சித்தர்கள் உலாவும் பொன்னூதி மாமலை... | Pon Uthiyur Konganar Cave siddhars - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

சித்தர்கள் உலாவும் பொன்னூதி மாமலை...

ஆன்மிகம்

சுந்தரபுரிப் பகுதியின் (காங்கேயத்துக்கு அருகில் உள்ளது) வேட்டுவ இளவரசன் சிவபாலன் வேட்டைக்குக் கிளம்பினான். தற்போதைய ஊதி மலைக்காட்டில் (அப்போது கந்தமலை) வேட்டைகளை முடித்துக்கொண்டு மலை உச்சியில் இருந்த சுனை அருகே ஓய்வெடுத்துக்கொண்டான். தனது உடைவாளில் உறைந்திருந்த ரத்தத்தைச்  சுனை நீரில் தேய்த்துக் கழுவினான். அந்த நீரானது ஓடி, கொல்லப்பட்டுக் கிடந்த விலங்குகள்மீது பட்டது. அவ்வளவுதான். உயிரிழந்து கிடந்த மான்களும் முயல்களும் உயிர்பெற்று எழுந்து ``வாழ்க சிவன்; வாழ்க சித்தன்; வாழ்க வாழ்கவே’’ என்று வணங்கி விரைந்தோடின. இளவரசன் விழித்தான், `சிவன் சரி; யார் அந்தச்  சித்தன்' என்று குழம்பினான். கூட வந்த படையினரை  நாட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்தச் சித்தனைக் கண்டறியக் காடெங்கும் சுற்றினான்.

அன்று நள்ளிரவில் சிவபாலனுக்குக் காட்சியளித்த போகமகரிஷி அவனை வாழ்த்தினார். `நீயே அந்தச் சித்தன் என்றும், உனக்கான பெயரை ஒரு பெண்மணி விரைவில் கூறுவார்' என்றும் உரைத்தார்.  போகர் கூறியவாறு பல ஆண்டுகள் அந்த மலையில் ஒரு சந்திரகாந்தக் கல் தூணில் தவமிருந்தார் சிவபாலன். போகரின் ஆசியால் பல சித்துகளைக்  கற்றுக்கொண்டார். போகரின் ஆலோசனைப்படி திருமாளிகைத்தேவரிடம் சென்று சமய தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றார். இந்திய தேசமெங்கும் வலம்வந்து மக்களைச் சந்தித்தார். அப்போது பெரும்பாலான மக்கள் ஏழ்மையால் வாடுவதைக் கண்டார். மனம் உருகினார். மீண்டும் ஊதிமலையில் சொர்ணாகர்ஷண பைரவரை நோக்கித் தவமிருந்தார். கடுமையான தவத்துக்குப் பலனாக, ஆவணி மாத கோகுலாஷ்டமி தினத்தில் பைரவர் காட்சியளித்து அவன் விரும்பியவாறு, `நினைத்தது, தொட்டது யாவும் தங்கமாகும்' என்ற வரத்தை அளித்தார். நாடெங்கும் சுற்றி வறியவர்களுக்குத்  தங்கம் வழங்கிய பெருமிதத்தால் `தான் என்ற அகந்தை' கொண்டார்.