“இனிப்பு என்பது மகிழ்ச்சியின் அடையாளம்!” - முரளி மகாதேவன் | Murali Mahadevan shares about Sri Krishna sweet Growth - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“இனிப்பு என்பது மகிழ்ச்சியின் அடையாளம்!” - முரளி மகாதேவன்

சந்திப்பு

முகம் நிறைய புன்னகையோடும் அன்போடும் நம்மை வரவேற்றார் முரளி மகாதேவன். சமீபத்தில் வாங்கிவந்த டாக்டர் பட்டம், சிறந்த பிராண்டுக்கான விருது, சிறந்த லீடருக்கான விருது என அந்த அறை முழுவதும் விருதுகள். சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் இன்றைய வளர்ச்சிக்கான காரணத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார்...  

``ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸோட அஸ்திவாரம் என்ன?''

“1948-ல் என் அப்பா மகாதேவ ஐயர், கோவை பெரிய கடை வீதியில், ‘ஸ்ரீ கிருஷ்ணா பவன்’ என்ற பெயரில் ஓர் உணவகத்தைத் திறந்தார். அந்தக் காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஏமாந்து வருவாங்கனு  `சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டவை'னு எழுதி, பக்கத்துல சின்னதா ‘அல்ல’னு எழுதியிருப்பாங்க. ஆனா, அப்பா எப்பவுமே வாடிக்கையாளர்களை ஏமாற்றவோ முகம் சுளிக்க வைக்கவோ கூடாதுங்கறதுல உறுதியா இருந்தார். அதனால், ஸ்ரீ கிருஷ்ணா பவன்ல ‘சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டவை'னு மட்டும் போர்டு வைத்தார். நம்பிக்கைதான் மூலதனம் அப்டிங்கறதுக்கான பாடம் அது.

 இனிப்புகளுக்குன்னு பிரத்யேகமான கடைகள் அப்போது இல்லை. ஹோட்டலிலேயே ஒரு சின்ன கவுன்ட்டரில் இனிப்பு, பலகாரங்கள் விற்றுக்கொண்டிருப்பார். `கிருஷ்ணா’ என்ற பெயர் எங்க அப்பாவுக்கு மிகப் பிடித்தமான ஒன்று. அதனால், தான் ஆரம்பித்த அனைத்துத் தொழில்களையும் கிருஷ்ணா என்கிற பெயரிலேயே ஆரம்பித்தார்.

ஒவ்வொரு முறை பலகாரம் செய்ய `அடுப்பு பூஜை’ போடப்படும்போதும் ஆத்மார்த்தமாக அப்பா வணங்கி வேண்டிக்கொள்வதை நான் பார்த்திருக்கேன். இன்னைக்கும் எங்க ஃபேக்டரில ஊழியர்கள் அத்தனை பேரும் அந்த பூஜையின்போது அதைப் பின்பற்றுகிறார்கள்.

1996-ம் வருஷம் `நான் நம்ம தொழிலை சென்னைக்குக் கொண்டுபோகப்போறேன்'னு எங்க அப்பாகிட்ட சொன்னேன். அப்ப எங்க அப்பா சொன்னார், `சுத்தமா இரு. சரியா... புரிஞ்சதுல்ல?'

அந்த வார்த்தைக்குத்தான் எத்தனை அர்த்தங்கள்!  இன்னைக்கு எங்க கடையின் சுத்தம், எங்களோட மனத்தின் சுத்தம்னு எல்லாமே அந்த வார்த்தைல இருந்து வந்ததுதான். மேனேஜ்மென்ட் என்ற படிப்பெல்லாமே பிறகு வந்தவைதான். அவர் செய்த ஒவ்வொன்றுமே மேனேஜ்மென்ட் பாடம்தான்.''

நீங்க எப்படி பீல் பண்றீங்க