Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மறுபடியும் மழலையாவோம்!

டல் நலத்தைப் பேண சரியான பயிற்சி, முறையான பழக்கவழக்கம், சத்தான உணவு என வகைப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், மன நலனுக்கு? மனதை அடக்கியாண்டால் உலகையே கைகொள்ளலாம் என்கிறது இந்து சாஸ்திரம். அதேநேரம், 'மனம் ஒரு குரங்கு’ என ஆதிகாலம் தொட்டுச் சொல்லப்படும் கூற்றுக்களுக்கும் குறைவு இல்லை. மனதைப் பக்குவப்படுத்தும் பயிற்சி குறித்து சொல்கிறார் பிரபல மனநல மருத்துவர் அசோகன்.

 ''மனதில் தோன்றும் ஆசைகளை அடக்கவும், நெறிமுறைகளோடு வாழவும் ஆன்மிகமே சிறந்த வழி என்பார்கள். நல்ல சிந்தனை எதன் மூலமாக ஏற்பட்டாலும் அதனை வரவேற்பதுதான் மகத்தானது. மனம் தளரும்போதும், நிம்மதிக்காகத் தவிக்கும்போதும் நம்மை மீறிய சக்தி இருப்பதாக மனம் நினைக்கிறது. அந்த நம்பிக்கைதான் நம்மை நல்வழியில் நடத்துகிறது.

சமீபத்தில் ஒரு கண்டுபிடிப்பு மருத்துவ உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு இசைக்கருவியை மீட்டும்போது நம்மில் ஏற்படும் அதிர்வலைகளின் அளவைக் கண்டு பிடித்தார்கள். இசைக்கருவியை மீட்டாமல், அதை மீட்டுவதுபோல் மனதுக்குள் பாவித்தால் அதே மாதிரியான அதிர்வு அலைகள் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.  எதையாவது கற்பனை செய்துகொள்வதன் மூலமாகக்கூட நம் உடலுக்குள் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய ஆராய்ச்சி அது. மனம் எத்தகைய வல்லமை வாய்ந்தது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டியது இல்லை!'' எனச் சொல்லும் டாக்டர் அசோகன் தான் மேற்கொள்ளும் பயிற்சிகள் குறித்தும் சொன்னார்.

''உடல் நலத்தைப் பேணுவதைக் காட்டிலும் மன நலத்தைப் பேணுவது முக்கியமானது. மனம்தான் நம் உடலை ஆள்கிறது. அத்தகைய மனதுக்கு தெளிவையும் தீர்க்கத்தையும் உருவாக்கிக்கொடுக்க வேண்டியது நம் கடமை. இதற்காக மலையைத் தலையில் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண நடை பயிற்சி போதும். காலாற நடப்பவர்களை நீங்கள் கண்டிருக்கலாம். நான் தினமும் மனமார நடக்கிறேன். ஆழ்ந்த தியானத்தில் மூழ்குவது, பிடித்த மந்திரங்களை உச்சரிப்பது, மனதுக்குள் கற்பனைகளை விதைத்து அதனைப் பெருக்கிப் பார்ப்பது, ஒரு நல்ல நூலை ஆழ்ந்து வாசிப்பது என ஏதாவது ஒரு செயலில் மனதை ஈடுபடுத்தலாம். அதுதான் மனமார நடக்கும் பயிற்சி. கடிகார முள்ளைப் போன்றது மனம். அதனை ஒரு இடத்தில் கட்டி வைப்பது சாத்தியம் இல்லாதது. ஆனால், மனதின் வழியே பயணமானால் மனம் நம் வழியே நிச்சயம் வசமாகும்.

ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்கள் இறை வனைத் துதித்துப் பாடுவார்கள். இறைவனை மனதுக்குள் நேர்நிறுத்தி அவனிடம் நேரடியாகப் பேசுவதுபோல் பிரார்த்திக்கும்போது மனம் இலகுவாகிறது. 'என் கஷ்டங்களை எல்லாம் உன்னிடம் கொட்டிவிட்டேன்!’ என்கிற நிறைவு உண்டாகிறது.  மனநல மருத்துவத்தில் பகிர்தல் மூலமாகத்தான் முக்கால்வாசி பிரச்னைகள் சரிசெய்யப்படுகின்றன. 'காடு மலை தேடி வந்து கஷ்டத்தை சொல்லிப்புட்டேன்... வீடுபோய் சேர்ந்தபிறகு வெசனமத்து நான் கிடப்பேன்!’ என பழநி மலைக்கு பாத யாத்திரை செல்பவர்கள் பாடுவதைக் கேட்டிருக்கலாம். ஒருவரிடம் பகிர்ந்துகொள்வதன் மூலமாக நம் கஷ்டம் பாதியாகக் குறைகிறது. ஆன்மிகம் தொடங்கி மருத்துவ உலகம் வரை இதைத்தான் சொல்கிறது.

தினமும் குறைந்தது 15 நிமிடங்களை மனப் பயிற்சிக்காக ஒதுக்குங்கள். நல்ல காற்றில் அமைதியான சூழலில் தியானத்தில் அமருங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். அன்றைக்கு முழுக்க உங்களுக்குத் தேவையான தெளிவை அந்த 15 நிமிடங்கள் உங்களுக்கு நிச்சயம் தரும்!

நல்ல உணவு உடலை எப்படி சீராக வைத்திருக்கிறதோ... அதேபோல் நல்ல சிந்தனை மனதை சீராக உருவாக்குகிறது. பலவிதமான திட்டங்களோடு நம் இலக்குகளை நோக்கி நாம் ஓடுகிறோம். பலவிதமான அனுபவங்களையும் சந்தித்த பிறகு நமக்குள் ஒரு தெளிவு பிறக்கிறது. தண்ணீரின் மேல் மிதக்கும் தக்கையாக நம்மை உணர்கிறோம். தக்கையின் பயணத்தை தண்ணீரே தீர்மானிக்கிறது என்பது நமக்கு மிகத் தாமதமாகப் புரிகிறது!'' -மனதை இலகுவாக்க வழிசொல்லும் அசோகன் நிறைவாக இப்படிச் சொல்கிறார்.  

''நான் நிறையக் கற்றுக்கொண்டது என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் இருந்துதான். சிலர் தங்களின் மனக் கவலைகளைப் பற்றிச் சொல்லும்போது, அவர்களின் இடத்தில் அமர்ந்திருக்கவேண்டிய ஆள் நான்தான் என நினைப்பேன். அவர்களின் மனக்கவலைகள் அப்படியே என் மனநிலையைப் பிரதிபலிப்பவை போல இருக்கும். பாமரர் ஒருவர் என்னை சந்தித்தபோது, 'அடுத்தவங்க அண்டுற மாதிரி அனுசரணையான ஆளா இருக்கணும் சார்... ஒரு குழந்தையைக் கொஞ்சுறப்ப நாமளும் குழந்தையா மாறணும். 80 வயது தாத்தாங்கிற தோரணையில குழந்தையை மிரட்டினோம்னா, அது விலகி ஓடிடும்!’ எனச் சொன்னார். இன்றைக்கும் என் மனதுக்குள் அப்படியே ரீங்கரிக்கும் மந்திரம் இது. அடுத்தவர்களின் மனதுக்கு ஏற்றபடி நடந்துகொள்வதே மகத்தான குணம்.

சிறு வயதில் அணிந்த சட்டையை இள வயதில் நாம் தவிர்க்கிறோம். அதன் அளவு பொருந்தாது என்கிற புரிதல் நமக்கு ஏற்படுகிறது. உடையில் மட்டும் அல்ல... உள்ளத்திலும் அந்தப் புரிதல் ஏற்பட வேண்டும். எளிமை பழகி, எல்லாவற்றையும் ரசித்து, சின்னச் சின்ன சந்தோஷங்களில் சிலிர்த்து சாதாரண இலக்குக் கொண்ட ஆளாக இருப்பதில்தான் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கிறது. குழந்தையாகப் பிறந்து வயதான குழந்தையாக மாறுவதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது!''

- இரா.சரவணன்
படங்கள்: வி.செந்தில்குமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
''பெட்டி பெட்டியா ஆரஞ்சு... பாட்டில் பாட்டிலா தண்ணீர்!''
ஆண்கள்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close