Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழைக்கால நோய்களுக்கு... மகத்தான தீர்வு!

ப்போதும் 'நசநச’வென தூறிக் கொண்டிருக்கும் மழை, சாக்கடையோடு கலந்து சாலைகளில் ஓடும் மழைநீர், வடியாமல் தேங்கி இருக்கும் தண்ணீரில் குடியிருக்கும் கொசுக்கள் என மழைக்காலத்தில் வியாதிகளை உண்டாக்குவதற்கான காரணிகள் எக்கச்சக்கம். இந்தக் காலத்தில்தான் பெயர் கூட தெரியாத நோய்கள் மனிதர்களைத் தாக்கி, ஏகப்பட்ட செலவுகளை இழுத்து வைக்கும். சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நோய்கள் வராமல் தடுப்பதோடு, உங்கள் பர்ஸுக்கும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார் சென்னை லைஃப்லைன் மருத்துவமனையின் பொது மருத்துவர் ராதாகிருஷ்ணன்.

 'காற்றின் மூலம் பரவக்கூடிய நோய்கள், தண்ணீர் மூலம் பரவக்கூடிய நோய்கள் என மழைக்கால நோய்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். புளூ காய்ச்சல், சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை காற்றின் மூலம் ஏற்படக்கூடியவை. ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்தக் காலத்தில் 'வீசிங்’ பிரச்னை அதிகமாக இருக்கும். ஹெபடைட்டிஸ், காலரா, டைபாஃய்டு போன்றவை தண்ணீர் மூலம் பரவக்கூடியவை. இவைதவிர, கொசுவினால் மலேரியா, டெங்கு போன்ற நோய்களும் உண்டாகலாம்.

இந்தக் காலத்தில் கழிவு நீரும், குடிநீரும் ஒன்றாகக் கலப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டாலோ, அளவுக்கு அதிகமாக மழை பெய்தாலோ இரண்டும் ஒன்றாகக் கலக்க வாய்ப்புள்ளது. இதனால், தண்ணீர் மூலம் அதிகமான நோய்கள் பரவும்.

தற்போது, தமிழ்நாட்டில்  லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் பரவலாகக் காணப்படுகிறது. எலியின் சிறுநீரில் இந்த கிருமி இருக்கும். அதில் நம்முடைய கால்பட்டால், தோல் வழியாக இந்த நோயைப் பரப்பும் கிருமி உடலுக்குள் நுழைந்துவிடும். இதுவும் மழைக்காலத்தில் தண்ணீர் மூலம் எளிதில் பரவுவதுதான்.

இன்றைக்கு எல்லா அலுவலகங்களிலும் ஏ.சி. தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. மழைக்காலத்தில், வெளியில் உள்ள குளிரும், ஏ.சி.யின் அதிகப்படியான குளிர்ச்சியும் சேர்ந்து ஜலதோஷத்தை உண்டாக் கலாம். அதனால்,  ஏ.சி.யின் தட்பவெப்ப அளவை தேவையான அளவு குறைத்துக் கொள்வது நல்லது.

வெளியில் செல்லும்போது காலில் தண்ணீர் படாதவாறு கனமான ஷூ அணிந்து செல்லலாம். கூடுமானவரை மழையில் நனையாமல் இருக்க வேண்டும். கையில் எப்போதும் குடையோ அல்லது மழைக்கோட்டோ வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை காய்ச்சி, ஆறவைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும். மழைக்காலத்தில் அதிகமாக வியர்க்காது. எனவே, குடிக்கும் தண்ணீரின் அளவை குறைத்துக்கொள்வோம். அது தவறு. வழக்கமாக எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அதே அளவு தண்ணீரை மழைக்காலத்திலும் குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் தங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறும்.

தினமும் நீண்டதூரம் பயணம் மேற்கொண்டு வீடு திரும்புகிறவர்கள், கூடவே வீட்டில் இருந்து உணவையும், தண்ணீரையும் எடுத்துச் செல்வது நல்லது. நீண்ட நாட்கள் பயணம் செய்பவர்கள் கண்ட கண்ட இடங்களில் சாப்பிடாமல், தரமான உணவுகளாகப் பார்த்துச் சாப்பிட வேண்டும். அதேபோல தண்ணீர் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தின்போது ஸ்வெட்டர், மப்ளர் போன்றவற்றை எடுத்துச் செல்வது அவசியம்.

கழிவுநீரோடு மழைநீரும் சேர்ந்து சாலைகளில் ஓடுவதால், வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் வெந்நீரால் கால்களை நன்கு கழுவி, ஈரம் போக நன்கு துடைக்க வேண்டும். அப்போதுதான் கிருமித்தொற்று ஏற்படாது. ஆடைகளைத் துவைத்து, நன்றாகக் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, உள்ளாடைகளைப் பொறுத்த வரை நன்கு காய்ந்தவற்றையே பயன்படுத்த வேண்டும். ஈரமான உள்ளாடைகளைப் பயன் படுத்தும்போது பூஞ்சைத்தொற்று ஏற்பட்டு, பிறப்புறுப்பில் புண், வலி, எரிச்சல், அரிப்பு ஏற்படலாம்.

நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள், சத்துமிக்க உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி பிரச்னை உள்ளவர்கள், சிட்ரஸ் பழங்களைத் தவிர்த்து, மற்ற பழங்களைச் சாப்பிடலாம். முடிந்தவரை அந்தந்த நேரத்துக்கு சூடாக சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது. சமைத்தபின் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பயன் படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.' என்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

மழையில் உங்க பர்ஸ் கரைந்து விடாமல் பார்த்துக்கங்க பாஸ்!

- சி. காவேரி மாணிக்கம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
காரில் பயணம்... உணவில் கவனம்!
''பற்களின் அஸ்திவாரம்... வருமானத்துக்கு ஆதாரம்!''
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close