. தரை மட்டத்திலிருந்து சுமார் 86 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாலம்தான் உலகிலேயே மிகவும் நீளமான தொங்கும் நடைப் பாலம் என்கிறார்கள். இந்தப் பாலம், காற்றில் அசைந்தாடுவதை தூரத்திலிருந்து பார்த்தால், வெள்ளி ஊஞ்சல் ஆடுவதுபோலத் தெரியும். தொங்கும் பாலம் என்பதால், இதன்மீது நடந்துசெல்லும்போது லேசாக அசைந்தாடும். இரு மலைகளுக்கிடையே இதைப் பத்து வாரங்களிலேயே கட்டி முடித்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம். உயரத்தைக் கண்டு பயப்படுபவர்கள், இந்தப் பாலத்தின்மீது நடக்கும்போது கண்களை மூடிக்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick