Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''பெட்டி பெட்டியா ஆரஞ்சு... பாட்டில் பாட்டிலா தண்ணீர்!''

''மாடலிங்கில் ஜொலிச்சாலும், சினிமாவில் சிக்சர் அடிக்கணும்கிறதுதான் என் கனவு. ஆசைப்பட்ட மாதிரியே சினிமாவில் என்ட்ரி கொடுத்து முதல் படத்திலேயே மோதிரக் கை ஆசியும் கிடைச்சிருச்சு. இதுக்கு மேல என்ன வேணும்?''- மின்னும் கண்களில் துள்ளும் உற்சாகத்துடன் சிரிக்கிறார் ஜனனி அய்யர். 'அவன் இவன்’ படத்தில் போலீஸ் 'பேபி’யாக ஆர்யாவை முட்டிக்கு முட்டி தட்டியவர்!  

 ''எப்படி இப்படி நரம்பு மாதிரி இருக்கீங்க?'' என்று கேட்டால், ''இரண்டு வருஷம் முன்னாடி என்னைப் பார்த்திருந்தா இந்தக் கேள்விக்கே வேலை இல்லை!

இயல்பிலேயே நான் குண்டு. கொழுக் மொழுக்னு பப்ளிமாஸ் மாதிரி இருப்பேன். மாடலிங் சான்ஸுக்கு அலைஞ்சப்பதான் ஸ்லிம் உடம்பின் அவசியம் புரிஞ்சுது. ஏழு மாசத்துக்குள்ள கடகடன்னு 10 கிலோ வெயிட் குறைச்சேன். அப்புறம்தான் மாடலிங் வாய்ப்புகள் வந்துச்சு. அப்பவே 'அவன் இவன்’ படத்துக்காக பாலா சார்கிட்ட சான்ஸ் வாங்க அலைஞ்சுட்டு இருந்தேன். 'அவர் லேடி கான்ஸ்டபிள் கேரக்டருக்கு ஆள் தேடுறார். இவ்வளவு ஸ்லிம்மா இருக்குற உனக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்? கொஞ்சம் சதை போடணுமே’னு சொன்னாங்க. ஆனா, ஒரு வாரத்துக்குள்ள எப்படி வெயிட் போட முடியும்? தயக்கத்தோடுதான் பாலா சாரைப் பார்க்கப் போனேன். என்னைப் பார்த்ததுமே 'ஷூட்டிங் வந்துடு’னு சொல்லிட்டுப் போயிட்டார். ஸ்லிம் அழகுதான் அந்தப் பட வாய்ப்புக்குக் காரணம். ஆனா, நம்ம தமிழக ரசிகர்களுக்கு இவ்வளவு ஒல்லிப்பிச்சானா இருந்தா பிடிக்காதே! அதனால இப்போ வெயிட் போடணும்னு போராடிக்கிட்டு இருக்கேன். பலூன் மாதிரி ஆகிடுச்சு உடம்பு!''- சோழியை உருட்டிவிட்டது போலக் கலகலக்கிறார் ஜனனி.

''உடம்பைக் குறைக்கவோ கூட்டவோ சாப்பாட்டில் அக்கறை காட்டினால் போதுமா? பயிற்சிகள் தேவை இல்லையா?''

''பயிற்சிகள்தான் முக்கியம். ஆனால், சாப்பாட்டுக்கும் உடல்வாகுக்கும் தகுந்தபடிதான் பயிற்சிகள் இருக்கணும். ரொம்ப ஸ்லிம்மா இருக்கிற நான் இன்னும் எடை குறைக்கிற பயிற்சிகளைச் செஞ்சா எப்படி இருக்கும்? வாக்கிங் மாதிரி ஈஸியான, அதே நேரம் உடம்பை சுறுசுறுப்பாவும் ஃப்ளெக்ஸிபிளாவும் வெச்சிருக்குற பயிற்சிகள்தான் முக்கியம். ஏற்கெனவே ஸ்லிம்மா இருக்கிறவங்க உடம்பை வருத்திப் பயிற்சி எடுக்க வேண்டியது இல்லை.

