Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''மனமே பணம்!''

ங்குச் சந்தை மற்றும் ஃபண்ட் முதலீட்டில் லாபத்துக்கு சந்தையின் ஏற்றம் ஒரு காரணமாக இருக்கிறது. அதைவிட முக்கியக் காரணமாக இருப்பது முதலீடு செய்திருப்பவர்களின் புத்திசாலித்தனமான செயல்பாடு. அதற்கு அவர்களின் மூளையின் ஆற்றல்தான் காரணமாக இருக்கிறது. மனித உடல் எடையில் ஐம்பதில் ஒரு பங்குதான் மூளை!

மூளையின் ஆற்றலை எப்படி எல்லாம் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதை சென்னையின் முன்னணி நரம்பியல் மருத்துவர் ஏ.வி.ஸ்ரீனிவாசன் சொல்கிறார்...

''குழந்தை, தாயின் கருவில் இருக்கும்போதே விநாடிக்கு 2,500 நியூரான்கள் என்ற நரம்பு செல்கள் உருவாகின்றன. தொடர்ந்து 90 நாட்களுக்கு நியூரான்கள் உருவாகும். மனித மூளை 1,400 கோடி நியூரான்களால் ஆனது. இது உலகில் இருக்கிற அணுக்களின் எண்ணிகையைவிட அதிகம். இந்த நியூரான்கள், அவற்றுக்கு சக்தியை அளிக்கும் சோடியம், பொட்டாசியம் போன்றவற்றைத் தாங்களே தயாரித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. மேலும், இந்த நியூரான்கள், ஜாதி, மதம், இனம், மொழி, வயது, பாலியல் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே அளவில்தான் இருக்கின்றன. எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு இணையாகப் பணத்தைச் சம்பாதிக்க மூளையின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நமக்குப் புற வாழ்வில் சந்தோஷத்தைக் கொடுப்பது பணம்; அக வாழ்வில் சந்தோஷத்தை கொடுப்பது மனம்!

கம்ப்யூட்டரைவிட மனித மூளை புத்திசாலியாக இருக்கிறது. எவ்வளவுதான் விஷயங்களை கற்றுக் கொண்டாலும், அடுத்தடுத்து கற்கவும், ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும் மூளையில் சில பகுதிகள் வெற்றிடமாக இருக்கும்!'' என்கிறார் ஸ்ரீனிவாசன்.

மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகளையும் இங்கே விளக்குகிறார்.

''பணமும் மனமும் சேர்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. மூளையை மனது கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில், மனதை கட்டுப்படுத்தும் ஆற்றலை மூளை பெற்றிருக்கவில்லை. மனிதனின் மிகப் பெரிய சாதனையாக பணம் சம்பாதிப்பது இருக்கிறது. அதற்கு மூளை ஆற்றலுடன் இருப்பது அவசியம். அதற்கு ஈடுபாடு மற்றும் கட்டுப்பாடுகளுடன் இருப்பது அவசியம். ஒருவர் பணம் சம்பாதிப்பதில் 100 சதவிகிதம் வெற்றி பெற முடியும். அதற்கு மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். மோசமான நண்பர்களின் நட்பை கைவிடுவதுதான் அதற்கு வழி. புகையிலை, மது, பான்பராக் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை மனத்தின் எண்ணங்களை மாற்றி மூளையின் ஆற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டவை.

அடுத்து மன அழுத்தம் ஏற்பட மிரர் நியூரான் என்ற பிரதிபலிப்பு நரம்பு செல்கள் காரணமாக இருக்கின்றன. அதாவது, கெட்டதைப் பார்த்தால் மூளை பாதிக்கப்படுவதோடு, நம் நடவடிக்கையும் மாறுகிறது. அந்த வகையில் பிறர் மது அருந்துவது, புகைப்பிடிப்பதைப் பார்ப்பதே நல்லதில்லை.

பூமிக்கு கீழே விளைகிற கிழங்கு வகைகள் மூலம் செய்யப்படும் உணவுகள் நாவிற்கு சுவையாக இருக்கும். ஆனால், அவை மூளைக்கு நல்லதில்லை. பூமிக்கு மேலே விளைகிற பச்சை காய்கறிகள் மூளைக்கு பலம் தரும். மூளையைப் பலமானதாக வைத்திருக்க உடலில் கொழுப்பு, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.

மூளையின் ஆற்றலை அதிகரிக்க உடலுக்கு உடற்பயிற்சி அல்லது யோகாசனமும் மனதுக்கு தியானமும் செய்வது அவசியம். வயது வித்தியாசமின்றி அனைவரும், தினசரி குறைந்தது 15 நிமிடங்கள் தியானத்துக்கு ஒதுக்குவது அவசியம். இந்தப் பயற்சி மூளையின் செயல்பாட்டை முடுக்கிவிட்டு, அதன் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இதன் மூலம் மூளையுடன் தொடர்புடைய எந்த வேலையையும் எளிதில் செய்யலாம். எந்த சவால்களையும் துணிச்சலாக சுறுசுறுப்பாக எதிர் கொண்டு சாதனைப் படைக்க முடியும். இதனால், தேவையில்லாமல் பதற்றம், மனச் சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம். பொதுவாக, ஒரு மனிதன் நிமிடத்துக்கு 10 முதல் 12 தடவை சுவாசிக்கிறான். இதை உடற்பயிற்சி மற்றும் தியானம் மூலம் 6 முதல் 8 ஆக குறைத்துவிட்டால் நீண்ட காலம் மூளை பலத்துடன் வாழலாம்!'' எனச் சொல்லும் மருத்துவர் ஸ்ரீனிவாசன் இறுதியாகச் சொன்ன முத்தாய்ப்பு வரிகள்...  

''மனம் ஒரு அஷ்டாவதானி. ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒருங்கிணைத்து செய்யக் கூடியது. அதற்கு மன அழுத்தம் இல்லாமல் இருப்பதுதான் அவசியம்!''

- சி.சரவணன்
படம்: வி.செந்தில்குமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பற்கள் பராமரிப்பு A To Z
''கடவுள் எனக்கு நண்பேண்டா!''
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close