நெடிய பாரம்பர்யம் கொண்ட நெட்டிச் சிற்பக் கலை! | Tanjore handmade netty Sculpture art - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

நெடிய பாரம்பர்யம் கொண்ட நெட்டிச் சிற்பக் கலை!

``கலைகளின் நகரம் தஞ்சை' என்று சொல்லும்படி, பல கலைகளின் தலைநகரமாக - கலைநகரமாகப் புகழ்பெற்றது தஞ்சை. கல்லிலும் மண்ணிலும்; தங்கம், பித்தளை, வெள்ளி என்று  காணும் பொருள்கள் அனைத்திலும் சிற்பக் கலை வளர்த்த மண்ணும்கூட. சிற்பக்கலை மட்டும்தானா? உயிரோட்டம் நிறைந்த ஐம்பொன் சிற்பங்கள், கண்ணாடிப் பின்னணியில் வரையப்பட்ட அழகழகான தஞ்சாவூர் ஓவியங்கள், நுட்பமான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய தஞ்சாவூர்த் தட்டு, எந்தப் பக்கமும் சாயாமல் தலையாட்டிக்கொண்டே இருக்கும் தலையாட்டி பொம்மை, இசை மீட்டும் இசைக்கருவிகள் என்று தஞ்சை மண்ணில்தான் எத்தனையெத்தனை கலைகள் வாழ்ந்திருக்கின்றன!

அந்த வகையில் தஞ்சை மண்ணுக்கே உரிய ஒரு கலைதான் நெட்டிச் சிற்பக்கலை. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய, அற்புத அழகு மிளிரும் நெட்டிச்சிற்பங்கள் இன்றைக்கும் பல வீடுகளிலும் அலுவலகங்களிலும் வரவேற்பறையை அலங்கரிக்கின்றன.  பிளாஸ்டிக் பொம்மைகளையும் எலெக்ட்ரானிக்ஸ் பொம்மைகளையும் பார்த்துப் பழகிய இன்றைய தலைமுறைக்கு, நெட்டிச் சிற்பங்களைப் பற்றித் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

நெட்டிக்கலை குறித்து இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில், கும்பகோணத்தில் இருக்கும் கே.ஏ.சொக்கலிங்கத்தை அவருடைய கலைக்கூடத்தில் சந்தித்தோம்.