நான் வாரம் ஒரு தடவை நீச்சல் அடிப்பேன். உடம்போட அத்தனை உறுப்புகளுக்கும் நீச்சலே போதுமான பயிற்சி கொடுக்கும். காலையில் இட்லி, மதியம் சாதம், ராத்திரி சப்பாத்தி... சராசரி மெனுதான் என்னோடதும். இப்போ சாப்பாட்டு அளவைக் கொஞ்சம் ஜாஸ்தி பண்ணி இருக்கேன். சில காய்கறிகளைப் பிடிக்கலைன்னாலும், எல்லா சத்தும் கிடைக்கணும்னு சாப்பிடுறேன். ஆனா, எல்லா பழங்களும் நல்லா சாப்பிடுவேன்.  உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கும். அதே சமயம், உடல் எடையும் அதிகரிக்காது. கொழுப்பு சம்பந்தப்பட்ட உணவைத் தவிர்த்துட்டு இருந்த நான், இப்போ அளவோடு கொழுப்புச் சத்து சேர்த்துக்குறேன்!

உடலைக் குண்டாக்கவும் ஒல்லியாக்கவும் ஒரே மருந்து தேன்தான். காலையில் பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் உடம்பு நல்லா சதை போடும். அதே நேரம் தேனை வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடம்பு ஸ்லிம் ஆகும். குண்டாக ஆசைப்படுற நான், தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிடுறேன்!''

''முகத்தை இன்னும் குட்டிப் பொண்ணு மாதிரியே வெச்சிருக்கீங்களே... பால்யம் மாறாத முகத்துக்கு என்ன ஃபாலோ பண்றீங்க?''

''முகத்துக்கு சோப் போட மாட்டேன். கெமிக்கல்ஸ் படுறப்பதான் முகத்தின் சாஃப்ட்டான சருமம் சீக்கிரமே முதிர்ச்சி அடைஞ்சிருது. பெட்டி பெட்டியா ஆரஞ்சு பழம் வாங்கிச் சாப்பிடுவேன். முகத்திலும் அடிக்கடி ஆரஞ்சு பழச்சாறு தேய்ச்சு, ஊறவெச்சுக் கழுவுவேன். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் விட்டமின் ஏ கண்களைக் குளிர்ச்சி யாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். வாரத்துக்கு இரண்டு தடவை முகத்தில் பாலாடை தேய்த்துக் கழுவுவேன்.

குளிர்ச்சி ப்ளஸ் தூய்மை. இதெல்லாத்தையும்விட, முகப் பொலிவுக்காகவே நிறையத் தண்ணீர் குடிப்பேன். ஒரு நாளைக்குக் குறைஞ்சது ஆறேழு பாட்டில் தண்ணி குடிப்பேன்!''

''தலைமுடியும் மினுமினுப்பா இருக்கே?''

''வாரத்துக்கு ரெண்டு தடவை நல்லெண்ணெயும் ஆலிவ் எண்ணெயும் கலந்து தலைக்குத் தேய்ச்சுக் குளிப்பேன். முடி உதிர்வது மாதிரி தெரிந்தால், எண்ணெய் அளவைக் கூட்டிக்குவேன். எண்ணெய் தேய்க்காமல், சரியாகத் தலை வாராமல் அப்படியே பறக்கவிடுறதுதான் இப்போ ஃபேஷனா இருக்கு. ஆனா, எனக்குத் தலையில் எண்ணெய்ப் பசை இல்லைன்னா பிடிக்காது. அதுக்காகவே தளும்பத் தளும்ப எண்ணெய் தேய்ச்சுத் தலை வாருவேன்!

எந்தக் கஷ்டமா இருந்தாலும், அது முதலில் பிரதிபலிப்பது முகத்தில்தான். சினிமா, மாடலிங்னு இருக்கிறவங்களுக்கு கவலையும் கோபமும் கூடவே கூடாது! உங்களுக்கு எதிரா செயல்படுறவங்களைப் பார்த்தாகூட பச்சக் குழந்தை மாதிரி சிரிங்க. சட்டுனு அவங்க தலைகுனிஞ்சிடுவாங்க. பக்குவத்துக்கும் உண்மைக்கும் கிடைக்கிற வெற்றி அதுதான்!''

- இரா.சரவணன், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
தேவை ஊட்டச்சத்தா? விழிப்பு உணர்வா?
மறுபடியும் மழலையாவோம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close