“கலைகளின் வழியே அரசியல் பேசுவதில் உடன்பாடில்லை!” - ஓவியர் ராஜசேகரன் | Artist Rajasekaran interview - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

“கலைகளின் வழியே அரசியல் பேசுவதில் உடன்பாடில்லை!” - ஓவியர் ராஜசேகரன்

கலை

`சொற்களால் விவரிக்க முடியாதவற்றை கலை பேசும்' - மேத்யோல்.

ண்பதுகளில், தொண்ணூறுகளில் பல அடி உயரமுள்ள பெரிய பெரிய தட்டிகளில் திரைப்படக் கதாநாயகர்கள், நாயகிகள் ஓவியங்களாக நின்றுகொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டுசெல்லும் ஊடகமாக அன்று அவ்வகை ஓவியங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. நகரங்களின் முக்கிய இடங்களில், தியேட்டர் வாசல்களில் அவை கம்பீரமாக வீற்றிருக்கும் நினைவுகள் குறித்துக் கேட்டால், எண்பதுகளைச் சேர்ந்தவர்கள் கதை கதையாகச் சொல்வார்கள். சினிமா மட்டுமன்றி அரசியல், வணிகம் சார்ந்த விளம்பரங்கள் என இந்த ஓவியக் கலைஞர்கள் கொடிகட்டிப் பறந்த காலம் அது. அவர்களுக்கெனத் தனியே ரசிகர் கூட்டமிருந்தது.

ஃப்ளெக்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், அந்தக் கலையும் கலைஞர்களும் நாள்பட நலிந்தார்கள். இன்றைக்கு அவ்வகை ஓவியர்களைக் காண்பது மிக அரிது. பலரின் நினைவுகளில் மட்டுமே எஞ்சியிருக்கும் அக்கலைஞர்களுக்கும் அவர்களின் உழைப்புக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, கேரளாவில் 25 அடி உயரமும் 50 அடி அகலமும் கொண்ட இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டின் ஓவியத்தை (Oil Painting) வரைந்து பார்வைக்கு வைத்தார் ஓவியர் ராஜசேகரன். அந்த ஓவியம் ‘கின்னஸ்’ சாதனையில் இடம்பிடித்தது. கலையின் மீதான பெருநேசம்கொண்ட இப்படியொரு மனிதரைச் சந்திக்க வேண்டுமென, கேரள எல்லையின் தொடக்கமாக தமிழக எல்லையின் முடிவாகவுள்ள களியக்காவிளைக்குச் சென்றோம். நாங்கள் சென்றபோது, ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தார் ராஜசேகரன். ரயிலின் தடதட சப்தத்துடன் குருவிகளின் கீச்சொலியும் வரைந்துகொண்டிருந்த ஓவியத்திற்கான பின்னணி இசையாக ஒலித்துக்கொண்டிருந்தன. மூங்கில் இருக்கைகளில் அமர்ந்து எலுமிச்சைச் சாறு பருகியபடி உரையாடினோம்.