Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அலர்ஜிக்கு தேவை அலர்ட் !

ரேவதி

வெயில் பட்டால் அலர்ஜி, தலைமுடிக்கு சாயம் பூசினால் அலர்ஜி, நகை அணிந்தால் அலர்ஜி, செருப்பு அணிந்தால் அலர்ஜி.... என உடுத்தும் உடை முதல், உண்ணும் உணவு வரை அத்தனையிலும் அலர்ஜி அலற வைத்துக் கொண் டிருக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அலர்ஜி வகைகள் மற்றும் அதிலிருந்து குண மாவதற்கான தீர்வுகள் குறித்து இங்கே விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல தோல் நோய் சிகிச்சை நிபு ணர் டாக்டர் செந்தமிழ் செல்வி....

 ஹேர் டை அலர்ஜி  (Hairdye dermatitis)

''நிறைய பெண்களுக்கு இளநரை தொல்லை இருக்கிறது. இதனை மறைக்க கலரிங், டை பயன்படுத்துகிறார்கள். அலர்ஜி உள்ளவர்கள் தங்கள் தலை முடிக்கு டை போட்டதுமே, வகிடு பகுதியில் அரிப்பு, சிவப்பாக பொரி பொரியாகத் தோன்றுதல்.... மாதிரியான அலர்ஜி அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிடும். முகம் கருமை படர்ந்ததுபோல் இருக்கும். 'ஹெர்பல் ஹேர் டை’ என்ற பெயரில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான டைகளில் மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்படுவதே இல்லை. அதுதான் பிரச்னைக்கு காரணம். மூலிகைகள் சேர்க்கப்பட்ட டையை அலசி ஆராய்ந்து வாங்குவது நல்லது. அல்லது 'லெஸ் பொட்டென்ஷியல் ஹேர் டை’ என்கிற பெயரில் கிடைக்கும் டைகளை பயன்படுத்தலாம். எந்த டையானாலும் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு முறை அலர்ஜி டெஸ்ட்

செய்து கொள்வது அவசியம்.

பொட்டு அலர்ஜி (Bindi Dermatitis)

நெற்றியில் வைத்துக் கொள்ளும் சாந்து, தரமற்ற குங்குமம் மற்றும் ஸ்டிக்கர் பொட்டில் உள்ள பசையினால் வரக்கூடிய அலர்ஜி இது. இதனால் நெற்றிப் பகுதி தோல் உரிந்து சிவப்பாகத் தடித்துவிடும். நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில், வாஸ்லின் (Contact Dermatitis)தடவி, அதன் மேலாக வீட்டில் உள்ள காபிப் பொடியை பொட்டு வடிவில், தொட்டு வைத்துக் கொள்ளலாம். அலர்ஜி பிரச்னை தீரும். கமகம காபி வாசனையோடு இருக்கும். வழக்கமாக இதேபோல் பொட்டு வைத்துக் கொள்ளலாம்.

கான்டக்ட் அலர்ஜி (Contact Dermatitis)                 

முகம், கை, கால்களில் உள்ள முடியை நீக்குவதற்காக பல்வேறு க்ரீம்களை பயன்படுத்துவதால் இந்த அலர்ஜி ஏற்படலாம். இந்த வகை க்ரீம்களில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களால் அலர்ஜி ஏற்பட்டு, தோலில் கோடு போட்டது போல் பொரி பொரியாக சிவந்து தடித்துப் போகும். நாளடைவில், அந்த இடம் வெள்ளையாகவே மாறிவிடும். இதை முழுமையாக சரி செய்யவும் முடியாது. எனவே உடனடியாக அந்த க்ரீம்களை தவிர்த்துவிடுவது தான் நல்லது.

மெட்டல் அலர்ஜி (Metal Dermatitis)

 

அழகழகாக மின்னும் சில நவீன வகை மெட்டல் நகைகளை அணியும்போது கை, கழுத்து, காது பகுதிகளில் அரிப்பு, கொப்பளங்கள் ஏற்படக்கூடும். இன்னும் சிலருக்கு தங்கம்கூட அலர்ஜியை ஏற்படுத்தும். இவர்கள் உலோகத்தால் ஆன ஆபரணங்களைத் தவிர்த்து, மர வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்களையோ, தோலினால் செய்யப்பட்ட நகைகளையோ பயன்படுத்தலாம்.

