“நான் ஹீரோவாகிட்டேன்..!” - `கலக்கப்போவது யாரு' ராமர்

சின்னத்திரை

`ஆத்தாடி என்ன உடம்பி' என்றால், உடனே நமக்கு மதுரை ராமர்தான் நினைவுக்கு வருவார். ஒரு காமெடியனாக அறிமுகமாகி, விஜய் டி.வி `சகல vs ரகள' நிகழ்ச்சித் தொகுப்பாளராகத் தன் திறமையால் முன்னேறியிருக்கிறார். ராமரின் சொந்த ஊர், மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகிலுள்ள  அரிட்டாபட்டி. ஷூட்டிங்குக்காகச் சென்னை வந்து சென்றுகொண்டிருக்கிறார் ராமர்.

மதுரைக்காரர் ராமரின் பேச்சில், மண்ணின் மணம். ``எங்க குடும்பம் கொஞ்சம் பெருசு. சின்ன வயசுல இருந்தே நடிப்புமேல எனக்கு பயங்கர ஆர்வம். ஸ்கூலு, காலேஜுல எல்லாம் மேடைன்னாலே ராமருதான். மீடியா ஆசை மனசுக்குள்ள புகுந்துட்டாலும், ஊருல எங்க மாமாகூடச் சேர்ந்து ஆர்.டி.ஓ ஆபீஸ்ல தற்காலிக வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். உள்ளூரு, வெளியூருனு சின்னச் சின்ன நிகழ்ச்சிங்க மூலமா என் திறமையை வெளிக்காட்ட ஓடிட்டிருந்தேன். என்னதான் திறமை இருந்தாலும், `சரியாதான் ஓடிட்டிருக்க... விடாம ஓடு'னு சொல்லித் தட்டிக்கொடுக்க ஒரு ஆளு வேணும்ல. அப்படித்தான் எனக்கு வந்துசேர்ந்தாங்க என் மனைவி கிருஷ்ணவேணி'' என்றவர், தன் மனைவியை அறிமுகப்படுத்துகிறார்.
``வீட்டுல பார்த்துதான் எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. நான் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட் படிச்சிருக்கேன். காலேஜ்ல சிறப்பு விரிவுரையாளரா இருக்கேன். எங்களுக்கு மூணு பசங்க. முதல் பொண்ணு அஞ்சாவதும் ரெண்டாவது பொண்ணு நாலாவதும் படிக்கிறாங்க. பையன் எல்.கே.ஜி படிக்கிறான். கல்யாணமான புதுசுல, இவர் தன்னோட மீடியா கனவுகளைப் பத்திச் சொன்னப்போ, எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. அவருக்குத் திறமை இருக்குன்னு எனக்குத் தெரியும். அதுக்கான கைத்தட்டல்கள் கிடைக்கிறவரைக்கும் அவர் துவண்டுடாம இருக்க என்னால முடிஞ்சளவுக்கு நம்பிக்கை கொடுத்தேன்.

என் வீட்டுக்காரர் ரொம்ப ஹார்டு வொர்க் பண்ணுவாரு. `கலக்கப்போவது யாரு', `அது இது எது' நிகழ்ச்சிகள், அதுக்கான பலனைக் கொடுத்தன. வீட்டுல நான் `சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி பார்ப்பேன். பலமுறை அவர்கிட்ட, `இந்த கான்செப்ட்டை எடுத்துப் பண்ணிப் பாருங்களேன்... சூப்பரா வொர்க் அவுட் ஆகும்'னு சொல்லியிருக்கேன். `பாப்போம் பாப்போம்'னு சொன்னாரே தவிர, நான் சொன்னதை அவர் யோசிச்சுப் பார்க்கலை. கடைசியில, `அது இது எது' நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்சன் அண்ணனே இந்த கான்செப்ட் வெச்சு ஸ்கிரிப்ட் எழுதிட்டாரு. `என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!'னு இவர் பேசின டயலாக் செம ஹிட். அந்த ஷோவுக்கு அப்புறம்தான் இவரை நிறைய பேர் கவனிக்க ஆரம்பிச்சாங்க'' என்ற தன் மனைவியை, ``சரி சரி... என் பொண்டாட்டி ஒரு தீர்க்கதரிசிதான்'' என்று  சொல்லிச் சிரிக்கவைக்கிறார் ராமர்.
``எனக்கு வடிவேலு சாரை ரொம்பப் பிடிக்கும். அவர்தான் என் ரோல் மாடல். அவர் அளவுக்கு வளர முடியுமான்னு தெரியலை. ஆனா, நிச்சயம் அவரைப் பின்பற்றி எல்லோரையும் சிரிக்க வைப்பேன். நாம எவ்வளவு கஷ்டத்துல இருந்தாலும் மத்தவங்களைச் சிரிக்கவைக்கிறது ஒரு கலை. அந்தக் கலை என்கிட்ட இருக்குன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு. இன்னும் நிறைய பேரைச் சிரிக்க வைக்கணுங்குறதுதான் என் ஆசை'' என்று எமோஷலானார் ராமர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்