பாங்கிணறு

எஸ்.ராமகிருஷ்ணன் - ஓவியங்கள்: செந்தில்

டனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறி, விவசாய நிலத்தையும் அதிலிருந்த வீட்டையும் ஃபைனான்ஸ் கம்பெனி  ஜப்தி செய்து, மாடசாமியையும் அவனது குடும்பத்தையும் வெளியேற்றிய மூன்றாம் நாள், அவர்கள் கிணற்றில் குடியிருக்கலாம் என  முடிவு செய்தார்கள். அது ஒரு பாங்கிணறு. தண்ணீர் வற்றிப்போய்த் தூர்ந்த நிலையில் இருந்தது. கிழிந்துபோன சாக்குப்பைகளும் குப்பைகளும் கோழி ரோமங்களும் நிரம்பியிருந்தன. காலி மதுபாட்டில்களும், உடைந்த மண்சட்டிகளும், தூமைத் துணிகளும்கூடக் கிடந்தன. அந்தப் பாங்கிணற்றுக்கும் வயது எழுபதுக்கு மேல் இருக்கக்கூடும். மாடசாமியும் அவனது குடும்பமும் அக்கிணற்றை இரண்டு நாள்கள் சுத்தப்படுத்தினார்கள். கிணற்றினுள் படிகள் இல்லை. கல்சொருகினுள் கையைப் பிடித்து ஏறவும் இறங்கவும் வேண்டியிருந்தது. இதனால், மூலைவீட்டுக் கருப்பையா தனது ஏணியை அவர்களுக்குக் கொடுத்து உதவினார்.

தன் இரண்டு மகள்கள், ஒரு மகன், மனைவியுடன் தன் வயதான தாயையும் அழைத்துக்கொண்டு மாடசாமி கிணற்றுக்குள் குடியிருக்கத் தொடங்கினான்.

வீடு என்பதே உருவாக்கிக்கொள்வதுதானே? குகையோ, மரத்தடியோ, சாலை ஓரமோ, குடிசையோ ஏதோவொன்று உண்ணவும் உறங்கவும் போதும் என்றுதானே நினைக்கிறார்கள்.

பதினெட்டு ஆண்டுகள் விவசாயியாகப் பிழைத்த பிழைப்புக்குக் காலம் தன்னைப் பிச்சை எடுக்கும் நிலைக்குத் துரத்திவிட்டிருக்கிறது. இப்படிப் பிழைத்த பிறகு கிணற்றில் குடியிருந்தால் என்ன, சுடுகாட்டில் குடியிருந்தால் என்ன, ஒன்றுதானே? விவசாயிக்கு ஒரே புகலிடம் கிணறு மட்டும்தானே.

கதவுகள் இல்லாத, ஜன்னல் இல்லாத, வாசல்படி இல்லாத வீட்டை உருவாக்கிக்கொண்டான் மாடசாமி. அந்த ஊரில் சில பெண்கள், வீட்டில் கோபித்துக்கொண்டு கிணற்றில் இறங்கி உட்கார்ந்துகொள்வது வழக்கம். புருஷனோடு சண்டையிட்ட சில பெண்கள், கிணற்றில் பிள்ளையைப் போட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு குடும்பம் கிணற்றில் குடியிருப்பது இதுவே முதன்முறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்