லெதர் அலர்ஜி (Leather Dermatitis)

கைக்கடிகாரப் பட்டை, செருப்பு, ஹேண்ட் பேக்... போன்ற தோல் பொருட்களும் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். இவர்கள், கைக்கடிகாரங்களில் தோல் பொருட்களுக்குப் பதிலாக உலோகத்தை  பயன்படுத்தலாம். காலுக்கு காட்டன் சாக்ஸ் அணிந்துகொண்டு செருப்பு அல்லது ஷூ அணிந்தால் அலர்ஜி தொல்லை இல்லை!

புற ஊதா கதிர் வீச்சு அலர்ஜி (Ultra violet Dermatitis)

சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால், மேல் புறத்தோலில் கொப்புளம், நிறம் மங்குதல், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். பவுடர், க்ரீம், மஞ்சள் போன்ற காஸ்மெட்டிக் பொருட்கள்... இந்த புற ஊதா கதிர்களை அதிகளவில் உட்கிரகிக்கும் தன்மை கொண்டவை. எனவே, அலர்ஜி உள்ளவர்கள் மேற்கண்ட பொருட்களை தவிர்த்துவிடுதல் நல்லது.

புற ஊதா கதிர் வீச்சால் ஏற்படும் அலர்ஜியை கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் தோல் சுருங்கி விரைவில் வயோதிகத் தோற்றத்தை ஏற்படுத்திவிடும். சன் ஸ்க்ரீன் லோஷன் போடுவதன் மூலம் இந்த அலர்ஜியை தடுக்கலாம். ஆனால், சன் ஸ்க்ரீன் அளவு எஸ்.பி.எஃப்-15க்கு மேல் இருக்க வேண்டும். பொதுவாக சன் ஸ்க்ரீன் லோஷன் 20 நிமிடத்துக்கு பிறகுதான் வேலை செய்யும். எனவே, வெயிலில் செல்வதற்கு 20 நிமிடத்துக்கு முன்பே லோஷனை தடவிக் கொள்ள வேண்டும்.

யுர்டிகேரியா (Urticaria)

தோலில் அங்கங்கே சிவப்பு நிற திட்டுக்களாக தோன்றும் ஒரு வகையான அலர்ஜி இது. சூரிய ஒளி படுகிற இடங்களில் எல்லாம் சிலருக்கு சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றும். உள்ளாடை நாடாவை இறுக்கிக் கட்டும் பகுதியில் தொடர்ந்து வியர்வை பட்டுக் கொண்டே இருப்பதாலும் இதுபோன்ற பாதிப்பு வரும். கம்பளிப் பூச்சி, மரவட்டை போன்ற பூச்சிகள் நம் மீது ஊர்ந்து செல்ல நேரிட்டாலோ, நாய் - பூனை போன்ற செல்லப் பிராணிகளின் சுவாசம் நம் தோல் மீது படுவதாலும்கூட அர்டிகேரியா பாதிப்பு வரும். இப்படி ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டியது அவசியம்.

உணவு அலர்ஜி (Food Dermatitis)       

  சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் உடம்பில் தடிப்பு, அரிப்பு ஏற்படும். அமிலம் மற்றும் காரத்தன்மை அதிகம் உள்ள காய்கறிகள் - பழங்களைச் சாப்பிடுவதாலும், ரசாயனப் பொருட்கள் கலந்த ஜூஸ், குறிப்பிட்ட சில பழங்களின் கொட்டைச் சாறு போன்றவற்றை அருந்துவதாலும் அலர்ஜி ஏற்படும். சாதாரண புளிக் கரைசல் சருமத்தில் படுவதாலும்கூட அலர்ஜி ஏற்படும். எனவே ஒவ்வாத பொருட்களை கையுறை அணிந்து கொண்டு தொடுவது நல்லது'' எல்லாவற்றையும் விவரித்து முடித்த டாக்டர் செந்தமிழ்செல்வி, நிறைவாக,

''இன்றையச் சூழலில், உணவுப் பொருட்களிலும் அழகுக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களிலும் அதிகளவில், ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. நம் உடம்பு ஏற்றுக்கொள்ளும் பொருட்களை முதலிலேயே தெளிவாகக் கண்டறிந்து பயன்படுத்தினால் எந்த அலர்ஜியும் அலறியடித்து ஓடிவிடும்! இதுதான் அனைவரும் மனதில் முதலில் ஏற்றிக் கொள்ள வேண்டிய முதல் பாடம்'' என்றார் அக்கறை பொங்க!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஸ்லிம் இடுப்புக்கு சிம்பிள் பயிற்சிகள் !
மோட்டார் : டூ வீலரை துரத்தும் 'வலி'கள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close