Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதியோர்

முதுமையிலே இனிமை காண முடியுமே!

 ''முதுமை என்பதும் ஒரு பருவமே! எல்லா விஷயங்கள்லயும் எதிர்காலத்துக்குன்னு ஏதாவது ஒரு ஏற்பாடு செய்துவைக்கிற நாம, முதுமைக்கு மட்டும் ஏன் எதுவுமே செய்யறது இல்லை?'' என்று கேட்கிறார், முதியோர் மருத்துவ நிபுணர் டாக்டர் நடராஜன்.

இந்தியாவின் முதல் முதியோர் மருத்துவ நிபுணரான இவர், சென்னையில் நினைவாற்றல் மையம் ஒன்றை ஆரம்பித்து, முதியவர்களின் நினைவாற்றலை அதிகமாக்க சிகிச்சை அளித்து வருகிறார்.

'முதுமை ஒரு நோய் அல்ல. ஆனால், அந்தப் பருவத்தில் நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமா இருக்கு. எல்லா நோய்களையுமே வராம தடுக்க முடியும். இதுக்குப் பேர், ப்ரிவென்டிவ் ஜீரியாட்ரிக்ஸ். வயசானவங்களுக்கு வர வியாதிகளை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது. 'லேசா காஸ் ட்ரபிள் மாதிரி இருக்கு’னு சொல்வாங்க. இ.சி.ஜி. எடுத்துப் பார்த்தா, மாசிவ் ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்! முதியோர்களுக்குச் சிகிச்சை தருவதும் ரொம்பக் கஷ்ட மான விஷயம்! ஒரு வியாதிக்கு மருந்து கொடுத்தோம்னா, அது அவங்களுக்குப் பக்க விளைவுகளை ஏற்படுத்தி, வேற ஒரு நோய்க்குகாரணமாகிடும். அதனால, நோய் வந்த பிறகு அதுக்கு மருந்து சாப்பிடுறதைவிட, நோய் வராமல் தடுக்கிறது தான் புத்திசாலித்தனம். அதுக்கான சில டிப்ஸ் இங்கே தரேன்.

  45, 50 வயசுலயே நம்ம முதுமைக் காலத்தை சரியான முறையில ப்ளான் பண்ணணும். ஆரம்பத்துல ஆறு மாசத்துக்கு ஒரு முறைனு ஆரம்பிச்சு, வயசு ஏற ஏற மாசத்துக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஹெல்த் செக்-அப் பண்ணிக்கறது அவசியம்.

  வயசானதும் பசியும், ருசியும் குறைஞ்சுபோயிடறதால, சரியா சாப்பிட மாட்டாங்க. சாப்பாட்டோட அளவைக் குறைச்சுக்கிட்டாலும், அதுல இருக்கிற சத்துக்களோட அளவு குறையாம பார்த்துக்கணும். அரிசிக்குப் பதில் கேழ்வரகு, கோதுமை அதிகம் சேர்த்துக்கலாம். இதுல இருக்கிற கால்ஷியம் சத்து, எலும்புகளை வலுவாக்கும். கோதுமையில இருக்கிற நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கும். சுத்த சைவ உணவான காளானில் ஹை க்ளாஸ் புரோட்டீன் இருக்கு. கொஞ்சம் காளான் சாப்பிட்டாலே ஒரு கிலோ மட்டன், ஒரு கிலோ சிக்கன், ஒரு கிலோ மீன் சாப்பிட்டுக் கிடைக்கிற புரோட்டீன் சத்து கிடைக்கும்.

  ராத்திரி அதிகமா சாப்பிட்டுத் தூங்குறது ஹார்ட் அட்டாக்குக்கு வழிவகுக்கும். தூக்கத்துலயே சில பேர் இறந்துபோறதுக்குப் பெரும்பாலும் இதுதான் காரணமா இருக்கு.

  ஏதாவது ஒரு உடற்பயிற்சியைத் தினமும் செய்யப் பழகிக்கணும். யோகா, சைக்ளிங், ஸ்விம்மிங்னு எது வேணா செய்யலாம். குறைஞ்சபட்சம் வாக்கிங்காவது போகணும். இதனால எடை குறையும். ப்ளட் ப்ரஷர், ஷ§கர், கொலஸ்ட்ரால் எல்லாம் கட்டுப்படும். எலும்புகள் வலுவாகும்.

  முதுமையின் விரோதி தனிமை. அதைப் போக்க, தோட்டத்தைப் பராமரிக்கிறது போன்ற மனசுக்குப் பிடிச்ச ஏதாவது வேலைகள்ல நம்மை நாமே ஈடுபடுத்திக்கலாம்.

  கடைசியான, ஆனா ரொம்ப முக்கியமான விஷயம்... பணம்! கையில் இருக்கிற எல்லாப் பணத்தையும் நம்மோட பிள்ளைகளுக்குதானேன்னு கொடுத்திட்டு, ஒவ்வொரு விஷயத்துக்கும் அவங்களை எதிர்பார்த்திட்டு நிற்கக்கூடாது. அதனால, முதுமைக் காலத்துல நமக்குத் தேவையான பணத்தை நடுத்தற வயசுல இருந்தே சேர்த்து வெச்சுக்கணும்.

 இவை எல்லாம் முதியவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள். அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய இளைய தலைமுறை கவனத்துக்கு......

  முதியவர்கள் அதிகம் புழங்கற அறையில தரை ரொம்ப வழவழப்பா இல்லாம கொஞ்சம் சொர சொரப்பா இருக்கிற மாதிரி பார்த்துக்கணும்.

  தரை விரிப்புகள் இருக்கக் கூடாது. கால் தடுக்கிக் கீழே விழ வாய்ப்புகள் இருக்கு.

  படிக்கட்டுல ரெண்டு பக்கமும் கைப்பிடி இருக்கணும்.

  அறையில் எப்பவும் ஒரு லைட் பிரகாசமா எரியணும்.

  எப்பவும் வேலை வேலைனு அலையாம, வாரத்துல ஒரு நாள் அல்லது கொஞ்ச நேரமாவது பெரியவங்களோட சந்தோஷமா பேசிப் பழகலாம். இதனால, அவங்க மன அழுத்தம் குறைஞ்சு, ஆரோக்கியமா இருப்பாங்க.

 முதுமையையும் மற்ற பருவங்களைப் போல இனிமையானதா மாத்துற வித்தை நம்மகிட்டதான் இருக்கு'' என்கிறார் டாக்டர் நடராஜன்.

  - சி.திலகவதி, படங்கள்: பொன்.காசிராஜன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
குழந்தைகள் நலன்
பன்றிக் காய்ச்சல்: ஜோத்பூரில் ஒருவர் பலி
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close