ஏகாவின் வீடு! - சிறுகதை | Short Story - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

ஏகாவின் வீடு! - சிறுகதை

வெங்கடேசனைப் பார்க்க, ஏகாவின் பையன் ஆறுமுகம் வந்திருந்தான். கையில் கொஞ்சம் பணமிருப்பதாகச் சொல்லி, `முகப்பேரில் இந்த பட்ஜெட்டில் வீடு வாங்க முடியுமா' என விசாரித்தான். அவனுடைய அப்பா சேர்த்தது, இவன் சேர்த்தது எல்லாமாக ஒரு பத்து ரூபாய் இருந்தது. மீதி லோன் போட்டுக்கொள்ளலாம் என்பது திட்டம். வெங்கடேசன் வீட்டு புரோக்கர் இல்லை என்றாலும் நிலவரம் ஓரளவுக்குத் தெரியும்.

``ஒரு வாரத்தில் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்'' என்று அனுப்பிவைத்தான். பைக்கில் அவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் இரண்டு குழந்தைகள்.  ஒரு டாக்ஸி புக் பண்ணிக்கொண்டு வராமல் இப்படிப் பயணம் செய்கிறானே என்ற அச்சம் வெங்கடேசனுக்கு அவன் தெருமுனையைத் திரும்புகிற வரை இருந்தது. ஆனாலும் அப்பனைவிடப் பரவாயில்லை எனத் தேற்றிக்கொண்டான். ஏகா எப்படியெல்லாம் சேர்த்தான் என்பது இன்றைக்கு எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். ஐம்பது ஆண்டுக்கு முன்னால் 30 ரூபாய் சம்பளத்தில் இருந்தவன், ஒரு ஒரு பைசாவாகச் சேர்த்தது அது.

சென்னையில் சரஸ்வதி என்ற பெயரில் ஒரு தியேட்டர் இருந்தது எத்தனை பேருக்கு நினைவிருக்கும் எனத் தெரியவில்லை. அந்தத் தியேட்டரில் `குலேபகாவலி' பார்க்க வேண்டும் என்பது ஏகாம்பரத்தின் நீண்டநாள் கனவு... ஆசை. பெஞ்ச்  டிக்கெட் முப்பது பைசா. சேர் 50 பைசா, முதல் வகுப்பு 65 பைசா என மூன்றே பிரிவினைதான் அந்த தியேட்டரில். அதில் மாடி கிடையாது. 30 பைசா டிக்கெட்டுக்குமேல் ஆசைப்பட்டதில்லை. ஆனால், அதுவே பெரிய பட்ஜெட்டாக இருந்தது. `அடுத்த மாதம் சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக குலேபகாவலி பார்க்க வேண்டும். ராமச்சந்திரன் புலியோடு சண்டைபோடும் காட்சியை மனதார ரசிக்க வேண்டும்' என்பது ஏகாம்பரத்தின் ஜென்ம சாபல்யம். கையில் காசு இருக்கும்போதோ `திருநீலகண்டர்', `ராஜமுக்தி' இப்படி எதையாவது போட்டுவிடுகிறார்கள்... காசு இல்லாதபோது `குலேபகாவலி'... சம்பளத்தை உண்டியலில் போட்டுவிட்டால் அதன்பிறகு அதைத் தொடமாட்டான். இதுவரை நான்கு  மாம்பழ உண்டியல்கள் சம்பளத்தால் நிரம்பிவிட்டன. அது, கல்யாணச் செலவுக்கு.

`கல்யாணம் பண்ணிட்டு ஜோடியா போய் பயாஸ்கோப்பு பாருடா' என்றுகூடக் குடித்தன வாசலில் கிண்டல் செய்துவிட்டார்கள். அது கிண்டல் இல்லை, நிஜம் என்பது மீஞ்சூரில் இருந்து அத்தை வந்துவிட்டுப் போனதும்தான் தெரிந்தது. ஏகாம்பரம் இருக்கிற பத்துக்கு எட்டு அறையில் தன் மருமகப்பிள்ளை கையிருப்பாக, சிக்கனமாகக் குடியிருக்கிற அழகைப் பார்த்துப் பூரித்துப்போய், புஷ்பவள்ளிக்கு ஏற்ற புருஷன்காரன் இவன்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். நான்கு உண்டி நிறைய சம்பளப் பணத்தைப் போட்டு வைத்திருக்கிற அழகை, அதிசயத்தைச் சொல்லியே பெண்ணைச் சம்மதிக்க வைத்துவிட்டாள். குட்டையாக, கட்டையாக இருந்தாலும் சிவப்பாக இருக்கிறான் என்ற காரணத்துக்காகத் தன்னை `ராமச்சந்திரன் கலரு' என அவனே சொல்லிக்கொள்வான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க