வெயிலும் வியர்வையும்

 

வெயிலும் வியர்வையும் அதனால் ஏற்படும் உடல் துர்நாற்றமும்தானே இன்றைய தினத்தில் முக்கிய பிரச்னையே..! அதற்குத்தான் தீர்வு தருகிறார் சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணர் பிரசாத் விக்டர்.

''நம் உடலை தட்பவெப்ப நிலைகளில் இருந்து பாதுகாக்கவே வியர்வை சுரக்கிறது. வியர்க்காது போனால் நம் சருமம் உலர்ந்து தோலில் வெடிப்புகள் ஏற்படக் கூட வாய்ப்பிருக்கிறது. எனவே, வியர்வை நம் உடலுக்கு நன்மையே செய்கிறது என்பதை முதலில் மனதில் வையுங்கள்.

நம் உடலில் வியர்வை சுரக்கக் காரணமாக இருப்பது எக்ரைன் (eccrine gland) என்ற சுரப்பி. அதே போல, தோலின் எண்ணெய்ப் பசையை சீராக வைத்திருக்கும் வேலையை சபிஷியஸ் (sebeceous gland) என்ற சுரப்பி செய்கிறது.

இந்த இரண்டு சுரப்பிகள் தவிர எபோக்ரைன் என்ற சுரப்பியும் (apocrine gland) நம் உடலில் உண்டு. மனிதர்கள், விலங்குகள் என்று எல்லோர் உடலிலும் இந்த சுரப்பி உண்டு என்றாலும், மனித உடலில் பெரும்பாலும் இது செயல்படுவதில்லை. விலங்குகளின் உடலில் ஒருவித வாடையை வீசச் செய்து, எதிர் பாலினத்தை ஈர்ப்பதுதான் இந்த சுரப்பியின் வேலை. அரிதாக சில மனிதர்களின் உடலில் இந்த சுரப்பி செயல்படத் தொடங்கி விடுவதால் இயற்கையாகவே அவர்களின் வியர்வையில் துர்நாற்றம் வீசும்.

இந்தப் பிரச்னை இல்லாதவர்களுக்கும் உடல் துர்நாற்றப் பிரச்னை ஏற்படுவதுண்டு. அதற்குக் காரணம் பாக்டீரியா. எப்படி என்று பார்க்கலாம்..

சாதாரணமாக, நம் சுற்றுப்புறம் உஷ்ணமாகும்போது உடலில் வியர்வை பெருகும். இந்த வியர்வை, காற்று வீசுகையில் உலர்ந்து விடும். ஆனால், காற்றுப் புகாத உடல் பாகங்களிலும் ரோமம் அடர்ந்துள்ள பகுதிகளிலும் இந்த வியர்வை உலர்ந்து போகாமல் அப்படியே தங்கிவிடும். அந்த இடங்களில் பாக்டீரியாக்கள் பெருகுவதால் ஏற்படும் துர்நாற்றம்தான் அது.

காரணம் எதுவாக இருந்தாலும் உடல் துர்நாற்றப் பிரச்னைக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் கிடையாது. வேண்டுமானால், வியர்வை உடலில் தங்குவதை தவிர்க்கலாம்.

அதற்காக செய்ய வேண்டியவை:

அவ்வப்போது தேவையற்ற முடிகளை நீக்கி விடுங்கள்.

தினமும் இரண்டு வேளை குளியுங்கள்.

நிறைய தண்ணீர் குடியுங்கள்.

துர்நாற்றம் ஏற்படும் இடங்களில் ஆன்டி-பாக்டீரியல் கிரீம்களைத் தடவுங்கள்.

கடைகளில் கிடைக்கக்கூடிய டியோடரன்ட், பாடி ஸ்பிரே போன்றவை வியர்வை துர்நாற்றத்தைத் தடுப்பதற்காக அல்ல.. அது வெளியில் தெரியாமல் மறைப்பதற்காகத்தான்.

உங்கள் தேவை அதுதான் என்றால் தாராளமாக அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், பொதுவாக எந்த ஸ்பிரேயும் நேரடியாக சருமத்தில் பட்டால் நாளடைவில் அந்த இடம் கருமை அடையக் கூடும். எனவே, கவனம் தேவை.

காற்று போகிற அளவுக்குத் தளர்வான, காட்டன் உடைகளை மட்டுமே அணியுங்கள். சிந்தடிக் உபயோகித்தாலும் அவை காட்டன் லைனிங் உள்ளவையாக இருக்கட்டும். காட்டன்தான் வியர்வையை உறிஞ்சி, உடலை உலர்வாக வைக்கும்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick