சூடக் கொடுத்தவள் - சிறுகதை | Short Story - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/10/2018)

சூடக் கொடுத்தவள் - சிறுகதை

எம்.கோபாலகிருஷ்ணன், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

கோவை-மயிலாடுதுறை சதாப்தி விரைவு வண்டியின் குளிரூட்டப்பட்ட பெட்டியின் கதவைத் திறந்ததுமே பூக்களின் வாசனை நாசியைத் தொட்டது. இன்னதென்றில்லை, கதம்பமான நறுமணம். பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்து வந்த களைப்பை நீக்கின சில்லென்ற காற்றும் இதமான மணமும். “என்னமா வாசனை? பூ மார்க்கெட்டுக்குள்ள வந்த மாதிரி இருக்கு…” சாரதா தோள்பையை இறக்கிப் பிடித்தாள். எங்கள் இருவருக்குமான இருக்கை எண்ணைத் தேடியபடியே நடந்தேன். ஒதுக்கப்பட்ட இருக்கைகளைக் கண்டதும் உற்சாகம். எப்போதாவதுதான் இப்படி அமையும். உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் செல்போனிலிருந்த தகவலைச் சரிபார்த்தேன். பெட்டியின் மத்தியில் நடுவில் நீண்ட மேசையுடன் எதிரெதிராய் அமைந்திருக்கும் இருக்கைகளில் இரண்டு.

ஜன்னலோரத்தில் சாரதா அமர அடுத்ததில் அமர்ந்தேன். முன்னாலிருந்த மேசை முழுக்க பூக்கள் நிறைந்த பிரம்புக் கூடை. பிச்சியும் சம்பங்கியும் அரளியும் ரோஜாவுமாய் மணந்தன. ஓரமாக வாழை இலை மூடிய பூ மாலைகள். பெட்டியை மேலே வைத்துவிட்டு உட்கார்ந்ததும் எதிர் இருக்கையில் இருந்தவள் சொன்னாள் “தப்பா நெனச்சுக்காதீங்கோ. ஒங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லேன்னா இதெல்லாம் இப்பிடியே வெச்சுக்கவா?”

“அதெல்லாம் பரவால்லே. பூதானே?” சிரித்தபடியே சொன்னேன். அவளும் புன்னகைத்துத் தலையாட்டினாள். சாரதாவின் பார்வை என்னைத் தொடுவதை உணர்ந்தேன்.

“மாலையெல்லாம் அம்பாளுக்குத்தான். தோள்மாலை முடிஞ்சது. ரெண்டு தொண மாலை. அப்பறமா சரந்தான். நீங்க திருப்பூர்தானா?”

நீங்க எப்படி பீல் பண்றீங்க