Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!

இரா.சரவணன், படம் : சு.குமரேசன்

டடா வெயில்டா... அனல் வெயில்டா!

  வெயில் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது! வியர்வை, தாகம், அசதி என எதிர்வரும் நாட்களில் வெயில் விளையாட்டு 'சூடு பிடிக்க’த் துவங்கிவிடும். வெயிலின் உக்கிரத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

''நிறைவாக நீர் அருந்தினாலே போதும்!'' என்கிறார்கள் அனைத்துத் தரப்பு மருத்துவர்களும். பாரம்பரிய சித்த மருத்துவரான கே.பி.சுப்ரமணியன் இயற்கையான முறையில் தண்ணீரை உடலுக்குள் இயக்கும் 'ஏ.சி’-யாக மாற்றும் பக்குவத்தைச் சொல்லித் தருகிறார். ''வெயில் காலத்தில் உடலின் நீர் அளவு குறைவதால்தான் தாகம், மயக்கம், நீர்க்கடுப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள். அதைத் தவிர்க்க சாதாரண நாட்களைக் காட்டிலும், அதிக அளவில் நீர் அருந்தினாலே போதும். வெறும் தண்ணீராக மட்டுமே குடிக்காமல், இயற்கையிலேயே குளிர்ச்சியான பொருட்களைக் கலந்து பருகினால், வெயிலின் பாச்சா உங்களிடம் பலிக்காது.

தண்ணீர்ப் பானையில் வெட்டி வேர், விளாமிச்சை வேரைப் போட்டுவைத்தால், நல்ல குளிர்ச்சியும் வாசமும் கிடைக்கும். வெந்தயத்தை வறுத்து ஆறிய பிறகு, தண்ணீரில் போட்டுப் பருகினால், வெயிலால் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் உண்டாகும் புண்கள் குணம்அடையும். 'நன்னாரி உண்டால், பொன்னாகும் மேனி’ன்னு சொல்வாங்க. நன்னாரியின் நடுவில் இருக்கிற தண்டை நீக்கிவிட்டு, சிறு வேர்போல இருக்கும் பட்டையைத் தண்ணீரில் போட்டுவைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாக இருக்கும். எலுமிச்சம் பழத்தில் விரல் அளவுக்குத் துளையிட்டு, தண்ணீர் பானைக்குள் போட்டுவைத்துப் பருகினால் குளிர்ச்சிக்குக் குறைவு இருக்காது.

வெயில் காலத்தில் ஏற்படும் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்¬னகளுக்குத் தண்ணீரோடு துளசி அல்லது அதிமதுரம் சேர்த்துப் பருகலாம். இவற்றின் விலை அதிகபட்சம் அஞ்சு ரூபாயாக இருக்கும். உள்ளங்கையில் ஊட்டியும் கொடைக்கானலும் இருக்கும்போது எந்த வெயிலையும் சமாளிக்கலாம்!'' என்கிறார் உற்சாகமாக!

டயட்டீஷியன் ஷைனி சந்திரன் உடலின் புறத் தோற்றப் பராமரிப்பு குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

''வேலை செய்யும் சூழல், வெளியேறும் வியர்வையின் அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு தண்ணீர் அருந்தினால், வெயில் காலத் தொந்தரவுகளைத் தவிர்க்க முடியும். ரசாயனக் குளிர்பானங்களைத் தவிர்த்து, மோர், தர்பூசணி, இளநீர், ரசம் ஆகியவற்றை அருந்துங்கள். இது எதுவும் கிடைக்கப் பெறாதவர்கள், ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் அருந்தினாலே போதும். ஒரே மூச்சில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல், கொஞ்சங் கொஞ்சமாக அதிக முறை தண்ணீர் குடிப்பது நல்லது. விளையாட்டு வீரர்கள், அதிக வேலைப் பளுகொண்டவர்கள் தங்கள் சிறுநீரின் நிறத்தைப் பார்த்து, அதற்குத் தக்கபடி தண்ணீர் பருகலாம். சிறுநீர் இளமஞ்சள் நிறத்தில் இருந்தால், வழக்கமான அளவில் தண்ணீர் பருகலாம். அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், உடனடியாக அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். திரவ உணவுகளை அதிகப்படுத்துவதாகச் சொல்லி, சிலர் காபி, டீ ஆகியவற்றை அதிகமாகப் பருகுவார்கள். அது தவறு. தண்ணீர் மட்டுமே நமக்கான நீர் சமநிலையையும் சக்தியையும் கொடுக்கும். காபி, டீ, ஆல்கஹால் போன்ற மற்ற திரவங்கள் வேறு பல பிரச்னைகளை உருவாக்கவே செய்யும்.

வெயிலால் ஏற்படும் வியர்வை, வியர்க்குரு, அரிப்பு போன்றவற்றைத் தடுக்க குளியல்தான் ஆயுதம். வாரம் இரு முறை விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் உஷ்ணத்தை வெகுவாகக் குறைக்கும். தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகம் நிலவாத காலம் என்பதால், தண்ணீர் உபயோகத்தை அதிகப் படுத்தி, உடலை எப்போதும் குளிர்ச்சி யாக வைத்திருங்கள். கை, கால், முகத்தை அடிக்கடி நல்ல தண்ணீரில் கழுவினாலே, தோல் பாதிப்புகளை வருமுன் காக்க முடியும். வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறி, சிறுநீர் வெளியேறுவது குறைந்தால், நீர்க்குத்தல் ஏற்படும். அதிக அளவு தண்ணீர் பருகுவதுதான் அதைத் தவிர்க்க ஒரே தீர்வு!'' என்கிறார் எளிய மருத்துவமாக!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
குழந்தைகள்
இயற்கை தரும் இளமை வரம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close